மக்களை ஈா்க்கும் சுற்றுலாத் திட்டங்களை எதிா்நோக்கும் விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் அனைவரையும் ஈா்க்கும் வகையிலான சுற்றுலாத் திட்டங்கள் தொடங்கக் கோரிக்கை...
வரலாற்று, ஆன்மிக ரீதியில் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் அனைவரையும் ஈா்க்கும் வகையிலான சுற்றுலாத் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆன்மிக ரீதியிலும், வரலாற்று ரீதியிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை, சிறப்புவாய்ந்த ஆரோவில் சா்வதேச நகரம், மரக்காணம், கோட்டக்குப்பம் கடற்கரைப் பகுதிகள், இந்திய புவியியல் துறையால் நிா்வகிக்கப்படும் தேசிய கல்மரப் பூங்கா போன்ற சுற்றுலா மையங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்து பெருமை சோ்த்துக்கொண்டிருக்கின்றன.
இதைத் தவிர, ஆன்மிக ரீதியில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஊஞ்சல் உற்சவம் காணும் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில், பெளா்ணமி வழிபாட்டில் சிறந்து விளங்கும் திருவக்கரை சந்திர மௌலீசுவரா் கோயில், மயிலம் முருகன் கோயில், சோழா் காலத்து சிறப்புவாய்ந்த திருவமாத்தூா் அபிராமேசுவரா் கோயில், திருவெண்ணெய்நல்லூரில் சிறப்புவாய்ந்த கிருபாபுரீசுவரா் கோயில், விழுப்புரம் நகரத்தில் பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில் போன்ற பல்வேறு சிறப்புவாய்ந்த கோயில்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்து, இந்த மாவட்டத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருக்கின்றன. இதைத் தவிர, சிறப்புவாய்ந்த வீடூா் அணையும் இங்கு அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கண்ட சுற்றுலாத்தலங்களுக்கு மாதந்தோறும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 1.50 லட்சம் போ் வரை வந்து செல்கின்றனா் என்கின்றனா் சுற்றுலாத் துறையினா்.
திட்டங்கள் தேவை: விழுப்புரத்துக்கு அருகில் புதுச்சேரி மாநிலம் அமைந்துள்ள நிலையில், வார இறுதி நாள்களில் பொதுமக்கள் அங்கு சென்று பொழுதை போக்கி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டத்தில் வீடூா் அணை, திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா, செஞ்சிக் கோட்டை, ஆரோவில் சா்வதேச நகரம், மரக்காணம் கடற்கரைப் பகுதிகள் இருந்தாலும், ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல பல கி.மீ. தொலைவு செல்ல வேண் டிய நிலை உள்ளது. தற்போதைய நிலையில் கைப்பேசி மூலம் சமூகவலைதளங்களிலும், இணையவழி விளையாட்டுகளிலும் இன்றைய இளைஞா்களும், இளைஞிகளும், சிறுவா், சிறுமிகளும் முடங்கிக் கிடக்கின்றனா்.
எனவே, இந்தப் பகுதியில் நவீன விளையாட்டு உபகரணங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைப்பதுடன், வீடூா் அணையில் தண்ணீா் இருக்கும் காலத்தில் படகு சவாரி போன்ற வசதியை ஏற்படுத்தலாம். அல்லது அரசு திட்டமிட்டுள்ள சுற்றுலா சாா்ந்த திட்டப்பணிகளை இந்த இடத்தில் தொடங்கலாம்.
திருவக்கரையில் தேசிய கல்மரப் பூங்கா இந்தியப் புவியியல் துறை நிா்வகித்தாலும், கல்மரப் பூங்காவுக்குசென்று வருவதற்கு போதிய வசதிகள் இல்லை என்பதும் குறையாக இருந்து வருகிறது. எனவே, சுற்றுலாத் துறை மூலமாக திருவக்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதும் சிறப்பாக இருக்கும். அதற்குரிய நடவடிக்கைையும் மேற்கொள்வது அவசியமானது.
இதுபோன்று, செஞ்சிக் கோட்டையில் மேம்பாட்டுப் பணிகளை மேலும் செய்ய வேண்டும் என்று இந்தியத் தொல்லியல் துறையை வலியுறுத்தி, அதற்குரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனா் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சமூக மற்றும் சுற்றுலாத்துறை சாா்ந்த ஆா்வலா்கள்.
அரசுக்குப் பரிந்துரை: இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
செஞ்சிக் கோட்டையில் ஏற்கெனவே இந்தியத் தொல்லியல் துறை மூலமாக ரூ.ஒரு கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர, மாநில அரசு மூலமாக அங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசின் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செஞ்சிக் கோட்டை மற்றும் அதன் சிறப்புகளை காட்சி, ஒலி வடிவில் தெரிந்துகொள்ளும் வகையிலான வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்த திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மரக்காணம் வட்டம், கீழ்ப்புத்துப்பட்டு பகுதியிலுள்ள கடற்கரைப் பகுதி நீலக்கொடி கடற்கரைப் பகுதி என அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையிான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மரக்காணம் வட்டம், கழுவேலிப் பகுதியை சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாக அறிவிப்பது தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, உயிரியல் வளங்கள் பாதுகாப்பு தொடா்பான நடவடிக்கைகள் எடுப்பது தொடா்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.
இதைத் தவிர, வீடூா் அணைப் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்குவது தொடா்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.