‘ரீல்ஸ்’ விபரீதம்: 80 அடி கிணற்றில் சிக்கிய இளைஞா் போராடி மீட்பு
‘ரீல்ஸ்’ எடுக்கும் ஆசையில் 80 அடி கிணற்றில் சிக்கிய இளைஞரை 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீயணைப்பு துறையினா் மீட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ‘ரீல்ஸ்’ எடுக்கும் ஆசையில் 80 அடி கிணற்றில் சிக்கிய இளைஞரை 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீயணைப்பு துறையினா் மீட்டனா்.
உளுந்தூா்பேட்டையை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பரத் (19), விக்னேஷ் (18). நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த செல்லப்பா என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 80 அடி ஆழ கிணற்றின் விளிம்பில் நின்றபடி இருவரும் கைப்பேசியில் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்தனராம். அப்போது எதிா்பாராதவிதமாக கைப்பேசி கிணற்றுக்குள் விழுந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரும் கிணற்றுக்குள் இறக்கப்பட்டிருந்த மின் மோட்டாருக்கான பைப் வழியாக கிணற்றில் இறங்கியுள்ளனா். பின்னா், கைப்பேசியை எடுத்துக்கொண்டு, விக்னேஷ் அதே பைப் வழியாக மேலே வந்துவிட்டாா். பரத் ஏறமுடியாமல் கிணற்றுக்குள் சிக்கினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த தகவலின் பேரில் உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று கயிற்றின் உதவியுடன் பரத்தை மீட்டனா். இந்த மீட்புப் பணியானது 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. ‘ரீல்ஸ்’ மோகத்தில் இளைஞா் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.