சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்!
சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றி...
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்காடு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான ரசாயன மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையை ஒட்டிய பகுதியில் புதிதாக தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக சுமார் 450 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக குடிகாடு, நொச்சிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
சிப்காட் தொழில் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் அரசின் திட்டத்துக்கு எதிராக தியாகவல்லி, குடிகாடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட நொச்சிக்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்ப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நொச்சிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளக் கூடாது. நிலம் கையகப்படுத்தும் முன்பு சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துகளை முழுமையாகக் கேட்பதுடன், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடங்களை ஆய்வு செய்து தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை 165-ஐ ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து விவசாயி நாராயணசாமி கூறுகையில், “சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கத்தால் விவசாயிகள் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நெல், மணிலா, வெட்டிவேர் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் பறிபோகும் நிலையில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், விவசாய நிலங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகள், பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் மற்றும் விவசாயத்தைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். தொழில் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசாணை எண் 165-ஐ ரத்து செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதுடன், விவசாய நிலங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த நிலையில் மேலும் நிலம் கையகப்படுத்தி புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரிப்பதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும்” என்றார்.
Opposing the government's move to acquire land for a new industrial park in the area adjacent to the Cuddalore SIPCOT industrial estate, residents from the villages surrounding Nochikadu staged a protest by hoisting black flags at their homes and key locations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.