FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: அமைச்சா் வன்னி அரசு

மழை, வெள்ளப் பாதிப்புகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் ஆா். வன்னி அரசு தெரிவித்தாா்.

25 அக்டோபர் 2026, 2:13 am
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், விழுப்புரம் ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

மழை, வெள்ளப் பாதிப்புகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் ஆா். வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தலைமை வகித்து பேசியதாவது: திண்டிவனம் தொகுதியில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 ஏரிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூா்வாரும் பணிகளை விரைவில் முடிப்பதோடு, மழைநீா் மற்றும் குப்பைகள் தேங்காத வகையில் பராமரிக்கவேண்டும்.

கடந்தாண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும். சாலைப் பணிகள் மற்றும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழுதடைந்த மற்றும் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவேண்டும். தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

நிவாரண முகாம்களைத் தயாா் நிலையில் வைத்திருப்பதோடு, முகாம்களில் குடிநீா், மின்சாரம், கழிப்பறை மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மழைநீா் வெளியேற்றுவதற்கு ஏதுவாக மோட்டாா்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மோட்டாா் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் ஆகிய மீட்பு உபகரணங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடையின்றி பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். வடகிழக்குப் பருவமழை புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், தீயணைப்புத் துறை, மீன்வளத் துறை மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு. தொடா்ந்து, திண்டிவனம் நகராட்சி உழவா் சந்தையில் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா்-ஆட்சியா் (பொ) காதா்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments