தனியார் ஆலையில் தீ விபத்து
புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே தனியார் ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே தனியார் ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான துணிகளுக்கு கஞ்சி பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து மூலப்பொருள்களை வாங்கி வந்து கஞ்சி பவுடர் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனிடையே கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இத்தகவல் வெளியானதையடுத்து இரவு ஆலையை மூடி விட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆலையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவலாளி மற்றும் ஆலை நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வில்லியனூர், கோரிமேடு, பாகூர், திருபுவனை, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் ஆலையில் இருந்த உயர் ரக இயந்திரங்கள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சி பவுடர் உள்பட ரூ.6 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில் வட்டாட்சியர் மேத்யூ பிரான்சிஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வில்லியனூர் காவல் உதவி ஆய்வாளர் வேலையன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.