பிரிட்டன் தேசிய விருதை வென்ற கேப்டன் மில்லர்!
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் பிரிட்டன் தேசிய விருதை வென்றுள்ளது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்". இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். படமும் ரூ.90 கோடி வரை வசூலித்தது.
தொடர்ந்து, சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பங்குபெற்று வந்தது. அந்த வகையில், லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன் தேசிய விருது விழாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழித் திரைப்படம் பிரிவில் இந்தியாவிலிருந்து கேப்டன் மில்லர் திரைப்படமும், பாக்ஷாக் (bhakshak) படமும் தேர்வு செய்யப்பட்டன. இதனுடன் மேலும் 12 படங்கள் இப்பிரிவுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற இந்த தேசிய விருது விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படமாகக் கேப்டன் மில்லர் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. படக்குழுவின் சார்பாக, இவ்விருதை சத்யஜோதி தயாரிப்பாளர் பெற்றார். சர்வதேச அளவில் முக்கியமான விருதை வென்ற கேப்டன் மில்லர் திரைப்படத்திற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.