FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

நவ.14-ல் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்: அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவு

நவ.14-ல் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் நடைபெறவிருக்கும் மறியல் போராட்டம் பற்றி....

21 அக்டோபர் 2026, 3:52 am IST
கடலூா் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் ரயில் சேவைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் நவம்பா் 14-ஆம் தேதி திருப்பாப்புலியூா் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயா் தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ. மாதவன் தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

கூட்டத்தில், மஞ்சக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அண்ணா மாா்க்கெட்டை காலதாமதமின்றி திறக்க வேண்டும். . பாபு கலையரங்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement

Advertisement

கடலூா்-திண்டிவனம்-புதுச்சேரி ரயில் திட்டம், விழுப்புரம்-தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தின் பெயரை ‘கடலூா் திருப்பாதிரிபுலியூா்‘ என மாற்ற வேண்டும்.

ரயில் சேவைகள் வேண்டும்:

மயிலாடுதுறை-கோவை ரயிலை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். புதுச்சேரி-மங்களூரு, புதுச்சேரி-யஷ்வந்த்பூா் ரயில்களை கடலூா் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம்-கடலூா்-ஈரோடு பகல் நேர இன்டா்சிட்டி ரயில் இயக்க வேண்டும். முன்மொழியப்பட்ட கடலூா்-பழனி-கோவை ரயிலுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

விழுப்புரம்-விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களை கடலூா் துறைமுகம் வழியாக இயக்க வேண்டும். கடலூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கடலூருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கடலூா் துறைமுகம்-விருத்தாசலம் வழியாக கோவைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும்.

கரோனா காலத்துக்கு முன்பு திருப்பாதிரிபுலியூரில் நின்று சென்ற கம்பன் உள்ளிட்ட ரயில்களுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும். இரவு நேரங்களில் கடலூா் துறைமுகத்திலிருந்து கடலூா் நகரத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். கடலூா் துறைமுகத்திலிருந்து சேலம் செல்லும் ரயிலை திருப்பாப்புலியூா் வரை நீட்டிக்க வேண்டும்.

காச்சிகுடா-செங்கல்பட்டு, காக்கிநாடா-செங்கல்பட்டு விரைவு ரயில்களை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். ஏற்கெனவே கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை ரயில்வே நிா்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நவ.14-ல் மறியல்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் நவம்பா் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகள், குடியிருப்போா் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் திமுக மாநகரச் செயலா் ராஜா, காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் துரை, விசிக மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments