விஷமாக ஏறும் வன்முறை... நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் - திரை விமர்சனம்!
டாக்ஸிக் திரைப்படத்தின் விமர்சனம்....
நடிகர் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
1947-ல் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவில் கதை நடக்கிறது. வன்முறையை மட்டுமே மொழியாகக் கொண்ட மோசமான சூழலில் குழந்தைப் பருவத்தை எதிர்கொண்டுவளர்ந்த உடன்பிறப்புகளான யஷ் (ராயா), நயன்தாரா (கங்கா) இருவரும் கேங்ஸ்டர் உலகிற்குள் நுழைந்து தங்களை வளர்த்துக்கொள்ள முயல்கின்றனர். இந்த முயற்சியில் வெற்றியும் கிடைக்க, ராயா மிகப்பெரிய டானாக மாறுகிறான். இதற்கிடையே, சர்க்கஸில் பணியாற்றும் கியாரா அத்வானி (நாடியா) மேல் ராயாவுக்கு காதல் வருகிறது. இருவரும் காதலிப்பதை நாடியாவின் தந்தை (அவரும் டான்) எதிர்க்கிறார். இருவருக்கும் குழந்தை பிறக்க, அதற்கு எதிரான செயலில் யஷ் ஈடுபடுகிறார். இடைவேளையில், கடும் இழப்பையும் சந்திக்கிறார். ராயாவுக்கும் நாடியாவுக்கும் பிறந்த குழந்தையான டிக்கெட், ராயாவைப் பழிவாங்கத் துடிக்கிறான்... இன்னொரு புறம் தன் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைப்பவர்களைக் கொடூரமாக ராயா கொன்றும் வருகிறார். தந்தை - மகன் பழிவாங்கல் நிகழ்ந்ததா? வன்முறைப்பாதையில் இருக்கும் ராயாவின் குற்றவுணர்வுகளால் அவன் மனநிலை எப்படியெல்லாம் மாறுகிறது என்கிற கதையாகவே டாக்ஸிக் உருவாகியுள்ளது.
இயக்குநர் கீது மோகன் தாஸ் சாதாரணமாக எடுத்தோம்; கவிழ்த்தோம் பாணி கேங்ஸ்டர் கதையாக இதனை எடுக்க நினைக்காமல் ராயாவுக்குள் தன் மகன் குறித்து எழும் கற்பனையையும் தொடர்ந்து வன்முறைப் பாதைகளால் தன்னை மிகவும் நேசித்தவர்களை இழந்த குற்ற உணர்வையும் பிண்ணி உளவியல் ரீதியாக ஒரு கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், கதையில் சரியான ஒழுங்கு இல்லாததால் என்னென்னவோ நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இப்படத்தின் திரைக்கதையும் கடுமையாக அடி வாங்குகிறது. திடீரென ராயா - நாடியா காதல் சிறப்பாகச் சொல்லப்படுகிறதே என நினைத்தால் தொடர்பற்ற அடுத்தடுத்த காட்சிகளால் அந்த உறவுக்கு உண்டான உணர்வுகள் அடிபடுகின்றன.
Advertisement
Advertisement
கியாரா அத்வானி, நயன்தாரா கதாபாத்திரங்கள் ஸ்டைலாக எழுதப்பட்டிருந்தாலும் ராயாவின் வாழ்க்கையைத் திருப்பும் கதாபாத்திரங்கள் என்பதால் ஒருகட்டத்தில் இந்த இருவராலும் ராயா வெறுமையை அடைகிறான். அந்த வெறுமையே அவனுடைய மனதைச் சிதைக்குத் தொடங்குவதாகவும் காட்சிகள் இருக்கின்றன. திரைப்படத்தின் பெயருக்கு ஏற்ப பல கதாபாத்திரங்களும் நச்சுத்தன்மை கொண்டவர்களாகவே உள்ளன. தன் மகனான டிக்கெட்டை (இன்னொரு யஷ்) குழந்தையாக இருக்கும் போது, ராயா கொல்ல முயன்றதாக கதை சொல்லப்படுகிறது. அதேநேரம், ராயா உண்மையிலேயே கொன்றுவிட்டானா இல்லை வளர்ந்த டிக்கெட் அவனது கற்பனையா என்கிற கோணத்திலும் ராயா காதாபத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. யோசித்தால், டாக்ஸிக் திரைப்படம் நன்றாக எழுதப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தும் லிட்டர் லிட்டராக காட்டப்பட்ட ரத்தங்களாலும் துப்பாகிகளாலும் சோதிக்கும் பாணியிலேயே படம் இருக்கிறது.
நான் எழுதுவது வேறு; எடிட் செய்வது வேறு என இயக்குநர் கீது மோகன் தாஸ் கூறியிருந்தார். இப்படத்தை அப்படித்தான் செய்திருக்கிறார். எழுதினால் கிடைக்கும் அழகு எடிட்டிங்கில் காணாமல் போனது போல் இருக்கிறது.
ஒரே பலமாக நடிகர் யஷ்தான் தெரிகிறார். இன்றைய பான் இந்திய நடிகர்களில் அந்த அம்சம் அதிகமாகவுள்ள நட்சத்திர நடிகர் என்கிற தோற்றம் யஷ்ஷுக்கு அமைந்திருக்கிறது. கம்பீரமான ராயாவாகவும் கட்டுப்படுத்த முடியாத டிக்கெட்டாகவும் வித்தியாசத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், என்ன சொல்ல வருகிறார்கள் என்கிற குழப்பத்தில் கவனிக்கப்படவில்லை.
யஷ்ஷின் சகோதரியாக நடிகை நயன்தாராவின் கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டாலும் இடைவேளைக்கு முன் அழுத்தமான உணர்ச்சியாக மாற வேண்டிய காட்சியொன்று பெரிதாக ஈர்க்காதது கதையின் மையத்திற்கு பலவீனத்தைக் கொடுத்துவிட்டது. கியாரா அத்வானியின் வசனங்களும் அவர் மரணிக்கும் காட்சியும் படத்தில் ஏதோ இருக்கிறது என்கிற எண்ணத்தைக் கொடுக்கின்றன.
இப்படத்தின் பெயரிலேயே வளர்ந்தவர்களுக்கான கதை என்பதைக் கூறிவிட்டாலும் ஹாலிவுட் மாதிரி தெரிய நாயகன் பல நாயகிகளுடன் உறவு கொள்ளும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் என ‘ஆல்ஃபா’வை விரும்பும் பெண் கதாபாத்திரங்களைப் பெண் இயக்குநரே எழுதவும் செய்திருக்கிறார். பொதுவாக, பெண்கள் இப்படியெல்லாம் யோசிக்க மாட்டாரகள் என நினைக்கும் சில விஷயங்களைக் கீது மோகன் தாஸ் உடைத்திருக்கிறார். என்னவொன்று... தன் படத்தையும் சேர்த்தே உடைத்துவிட்டார். பல நூறு கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட டாக்ஸிக்கை இன்னும் கூடுதல் கவனத்துடன் எடுத்திருக்க வேண்டும். 3 மணி நேரத்துக்கு அதிகமான கால அளவு கொண்ட இப்படத்தின் முதல் அரை மணி நேரத்திலேயே ரசிகர்கள் நெளிவதையும் செல்போன்களை நோண்ட ஆரம்பித்ததையும் பார்க்க முடிந்தது.
பல கோடிகளைப் போட்டு திரைப்படம் எடுத்தாலும்... எவ்வளவு பெரிய முன்னணி நடிகர்கள் நடித்தாலும்... டஜன் டஜனாக வன்முறை, கவர்ச்சிக் காட்சிகளை வைத்தாலும்... கதை சரியாக எழுதப்படவில்லை என்றால் டாக்ஸிக் திரைப்படத்திற்கு நிகழ்ந்ததே நமக்கும் நடக்கும் என இனிவரும் பான் இந்திய திரைப்படங்கள் கவனத்தில் கொள்ளலாம்!
The movie Toxic, starring actor Yash, has been released in theaters.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.