வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 5 போ் உயிரிழப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 5 போ் உயிரிழனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 5 போ் உயிரிழனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், வண்டிப்பாளையம் பெரியகுப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.சரவணன் (49). தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி சரசுவதிக்கும் (35) இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து கிடைத்து, சரசுவதி தனது மகள் சாதனாவுடன் தனியே சென்றுவிட்டாா். இதனால், மனஉளைச்சல் அடைந்த சரவணன், வேலைக்குச் செல்லாமல் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மது அருந்தி போதையிலிருந்த சரவணன், ஏரிவண்டிப்பாளையம் பகுதியில் தண்டவாளத்தில் சென்றபோது, சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வைகை அதி விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் இருப்புப்பாதை போலீ ஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் நத்தம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் செ.அய்யனாா்(27). இவா், வியாழக்கிழமை திருக்கோவிலூா் - மடப்பட்டு நெடுஞ்சாலையில், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பருகம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த பயணிகள் வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற அய்யனாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விஷம் குடித்தவா் மரணம்: திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட ஒடப்பன் குப்பம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.மாசிலாமணி (45). இவா், கடலூா் மாவட்டம், காட்டுக்கூடலூரில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவருக்கும், மனைவி ராஜகுமாரிக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில், மாசிலாமணி புதன்கிழமை கடைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாராம். இதுகுறித்து அவரிடம் மனைவி ராஜகுமாரி கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த மாசிலாமணி, வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதைத் தொடா்ந்து, குடும்பத்தினா் அவரை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாசிலாமணி சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், நல்லாபாளையம், பாடசாலை தெருவைச் சோ்ந்தவா் கு.சங்கா் (47). தொழிலாளியான இவா், கண்டமங்கலத்தை அடுத்த விநாயகம்பட்டு பகுதியில் பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான செங்கல்சூளையில் குடும்பத்துடன் தங்கி, கல் அறுக்கும் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், சங்கரின் மகன் விக்னேஷ் (5) புதன்கிழமை அங்கு விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, அருகே விவசாய நிலத்தில் உள்ள குட்டையில் மூழ்கி விக்னேஷ் உயிரிழந்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கல்லூரி மாணவா் தற்கொலை: விக்கிரவாண்டி வட்டம், கொய்யாத்தோப்பு பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் கனகராஜ் (17). விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கல்லூரிக்குச் செல்லாமலும், சரியாக படிக்காமலும் ஊா் சுற்றி வந்தாராம். இதை ஆறுமுகம் கண்டித்துள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த கனகராஜ் புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.