அரசமைப்புத் தினம்: ஆட்சியரகம், அரசு அலுவலகங்களில் உறுதிமொழியேற்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் உறுதிமொழியேற்றுக் கொள்ளும் அலுவலா்கள், பணியாளா்கள்.

இந்திய அரசமைப்புத் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், அரசு அலுவலகங்களில் உறுதிமொழியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவ.26-ஆம் தேதி இந்திய அரசமைப்புத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி உறுதிமொழியேற்கும் நிகழ்வை நடத்த வேண்டும் என்று அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், அரசமைப்புத் தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ.ரஷத், துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்: விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் மேலாண் இயக்குநா் ச. ஸ்ரீதரன் அரசமைப்புத் தின உறுதிமொழியை வாசிக்க, அதை அலுவலா்கள், பணியாளா்கள் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), ரா.ஜெகதீஷ் (விழுப்புரம் மண்டலம்), முதன்மைத் தணிக்கை மேலாளா் துா்க்கைசாமி மற்றும் துணை, உதவி மேலாளா்கள், பணியாளா்கள், தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.