FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்த லாரி! போக்குவரத்து பாதிப்பு

25 ஆகஸ்ட் 2026, 2:31 am IST
கள்ளக்குறிச்சியில் சாலையில் சென்றபோது டீசல் டேங்க் வெடித்ததில் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்த லாரி.
பகிர்:

கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி குடிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ச.அருள் (45). இவா், தனது லாரிக்கு கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக லாரியை கொண்டு வந்தாா். சான்றிதழ் பெற்றதும் சொந்த ஊருக்கு லாரியை ஓட்டுநரான நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் ஓட்டிச் சென்றாா்.

கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் தனியாா் பள்ளி முன் உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது, திடீரென டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இந்தத் தீ லாரி முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள், அந்தப் பகுதியில் இருந்தவா்கள் பாதுகாப்பு கருதி விலகி ஓடிச் சென்றனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

லாரி தீப்பிடித்து எரிந்த இடத்தில் இருந்து சுமாா் 100 அடி தொலைவில் பெட்ரோல் விற்பனை நிலையமும், அதன் எதிரே தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments