வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பூங்கா பகுதியில் உரக் கிடங்கு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரியக் குடிருப்புப் பூங்கா பகுதியில் நகராட்சி உரக்கிடங்கு மையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரியக் குடிருப்புப் பூங்கா பகுதியில் நகராட்சி உரக்கிடங்கு மையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் விற்பனை செய்யப்பட்ட மனைப் பிரிவில் மனைகளை வாங்கி வீடு கட்டி, 200 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீட்டு வசதி வாரியத்தால் இந்தக் குடியிருப்புகளுக்கு மையத்தில், விளையாட்டு மையம் மற்றும் பூங்காவுக்கான காலியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விளையாட்டுப் பூங்காவுக்கு ஒதுக்கியிருந்த இடத்தில், நகராட்சி சார்பில் குப்பைக் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்து பணிகளைத் தொடங்கி உள்ளனர். தாழ்வான தண்ணீர் தேங்கும் பகுதியான குடியிருப்புகளுக்கு மையப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்.
இதனால் இங்குள்ள குடிநீர் கிணறும், விளையாட்டுப் பூங்கா இடமும் பெரிதும் பாதிக்கப்படும். இதனருகே ஆரம்ப சுகாதார நிலையம், நவதுர்கா கோயில், தியான மையம் ஆகியவை உள்ளன.
இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகளை செய்ய முன்வராத நகராட்சி நிர்வாகம், விளையாட்டு பூங்காவுக்கான இடத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க முனைப்பு காட்டுவது கண்டிக்கத் தக்கதாகும். இதற்கு மாற்றாக, அருகே உள்ள தாமரைக்குளம், அயனம்பாளையம் சாலை போன்ற காலியிடங்களில் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடமும், நகராட்சி ஆணையரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.