விழுப்புரம் நூலகங்களிலிருந்து 1,797 சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம்!
நூலகங்களிலிருந்து நீக்கப்பட்ட 1,797 சர்ச்சை நூல்கள் பற்றி..
தமிழகத்தின் 2 சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 1,797 போலி நூல்கள் விழுப்புரம் மாவட்ட நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார். அகல் விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களிலிருந்து அடையாளம் தெரியாத எழுத்தாளர்களின் பெயர்களில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து இந்த இரு பதிப்பகங்கள் மூலமாக மாவட்ட நூலகத்துக்கும், கிளை நூலகங்களுக்கும் பல்வேறு தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட நூல்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி 2025-26 ஆம் நிதியாண்டில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் (ஒருங்கிணைந்தது) பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 81 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 880 நூல்கள் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதுபோன்று 2026 -27 ஆம் நிதியாண்டில் பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 37 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 249 நூல்களும், அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து 46 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 688 நூல்களும் திரும்பப் பெறப்பட்டன. இந்த நூல்கள் மாவட்ட மைய நூலகத்திலேயே உள்ளன. எந்த நூலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை. மொத்தமாக 1,797 நூல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட நூலக வட்டாரங்கள் தெரிவித்தன.