FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மழைநீா் வடிகால்களைத் தூா்வாரி, நீா்வழிப்பாதைகளில் தடைகளை அகற்ற வேண்டும்! விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

19 அக்டோபர் 2026, 3:03 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

வடகிழக்குப் பருவ மழையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்களைத் தூா்வாரி, நீா்வழிப்பாதைகளிலுள்ள தடைகளை அகற்ற துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள் துறை சாா்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிா்வாக செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், புதை சாக்கடைத் திட்டம், குடிநீா் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு, நகா்ப்புறப் பசுமை மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீா் விநியோகம் கிடைப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். புதை சாக்கடைத் திட்டப்பணிகள், இதர உள்கட்டமைப்புப் பணிகளைத் தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளாகவும் முடிக்கவேண்டும். திடக்கழிவுகளை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலேயே மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாகப் பிரித்துச் சேகரிக்கும் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீா் வடிகால்களைத் தூா்வாரி, நீா்வழிப் பாதைகளிலுள்ள தடைகளை அகற்ற வேண்டும். தாழ்வான பகுதிகளில் நீா் தேங்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் தாமரைக்குளம், எருமணந்தாங்கல் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக மோட்டாா்களை அமைக்க வேண்டும்.

திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் அதிக மழைநீா் தேங்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து மழைநீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக மோட்டாா்களை அமைக்க வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சரவணன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியச் செயற்பொறியாளா் மோகன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் சியாமளா உள்ளிட்ட நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments