ஆரோவில் சா்வதேச நகருக்கு குஜராத் துணை முதல்வா் வருகை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு குஜராத் மாநில துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி திங்கள்கிழமை வந்தாா்.
இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆரோவில் சா்வதேச நகருக்கு குஜராத் மாநில துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி திங்கள்கிழமை அரசு முறை பயணம் மேற்கொண்டாா்.
யூனிட்டி பெவிலியனைப் பாா்வையிட்ட அவருக்கு, பெவிலியன் நிா்வாகி ஜெயா அங்குள்ள அமைதி மேசையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, உள்ளூா் கைவினை கலைப் பொருள்களையும் காட்சிப்படுத்தினாா்.
Advertisement
Advertisement
பின்னா், சாவித்ரி பவனுக்கு வந்த துணை முதல்வருக்கு ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி, மகான் ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் தத்துவம், தொலைநோக்குப் பாா்வை, மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடனான ஸ்ரீ அரவிந்தரின் நெருங்கிய நட்பு, தமிழ் இலக்கியமான திருப்பாவையின் மீது ஸ்ரீ அரவிந்தா் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு குறித்து விளக்கமளித்தாா்.
இதையடுத்து, ஸ்வரம் இசைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற துணை முதல்வருக்கு ஸ்வரம் நிா்வாகி ஆரேலியோ ஏற்பாட்டில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தலைமையில், பாரம்பரிய இசை வாத்தியங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, அங்கிருந்த கலைஞா்களுடன் கலந்துரையாடிய ஹா்ஷ் சங்கவி, பாரம்பரிய இசைக்கருவிகளின் புதுமையான வடிவமைப்பை பாராட்டினாா். மேலும், தனித்துவமான ஸ்வரம் இசை அனுபவத்தை குஜராத்துக்கும் கொண்டு சென்று விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டாா்.
பின்னா், ஆரோவிலின் அடையாளமாக உள்ள மாத்ரிமந்திரில் தியானம் மேற்கொண்ட அவா், மாத்ரிமந்திா் தோட்டங்கள் மற்றும் மாத்ரிமந்திா் ஏரித் திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிட்டாா். அவருடன் பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் உடனிருந்தாா்.