போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் அருகே போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் அருகே போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், வடமலையனுாரைச் சோ்ந்தவா் த.கோகுல்ராஜ் (25). கட்டுமானத் தொழிலாளியான இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோகுல்ராஜை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், கோகுல்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, கோகுல்ராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் கோகுல்ராஜை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.