இதை வரமாகத்தான் பார்க்கிறேன்: ப்ரீத்தி முகுந்தன்
அன்பில் அவன் நிகழ்வில் பேசிய ப்ரித்தி முகுந்தன்...
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அன்பில் அவன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், கலந்துகொண்டு பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், “இந்தப் படத்தைப் பற்றி நாங்கள் கடைசியாக மேடையில் பேசுகிறோம் என்று நினைக்கும்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஏற்கெனவே நன்றி தெரிவித்துவிட்டேன். இப்போது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். படத்தைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் படித்தேன். படம் எப்படி இருக்கிறது என்பதைத் தாண்டி, அதன் பின்னால் இருக்கும் உழைப்பையும் ஆர்வத்தையும் கவனித்து மிகவும் அழகாக விமர்சனங்களை எழுதியிருந்தீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
Advertisement
Advertisement
படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பெண்களும் இளம் பெண்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால், அதுவே மிகப்பெரிய விஷயம். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் என் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, நாங்கள் உருவாக்கிய ஒரு படம் மற்றவர்களின் மனதிலும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை ஒரு வரமாகத்தான் பார்க்கிறேன். படத்தைத் திரையரங்கில் பார்த்து, எங்களுடைய உழைப்பைப் பாராட்டி, தங்களுடைய அன்பையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்த அனுபவம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பதற்றத்தால், படத்தைத் தொடக்கத்திலிருந்து திரையரங்கில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. படம் ஓடிக்கொண்டிருந்தபோது உள்ளே சென்று, பக்கவாட்டுப் படிக்கட்டில் நின்றபடியே பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் கார்த்திக், அசோக் உள்ளிட்ட படக்குழுவினரும் அப்போது என்னுடன் இருந்தார்கள். அப்படியே சுமார் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே முழுப் படத்தையும் பார்த்தேன். அப்போது கண்களில் கண்ணீர் வந்தது. படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைத் தாண்டி, நாங்கள் உருவாக்கிய படத்தைப் பார்த்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அழகாகவும் படம் அமைந்திருந்தது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட திரைப்படத்தில் நடிப்பது உண்மையிலேயே ஒரு வரம். எதிர்காலத்தில் இந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போதும், இதில் நடித்ததற்காகப் பெருமைப்படுவேன்.
இந்தப் படத்தின் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் மிகவும் அழகாக இருந்தன. ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் பரபரப்பு, உணர்வுகள், காதல் என அனைத்தையும் திரையரங்கில் அமர்ந்து உணர முடிந்தது. ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு நடிப்பதற்கு நிறைய இடம் கொடுத்து, என்னுடைய கதாபாத்திரத்தையும் அழகாக எழுதியிருந்தார். குறிப்பாக, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துடன் எனக்கு வரும் காட்சிகளைப் பலரும் பாராட்டினார்கள். அந்தக் காட்சிகளைப் பற்றிப் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் உண்மையிலேயே மனதைத் தொடும் அழகான சினிமா அனுபவம். எனவே, அனைவரும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். மக்கள் படத்தை ரசித்துப் பாராட்டுவதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Preethi Mukundan has spoken about the movie Anbil Avan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.