முகப்பு
செய்திகள்

தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் - இணையத் தொடர் விமர்சனம்!

லிங்கம் இணையத் தொடர் விமர்சனம்...

Updated On : 29 ஜூன் 2026, 2:04 pm IST
பகிர்:

மறைந்த பிரபல ரௌடி லிங்கத்தின் கதையாக ஹாட்ஸ்டாரில் புதிய இணையத் தொடர் வெளியாகியுள்ளது.

1990-களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் தரக்கூடிய ரௌடியாக வலம் வந்தவர் லிங்கம் என்கிற முத்துலிங்கம். சாதாரண கபடி வீரராக தென் தமிழகம் முழுக்க பிரபலமாக இருந்த லிங்கம், செய்யாத கொலைக்காக சிறை செல்கிறார். ஆனால், அக்கொலையால் லிங்கத்தை வன்முறை தேடி வருகிறது. ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க நினைக்கும் லிங்கம் ஒருகட்டத்தில் வன்முறைப் பாதைக்குத் திரும்புகிறார். கபடி வீரராக தமிழகக் காவல்துறையில் பணியில் சேர காத்திருந்த நபர், அடுத்த சில ஆண்டுகளிலேயே தென் மாவட்டங்களின் பிரபல ரௌடியாக எழுச்சியடைகிறார்.

லிங்கம் பெயரைச் சொன்னாலே கன்னியாகுமரியே நடுங்கும் நிலையும் ஏற்படுகிறது. பல கொலைகள், ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்துகள் என லிங்கத்தைச் சுற்றி பழிவாங்கும் படலங்களும் துரோகங்களும் சுழல்கிறது. ஈட்டிய பகைகளால் 1996-ல் நாகர்கோவில் கிளைச்சிறையில் லிங்கம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுவதுடன் அவரின் தலை சாலையிலும் வீசப்படுகிறது. அன்று தமிழகத்தில் பெரிய அதிர்வைக் கொடுத்த படுகொலை இது. லிங்கத்தைக் கொன்றவர்களில் ஒருவரான சகாயம் என்பவரை லிங்கம் மகன் 2013 ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

உண்மையான லிங்கம் அசாதரணமாக வளர்ந்து பல ரௌடிகளைப் போன்று முடிந்தும் போனார். ஹாட்ஸ்டாரில் தற்போது லிங்கம் என்கிற பெயரில் இக்கதை தொடராக வெளிவந்துள்ளது. எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் இயக்கிய இத்தொடரின் முதல் சீசனில் லிங்கம் நீதிமன்றத்திலேயே வைத்து வழக்கறிஞரை வெட்டி கொடூர தாதாவதுடன் முடிகிறது. இதற்கு இடைப்பட்ட எபிசோடுகளில் கபடி வீரரான லிங்கம் (நடிகர் கதிர்) கபடி விளையாட சென்றபோது சிக்கலில் சிக்கி மெல்ல மெல்ல ரௌடியாகி கள்ளச்சாராயத்தைப் பெரிய வணிகமாக மாற்றுகிறார். பின், உடன் இருந்தவர்களின் துரோகங்களால் மூர்க்கமான தாதாவாவதும் காட்டப்படுகிறது.

லிங்கம் கதை பலருக்கும் தெரியும் என்பதால் இத்தொடரின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. லிங்கமும் அவரின் நெருங்கிய நண்பரான பிரபுவும் (இத்தொடரில் திரு) கபடி வீரர்களாக இருந்து ஒருவரை ஒருவர் கொல்லும் நிலைக்கு ஏன் சென்றார்கள்? இந்த ஆவண மோதலில் யார் கொல்லப்பட்டது? லிங்கம் பெரிய தாதாவாக மாறுவது எப்படி? என்கிற ஆரம்ப கட்ட வாழ்க்கையை வைத்து இத்தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் எபிசோடின் ஆரம்பத்தில் 6 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி பதற்றத்தைக் கூட்டுவதாக இருந்தாலும் கேங்ஸ்டர் கதைகளுக்கு உண்டான ஒரே மாதிரியான காட்சிகளும், சலிப்பை ஏற்படுத்தும் வாய்ஸ் ஓவர்களும் எந்த புதிய அனுபவத்தையும் வழங்கவில்லை. இதனால், 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது பெரிய குறையாகவே மாறிவிட்டது.

லிங்கமாக நடித்த நடிகர் கதிர் கதாபாத்திரத்திற்கு நன்றாகப் பொருந்தியுள்ளார். ஆனால், வலுவில்லாத எழுத்தால் அக்கதாபாத்திரம் வீண்டிக்கப்பட்டது போல் ஆகிவிட்டது. உண்மையான லிங்கம் நாகர்கோவிலின் மிக முக்கியமான ஆளாக இருந்து தென் தமிழகம் வரை பேசப்பட்ட ரௌடியாக ஆவதற்கான உண்டான பலமான கதை சொல்லல் முறையும் இல்லை.

நடிகர்கள் தேர்வும் சொதப்பியதால் ரௌடிகளாக நடித்த பலரும் எந்தத் தாக்கத்தையும் கதைக்குள் செலுத்தவில்லை. நடிகை திவ்ய பாரதியை அவரின் கதாபாத்திரத்திற்கு எந்த நம்பிக்கையில் தேர்வு செய்தனர்?

மேலும், கன்னியாகுமரியின் வாழ்வியல், வட்டார வழக்கின் நம்பகத்தன்மை என கதைக்குத் தொடர்புடைய விஷயங்கள் நேர்த்தியாகக் காட்டப்படாதது தகுதியுள்ளது வாழும் (survival the fittest) என்கிற பாணியைக் கொண்டு வந்தது ஆகியவை இதன் தரத்தை குறைத்துவிட்டது. தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் வடசென்னை திரைப்படம்தான் பெஞ்ச் மார்க் ஆக இருக்கிறது. இத்தொடரின் சில காட்சிகளும் வாய்ஸ் ஓவர்களும் அப்படத்தையே நினைவுபடுத்துகின்றன.

தமிழில் நல்ல இணையத் தொடர்கள் வருவதில்லை என்கிற ஆதங்கங்கள் உண்டு. அதற்கு முதலில், வாய்ப்பு கிடைக்கும் தொடர்கள் சரியாக எடுக்கப்பட வேண்டுமே? இத்தொடரின் இரண்டாவது சீசனுக்கான முடிவுடனே காட்சிகள் அமைந்திருக்கின்றன. முதல் சீசன் கொடுத்த ஏமாற்றத்தால் இரண்டாவது மேல் எதிர்பார்ப்பு இல்லாத நிலையே உருவாகியுள்ளது.

A new web series based on the story of the late, notorious gangster Lingam has been released on Hotstar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments