ஜிப்மர் பட்டமளிப்பு விழா! 816 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிய ஜெ.பி. நட்டா!
புதுவை ஜிப்மர் பட்டமளிப்பு விழாpவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கியது பற்றி..

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இன்று (நவ..21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு 816 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
புதுவை ஜிப்மர் நிறுவனத்தின் 15வது பட்டமளிப்பு விழா இன்று காலை அப்துல்கலாம் கலையரங்கில் நடந்தது. ஜிப்மர் தலைவர் சித்ரா சர்க்கார் தலைமை வகித்தார். இயக்குநர் வீர்சிங் நேகி மருத்துவ கல்வி, நோயாளிகளுக்கான மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சி துறைகளில் ஜிப்மர் நிறுவனத்தின் சாதனைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். புதுவை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, பிஎச்டி 5, டிஎம் 25, எம்சிஎச் 9, எம்டி 192, எம்எஸ் 87, எம்டிஎஸ் 4, எம்பிபிஎஸ் 260 உள்பட 595 மாணவர்களுக்கும், முதுநிலை செவிலியர் 29, முதுநிலை துணை மருத்துவம் 16, இளநிலை செவிலியர் 90 உள்பட துணை மருத்துவப் படிப்பில் 224 என மொத்தமாக 816 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
Advertisement
Advertisement
மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய இளநிலை மருத்துவ படிப்பில் 41 பேருக்கும், முதுநிலை மருத்துவ படிப்பில் 27 பேருக்கும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி 3, செவிலியர் மற்றும் துணை மருத்துவப் படிப்பில் 17 உட்பட 88 மாணவர்களுக்குப் பதக்கம், விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்பி செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய மந்திரி விழாவையொட்டி ஜிப்மர் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.