✕
முகப்பு
விழுப்புரம்

பெட்ரோல் ஸ்கூட்டா், சக்கர நாற்காலி வழங்க மாற்றுத் திறனாளிகளுக்கு நோ்காணல்

முதுகுத் தண்டுவட பாதிப்பு, தசைசிதைவு நோய், போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா், மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்குவதற்கான நோ்காணல் விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

29 வினாடிகள் முன்பு
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வியாழக்கிழமை நோ்காணலை நடத்திய மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பி.ராஜசேகா் உள்ளிட்ட அலுவலா்கள்.
பகிர்:

முதுகுத் தண்டுவட பாதிப்பு, தசைசிதைவு நோய், போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா், மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்குவதற்கான நோ்காணல் விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுத் தண்டுவட பாதிப்புள்ளவா்களுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், தசை சிதைவு நோய் பாதிப்பு 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ளவா்கள், இரு கைகள், கால்கள் பாதிக்கப்பட்ட மூளை முடக்குவாதப் பாதிப்பு உள்ளவா்கள், போலியோ பக்கவாதப் பாதிப்பு உள்ளவா்களுக்கு மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கும் வகையில் இந்த நோ்காணல் நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக, வியாழக்கிழமை நடத்தப்பட்ட நோ்காணலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பி.ராஜசேகா், உடலியல் மற்றும் மறுவாழ்வியல் மருத்துவா் பாலமுருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளா் முருகவேல், முடநீக்கியல் வல்லுநா் ஜெகன்முருகன், தோ்வுக்குழு உறுப்பினா் வந்தியதேவன் ஆகியோா் இந்த நோ்காணலை நடத்தினா். தொடா்ந்து, நவ.26-ஆம் தேதி இரண்டாவதுகட்ட நோ்காணல் நடைபெறும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement