FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தவுள்ள நடவடிக்கைக்க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...

20 செப்டம்பர் 2026, 10:53 am IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தவுள்ள நடவடிக்கைக்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில்  ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும்,  என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக  கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நிலப்பறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2,625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1,119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு அப்பகுதிகளில், 1,097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவகான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி பிறப்பித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்  என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்கத் துடிப்பதை ஏற்க முடியாது.

புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75% பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1,283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை தவெக அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் ஒரகடத்தில் 3,157 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செய்யாறில் 2,937 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது  பெரிய சிப்காட் அமைந்துள்ளது. இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சிப்காட் 2,625 ஏக்கரில் கடலூரில் தான் உள்ளது. அத்துடன் 1,283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால்  3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில்தான் செயல்படும். இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல. மாறாக பேரழிவு ஆகும். இது கடலூருக்குத் தேவையில்லை.

அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், அங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன. இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி  நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மேலும் 1,283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும்.

அதுமட்டுமின்றி, சிப்காட் வளாகம் அமைக்கப்படுவதால் உழவர்கள் மற்றும் பொதுமக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. குடிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில்தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது. வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் உண்மையாகும். அதையும் தாண்டி, குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம்  மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.

முந்தைய திமுக ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதற்காவும், மதுரை பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்துவதாக இருந்தால், அதைத் தடுப்பதற்காக பதவி விலகவும் தயங்க மாட்டேன் என்று அப்போதைய முதல்வர் வீர வசனம் பேசினார். கடலூர் மாவட்ட மக்களின் நிலம் பறிக்கப்படுவதாக இருந்தால் மட்டும் வாய்மூடி மவுனமாகிவிடுவார். இப்போதைய முதல்வரோ பரந்தூர் மக்களுக்காக விமான நிலையத் திட்டத்தையே கைவிடுவார்; ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் நிலம் எடுக்க ஆணையிடுகிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம்,  என்.எல்.சி சுரங்கம் 1, 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

summary

PMK leader Anbumani Ramadoss condemned the move to acquire additional land for SIPCOT and the NLC mine on Sunday (Sept. 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments