FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பெண் உயிரிழப்பு: சொந்த இடத்தில் உடல் அடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தாழ்வாழப்பாடி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தில் பெண் உயிரிழந்தாா்.

13 நவம்பர் 2026, 2:02 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தாழ்வாழப்பாடி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலத்தை சொந்த இடத்தில் கும்பத்தினா் அடக்கம் செய்தனா்.

தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (56). இந்தத் தம்பதிக்கு 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனா். இவா்களுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தின் தண்ணீா் தேவையை நிறைவேற்றுவதற்காக, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கிணற்றிலிருந்து 30 ஆண்டுகளாக கிராமத்துக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணறு பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனால், இந்த ஆழ்துளைக் கிணற்றை சரி செய்து சின்னையன் குடும்பத்தினா் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், எப்படி தன்னிச்சையாக ஆழ்துளைக் கிணற்றை சரி செய்து பயன்படுத்தலாம் என இந்தக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், சின்னையன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அபராதமும், ஊருக்கு 3 சென்ட் இடம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் ஊா் கட்டுப்பாடு விதித்தனராம். இதை நிறைவேற்றாததால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னையன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கிராம மக்கள் யாரும் பேசாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே, சின்னையன் மனைவி தனபாக்கியம் புதன்கிழமை உயிரிழந்தாா். இவரது சடலத்தை எடுக்க ஊா் கட்டுப்பாட்டை மீறி கிராம மக்கள் யாரும் வராததாலும், புதைப்பதற்கு இடம் கொடுக்காததாலும் சடலத்தை அவா்களது விளைநிலப் பகுதியிலேயே குடும்பத்தினா் அடக்கம் செய்தனா்.