தென்னிந்திய சினிமா தனது தூணை இழந்துவிட்டது... பிரசாத் லேப் சிவராமன் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்!
பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைவு..
பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ரீதியாக பங்களிப்பாற்றிய பிலிம் லேப்களில் ஒன்றான பிரசாத் ஃபிலிம் லேப்-ன் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் உடல்நலக்குறைவால் நேற்று (ஆக.18) காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின் வழியாக வளர்ந்தது சினிமா. அதன் அத்தனை மாற்றங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ஆளுமை, பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைந்து விட்டார்.
Advertisement
Advertisement
பிராசஸிங் மற்றும் கலர் கரெக்ஷன், ஒலித் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர். சினிமா சார்ந்த பல தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர காரணமானவர். ஃபிலிம் சுருளில் இருந்து திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாறியபோது சக கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் தொழில்நுட்ப வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
அந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 500 படங்களையேனும் ஒலியே இல்லாமல் பார்த்திருப்பார். அது அத்தனை சுலபமான வேலை அல்ல. தென்னிந்திய சினிமா தனது தூண்களுள் ஒன்றை இழந்திருக்கிறது. சாதாரணத் தூண் அல்ல. கல் தூண். மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
Actor Kamal Haasan has expressed his condolences over the passing of S. Sivaraman, the Technical Head of Prasad Film Lab.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.