சென்னையா? மும்பையா? எங்கே இருக்கிறார் சூர்யா?
நடிகர் சூர்யா தன் குடியிருப்பு குறித்து பேசியுள்ளார்...
நடிகர் சூர்யா தன்னுடைய வசிப்பிடம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 திரைப்படம் வருகிற செப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வில்லனாக எஸ்ஜே சூர்யா, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கலந்த உளவுக்கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்தார் முதல் பாகம் நல்ல வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் டிரைலர் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது. டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசினார். அதில், “சர்தார் - 2 டிரைலர் மிகவும் பிடித்திருந்தது. ஏதோ நெட்பிளிக்ஸில் வெளியான சர்வதேச திரைப்படமொன்றைப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. அதிலும், இது கார்த்தி படமென்பதால் கூடுதல் மகிழ்ச்சி. சர்தார் முதல் பாகம் பல உண்மைச் சம்பவங்களைத் தொட்டு எழுதப்பட்டிருந்தது. இரண்டாம் பாகமும் அப்படித்தான் உருவாகியுள்ளது. இயக்குநர் பிஎஸ் மித்ரன் சிறப்பான இயக்குநர். சர்தார் போல் பல உளவுத்திரைப்படங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்க வேண்டும். உண்மையிலேயே சர்தார் - 2 வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
மேலும், சூர்யா சென்னையில் வசிக்கிறாரா இல்லை மும்பையிலா? என்கிற கேள்விக்கு, “நிறைய பேருக்கு இந்தக் குழப்பம் இருக்கிறது. நான் சென்னையில்தான் இருக்கிறேன். அங்குதான் (மும்பை) அடிக்கடி சென்று வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் மகன், மகள் மும்பையில் படித்து வருவதால் அங்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஜோதிகா மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
Actor Suriya has responded to a question regarding his place of residence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.