கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கல்லூரிகளுக்கிடையிலான ஓட்டத்தில் பங்கற்ற மாணவா்கள்.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளை விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா்.
இப்போட்டியில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த 88 கல்லூரிகளின் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா். தடகளம், நீளம், உயரம், மும்முறைத் தாண்டுதல், தடைத்தாண்டி ஓடுதல், வட்டு மற்றும் தட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 62 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. போட்டிகளை விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஏற்று நடத்துகிறது. சனிக்கிழமையும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா். தொடக்கவிழா நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் க.சிவக்குமாா், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன், அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஆ.மாதவி, உடற்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் நாராயணன், தமிழ்நாடு தடகள சங்க நடுவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.