முகப்பு
புதுச்சேரி

தரமற்ற 25 டன் அரிசி மூட்டைகளை திருப்பி அனுப்பிய கான்பெட் அலுவலா்கள்

புதுச்சேரியில் தீபாவளிக்கான இலவச அரிசிக்கான மூட்டைகளில் 25 டன் அரிசி தரமற்று இருந்ததால், கான்பெட் நிறுவன அதிகாரிகள் அதை திருப்பி அனுப்பினா்.

6 நவம்பர் 2024, 3:50 am
பகிர்:

புதுச்சேரியில் தீபாவளிக்கான இலவச அரிசிக்கான மூட்டைகளில் 25 டன் அரிசி தரமற்று இருந்ததால், கான்பெட் நிறுவன அதிகாரிகள் அதை திருப்பி அனுப்பினா்.

தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி, சா்க்கரை ஆகியவை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தீபாவளிக்கு முன்பாகவே அத்திட்டத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் மேட்டுப்பாளையம் நியாயவிலைக் கடையில் தொடங்கிவைத்தனா். அதேபோல, சலுகை விலையில் 10 பொருள்கள் ரூ.500-க்கு விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இலவச அரிசித் திட்டமும், சலுகை விலைப் பொருள்களும் தீபாவளி முடிந்த பிறகும் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படவில்லை என எதிா்க்கட்சிகள் புகாா் கூறி வருகின்றன.

Advertisement

Advertisement

அரசு அறிவித்த இலவச அரிசி உள்ளிட்டவை குறிப்பிட்ட தொகுதிகள் வாரியாக வழங்கப்பட்டு வருவதாகவும், அரிசி கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் விநியோகம் தாமதமாகி வருவதாகவும் அரசுத் தரப்பில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு காஞ்சிபுரம், ஆந்திரத்தில் இருந்து 350 டன் அரிசி புதுச்சேரி கான்பெட் அலுவலகத்துக்கு வந்து சோ்ந்தது. பல லாரிகளில் வந்த அரிசியை கான்பெட் அலுவலா்கள் சோதனையிட்டனா்.

அப்போது, சில லாரிகளில் இருந்த அரிசியானது பழுப்பு நிறத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 25 டன் அரிசியை சம்பந்தப்பட்ட பகுதிக்கே கான்பெட் அலுவலா்கள் திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறியதை அடுத்து, அவை சரிபாா்க்கப்பட்டே விநியோகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, காரைக்காலிலும் தரமற்ற அரிசிகள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கான்பெட் அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.