மண்டாடியைத் தொடர்ந்து சுஹாஸ் நடிக்கும் புதிய திரைப்படம்!
ஹைட் அண்ட் சில்க் திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியானது.
மண்டாடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சுஹாஸ் ஹைட் அண்ட் சில்க் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் அண்ட் சில்க்’ (Hide & Silk).
சுஹாஸ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
படத்தின் வித்தியாசமான கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் புரோமோ ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் அவர், 4 திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் அண்ட் சில்க்’.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் புதிய முயற்சியில் கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
‘மண்டாடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுஹாஸ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘லப்பர் பந்து’, ‘டிசி’ ஆகிய படங்களில் நடித்துள்ள சஞ்சனா, மூத்த நடிகர் தனிகெல்லா பரணி, நந்து மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இது அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமாகும்.
வெளியாகியுள்ள டைட்டில் ப்ரோமோவில், பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று சந்திக்கும் தருணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவை கார்த்திக் பழனி மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை ஷஃபீக் முகமது அலி கவனிக்கிறார். ‘3 பிஎச்கே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார்.
‘ஹைட் அண்ட் சில்க்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Following the success of the film Mandaadi, actor Suhas is starring as the lead in the movie Hide and Silk.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.