சின்ன திரையிலும் முத்திரைப் பதித்த பாரதிராஜா!
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தொடர்கள் குறித்த விரிவான பார்வை.
என்னற்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா, தெக்கத்திப் பொண்ணு தொடர் மூலம் சின்ன திரையில் இயக்குநராக அறிமுகமானார். சினிமாவில் தான் இயக்கிய பாணியை தொலைக்காட்சி தொடர்களிலும் புகுத்தி சில தொடர்களை இயக்கினார்.
இவர் இயக்கிய முதல் தொடர் தெக்கத்திப் பொண்ணு, கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. இந்தத் தொடரில் கதாபாத்திரங்கள் வழங்கிய அழுத்தமான நடிப்பு, ஆழமான காட்சியமைப்பும் இந்தத் தொடர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது.
பாரதிராஜாவின் மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. ஜெயராஜ் இந்தத் தொடரைத் தயாரித்து இருந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 750 அத்தியாயங்கள் ஒளிபரப்பானது. கடந்த ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2011 வரை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
திரைக்கதையை ரத்னகுமாரும், வசனங்களை தேன்மொழி தாஸும் எழுதியிருந்தனர். சினிமா பாணியில் எடுக்கப்பட்ட இந்தத் தொடர், டிஆர்பியில் அதிக புள்ளிகளைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்தத் தொடரில் நெப்போலியன், ரஞ்சிதா, ஸ்வர்ணமாலயா, சந்திரசேகர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் பிரதான வேடங்களில் நடித்து, கதாபாத்திற்கு உயிர் ஊட்டியிருந்தனர். தலைப்பு பாடலுக்கு இளையராஜா இசைமைத்திருந்தார்.
தெக்கத்தி பொண்ணு தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் இயக்கிய இரண்டாவது தொடர் அப்பனும் ஆத்தாளும். தெக்கத்தி பொண்ணு தொடர் நிறைவடைந்த அடுத்த வாரமே, அப்பனும் ஆத்தாளும் தொடர் ஒளிபரப்பானது. இந்தத் தொடரையும் பாரதிராஜா மண்வாசனையுடன் கலந்து கிராமியப் பின்னணியில் எடுத்திருந்தார்.
5 குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெற்றோர்கள், சந்திக்கும் பிரச்னைகளையும் சவால்களையும் மையப்படுத்தி இந்தத்தொடர் எடுக்கப்பட்டது. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை ரமா, இந்தத் தொடரின் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். தலைப்பு பாடலுக்கு நா. முத்துக்குமார் மற்றும் சினேகன் வரிகளை எழுத, ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இவரின் அடுத்த படைப்பு முதல் மரியாதை தொடர். முதல் மரியாதை படத்துக்கும் எந்தவித தொடர்பில்லாமல் இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. இந்தத் தொடரும் கலைஞர் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்தத் தொடரின் கதையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி எழுத, பாரதிராஜா இயக்கியிருந்தார். தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய தொடர் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
குடும்பத்தைக் காக்கப் போராடும் விவசாயின் வாழ்க்கையை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடரில் சந்திரசேகர் விஷாலி முரளிதரன், வடிவுக்கரசி, குயிலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல், சின்ன திரையிலும் இன்றளவும் நினைவுக் கூறப்படும் தொடர்களை இயக்கி, நம்மிடையே சேர்த்து, தனியிடத்தைப் பிடித்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.