ஒருதலைக் காதலைக் காப்பாற்றியதா இதயம் முரளி? திரை விமர்சனம்
நடிகர்கள் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயடு லோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தை தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா கேமராவும் பிரதீப் ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
இதில் நடிகர்கள் நட்டி, தமன், நிஹாரிக்கா, ரக்சன், டிராவிட், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யாசா ஸ்ரீ, ஜோனிடா, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதயம் முரளி எனும் கதாபாத்திரம் காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் தவித்த காதலர்களுக்கான கண்ணாடி. நடிகர் முரளியின் காதலுக்காக உருகும் கதாபாத்திரங்கள், 90களில் காதலை சொல்வதற்காக தவித்த தவிப்பையும் ஆற்றாமையையும் ஏமாற்றத்தையும் கொண்டிருந்த வலிமையான அடையாளங்கள். அந்த வகையில் இதயம் முரளி எனும் தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடித்திருக்கிறார் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா.
Advertisement
Advertisement
இன்றைக்கு ஜென்சி எனப்படும் தலைமுறை அறிந்திராத பல வாழ்வியல் அனுபவங்களை கொண்ட 90களின் குழந்தையாக அறிமுகமாகிறார் அதர்வாவும் அவரது நண்பர்களும். முத்தம் கொடுத்தால் குழந்தை பிறந்து விடும், விதையுடன் தர்பூசணி சாப்பிட்டால் வயிற்றில் மரம் முளைக்கும் போன்ற அதி அற்புத நம்பிக்கைகளை கொண்டிருந்த கதாபாத்திரமாக அறிமுகமாகிறார் இதயா எனும் அதர்வா. எல்லோர் வாழ்விலும் தோன்றும் ஆசிரியை மீதான முதல் காதல் தொடங்கி பள்ளிக்கால காதல், கல்லூரி கால காதல் என நீண்டு கொண்டே போகும் காதல் எக்ஸ்பிரஸில் இதயா தன்னுடைய காதலை காதலியிடம் சொன்னாரா இல்லையா என்பதே இதயம் முரளியின் கதை.
இதயாவாக நடித்திருக்கும் அதர்வா படம் முழுக்க காதலை சொல்ல தவிக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக தாங்கி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் படம் முழுக்க நடிப்பதற்கான ஒரே வாய்ப்புள்ள நடிகராக அவரே கண் முன் தோன்றுகிறார். பால்ய வயதில் தோன்றிய காதலை இளைஞனான பிறகும் சுமக்கும் இடங்கள் எல்லாம் அவரை குழப்பவாதியாக காட்டுகிறதே தவிர காதலால் கசிந்துருகும் கதாபாத்திரமாக நிலை நிறுத்தவில்லை. முதலில் சொனிடாவை காதலிக்கிறார். அதன் பிறகு டியூசன் சென்டரில் பிரீத்தி முகுந்தனை காதலிக்கிறார். பிறகு கல்லூரி காலத்தில் கயடு லோகரை காதலிக்கிறார். இதில் யாரிடம் காதலை சொன்னார்? யாரை கரம் பிடித்தார்? என்பதெல்லாம்தான் இதயம் முரளியின் திரைக்கதை.
பொதுவாக ஒரு திரைப்படம் தொடங்கும் போது கதாபாத்திரங்களை நிறுவுவது முக்கியமானது. அதன் பிறகு கதைக்குள் சென்று விடுவது அதி முக்கியமானது. ஆனால் இதயம் முரளி திரைப்படத்தில் முதல் பாதி முடியும் வரை கதை எதை நோக்கி செல்கிறது என்பதே கண்டுபிடிக்க முடியாத அளவு அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன். முதல் பாதி முழுக்க காதலுக்காக ஓடுவதும் அதை சொல்ல முடியாமல் தவிப்பதுமாக இருக்கும் அதர்வா இரண்டாம் பாதியிலும் அவ்வாறே இருப்பது படத்தின் திரைக்கதைக்கு பலவீனமாகிறது. அதர்வாவுடன் பலர் நடித்துள்ளனர். அதர்வாவின் நண்பர்களாக வரும் டிராவிட் சுதாகர் ரக்சன் தமன் ஆகியோர் வெளிப்படுத்தும் நடிப்புகள் கூட செயற்கையோடு இருப்பது படத்தோடு ஒன்ற முடியாமல் செய்ய விடுகிறது. முதல் பாதியில் வரும் சுதாகர் திடீரென காணாமல் போகிறார். படம் முழுக்க வரும் தமன் முக்கியமான நேரங்களில் முகமே மாறாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். நம்பிக்கை தரும் விதமாக கயடு லோகர் பார்வையாளர்களை கரையேற்ற முயன்றிருக்கிறார். ஒட்டுமொத்த படத்திலும் ரயில் நிலையத்தில் காதலை சொல்வதற்காக தடுமாறிக் கொள்ளும் அதர்வாவுக்கும் கயடுலோகருக்கும் இடைப்பட்ட காட்சிகள் படத்திற்கு சற்று நம்பிக்கை தருகின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த காட்சி மட்டுமே பார்வையாளர்களுக்கு ஒரு உணர்வை கடத்துகின்றது. சுதாகரின் முதல் பாதி காமெடிகள் கை கொடுத்திருக்கின்றன. அதேசமயம் கிளைமாக்ஸ் காட்சிகளில் சீரியஸான நேரங்களில் திடீரென எழும் காமெடி காட்சிகள் துண்டாக தெரிவது ஏனோ?
எங்கெங்கோ செல்லும் திரைக்கதை, எதற்காக காதலிக்கிறோம் என தெரியாத நாயகர், போவதும் வருவதுமாக கதாநாயகிகள் என ஆழமில்லாத எழுத்து படத்தை அதள பாதாளத்திற்கு தள்ளி உள்ளது. அஞ்சு குரியன், மாளவிகா மோகன் என எதிர்பாராத கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளன. இதற்கு மத்தியில் படத்தின் முதலில் இருந்தே பகத் பாஸில் வருகிறார். இவ்வளவு கதாபாத்திரங்கள் இருந்தும் எதையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியிருக்கிறார் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன். ஏன் இத்தனை கதாபாத்திரங்கள்?
பின்னணி இசைகள் ஆங்காங்கே கை கொடுத்துள்ளன. கட்டழகி எனும் பாடலைத் தவிர மற்ற எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. கேமரா மனோஜ் பரமஹம்சா அதற்குண்டான வேலையை சரியாக செய்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ள பிரதீப் சற்று மெனக்கெட்டு இருக்கலாம்.
ஒருதலைக் காதலின் நினைவுச் சின்னமான இதயம் முரளியை புரட்டி எடுத்திருக்கிறது இதயம் முரளி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.