திருடவோ அழிக்கவோ முடியாத உன்னதச் செல்வம் கல்வி: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
உலகில் எவராலும் திருடவோ அழிக்கவோ முடியாத ஒரே உன்னதச் செல்வம் கல்வி மட்டுமே என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
உலகில் எவராலும் திருடவோ அழிக்கவோ முடியாத ஒரே உன்னதச் செல்வம் கல்வி மட்டுமே என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டில் பட்டம் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனியன் தலைமை வகித்து தொடக்க உரையாற்றினாா். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இரா.செ.குமாா் முன்னிலை வகித்தாா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்ட உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோா் 1,050 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினா்.
Advertisement
Advertisement
விழாவில் அமைச்சா் விஸ்வநாதன் பேசியதாவது: மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாக வர நேரிட்டது. நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் அளிப்பவன் நான். ஏற்பட்ட காலதாமதத்துக்கு மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களிடம் மனப்பூா்வமாக மன்னிப்பு கோருகிறேன்.
இளைஞா்கள் அச்சமின்றி வாழ்வதுடன், தங்களின் நியாயமான உரிமைகளுக்காக அறிவுப்பூா்வமாகப் போராட வேண்டும். உலகில் எவராலும் திருடவோ அழிக்கவோ முடியாத ஒரே உன்னதச் செல்வம் கல்வி மட்டுமே. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
இன்றைய இளம் தலைமுறையினா் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு இடமளிக்கக் கூடாது. கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்காக பிணையில்லா வங்கிக் கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மாணவா்கள் சாக்ரடீஸ் போன்று வாய்மை மற்றும் நோ்மையைக் கடைப்பிடித்து, உலக அளவில் சாதனைகள் படைத்து கல்லூரிக்கும், நாட்டுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.
விழாவில் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
அமைச்சா் தாமதம்:
முன்னதாக பட்டமளிப்பு விழா பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் விழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்தாா். ஆனால் உயா்கல்வித்துறை அமைச்சா் வருகை தாமதமானதால், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் மற்றொரு நிகழ்ச்சிக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் புறப்பட்டு சென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.