முகப்பு
ஜோதிடம்

வார பலன்கள் (மே 8 - 14) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு போனஸ்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

Updated On : 8 மே 2026, 1:02 pm IST
ஜோதிடம் - DPS
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 8 - 14) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்ல முறையில் நடக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்து, அதற்கேற்ற பலனைப் பெறுவீர்கள்.

Advertisement

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சஞ்சலங்கள், குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்போடு நடந்து கொள்வார்கள்.

வியாபாரிகளுக்கு வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வசூலாகும். விவசாயிகள் வயல்வரப்பு பிரச்னைகளில் முடிவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் சில விஷயங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினர் ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

பெண்கள் கணவரின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் தேவையான அறிவுரைகளை வழங்குவர். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் நெருக்கடியான பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய யுத்திகளைச் செயல்படுத்துவீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்தினரிடம் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 8, 9, 10.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் மேம்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு கணவருடனான உறவு சுமாராக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 11, 12.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் நினைத்தபடி முடியும். அன்னை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் எதிர்பார்த்த நிலையில் இருக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள்.

விவசாயிகளுக்கு பழைய குத்தகைப் பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு விருது பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

பெண்கள் யோசித்துப் பேசி நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் கடுமையாகப் பயிற்சி செய்து, தடைகளை மீறி வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 13, 14.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சிறிய தடைகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். பொருளாதார நிலைமை சீராகும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும்.

பெண்கள் குடும்பப் பொருளாதாரம் உயரக் காண்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். குடும்பப் பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையான பணிகளையும் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் முயற்சிகளில் பின்வாங்காமல் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் குழப்பமான சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் கவனத்துடன் பணியாற்றுவீர்கள்.

பெண்கள் கணவரின் ஆதரவினால் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உற்றார், உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத போனஸ் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசனத்துக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கும்.

அரசியல்வாதிகள் போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் உணர்ச்சிவசப்படாமல் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் பயிர்களில் புழு, பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு மேன்மை உண்டாகும். பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேவைக்கேற்ற வருமானம் வந்துகொண்டிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிறப்புகளைக் காண்பீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திரும்பச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையாகப் பழகுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத வருமானத்தைப் பெறுவீர்கள்.

பெண்கள் ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் நட்பாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். குடும்பத்துடன் கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றம் செய்ய எண்ணங்கள் வலுப்படும். வியாபாரிகள் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். கலைத்துறையினர் சிறிது விட்டுக் கொடுத்து புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் செயல்கள் அனைத்தும் நேர்த்தியாக முடியும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் மனதுக்கு இனிய பயணங்களைச் செய்வீர்கள். அதனால் வருமானமும் கூடும்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.