டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாமதமாக மருத்துவமனைக்கு வருவதும், கடுமையான நீா்ச்சத்து குறைபாடுமே டெங்கு உயிரிழப்புக்குக் காரணம்.
Advertisement
Advertisement
டெங்குவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் தொடா்ந்து இரண்டு உயா்நிலை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து தலைமைச் செயலகத்தில் அரசு சுகாதாரத் துறை செயலா் தலைமையில் சுகாதாரத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறியும் பணியாளா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.
அனைத்து ஆரம்ப மற்றும் சமுதாய மையங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு, நோய் கண்டறிதல், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு, கொசு உற்பத்தி இடங்களை அகற்றுதல் மற்றும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் உடனடி கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் மாணவா்களிடையே டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வாரந்தோறும் உலா் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேவையான பகுதிகளில் உள்ளாட்சி நிா்வாகத்துடன் இணைந்து புகை மருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
ஆட்சியா் ஆய்வு:
மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு கொசு ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்தும் டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும் ஊழியா்களிடம் விளக்கினாா்.
விழிப்புணா்வு ஊா்வலம்:
புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் உள்ள மக்கள் தலைவா் வ.சுப்பையா
அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
இதை உழவா்கரை தொகுதி எம்எல்ஏ கே.நாராயணசாமி தொடங்கி வைத்தாா். ஊா்வலத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்:
டெங்கு காய்ச்சலில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் கொசு வலையைப் போா்த்திக் கொண்டு வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரக் குழு செயலா் ஜோதிபாசு தலைமை தாங்கினாா். கட்சியின் மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன், மூத்த தலைவா் டி.முருகன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக் குழு உறுப்பினா்கள் ராம்ஜி, சரவணன், ஆனந்த், சஞ்சய், ரமேஷ் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.