✕
முகப்பு
திரை விமரிசனம்

"அப்பா குட்டி"-யின் பாசம் வென்றதா? திரை விமர்சனம்

விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியுள்ள "அப்பா குட்டி" படத்தின் திரை விமர்சனம் குறித்து...

13 வினாடிகள் முன்பு
அப்பாக்குட்டி திரை விமர்சனம்
★★★★★ 2.0/5
அப்பா குட்டி
பகிர்:

மு.மாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, லிதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் அப்பா குட்டி.

தமிழ் சினிமாவில் அப்பா மகள் உறவு, அம்மா பாசம், தங்கை அண்ணன் உறவு என உறவுமுறைகளுக்கு இடையேயான அன்பை பேசி வென்ற படங்கள் ஏராளம் இருக்கின்றன. அப்படிப்பட்ட வெற்றி சூத்திரத்தை கையிலெடுத்து வெளியாகி இருக்கிறது அப்பா குட்டி.

தனது மகளுக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத்துடிக்கும் ஒரு தந்தையின் போராட்டத்தை முழுநீள திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

Advertisement

Advertisement

சென்னையில் ரவுடிகளிடமிருந்து தப்பித்து தனது குழந்தையுடன் ஊட்டிக்கு தஞ்சம் புகுகிறார் சூர்யா (விஜய் ஆண்டனி). தனது மனைவி பிரசவத்தில் இறந்துவிட எந்த உறவும் இல்லாத சூர்யா தனியாளாக குழந்தையை வளர்க்கிறார். இந்த சூழலில் இறந்ததாக சொல்லப்பட்ட சூர்யாவின் மனைவி உயிருடன் ஊட்டிக்கு வருவதைப் பார்க்கிறார் சூர்யாவை ஒரு தலைக்காதல் செய்யும் குழந்தையின் டீச்சர் அனிதா (ப்ரீத்தி அஸ்ரானி). இறந்ததாக சொல்லப்பட்ட குழந்தையின் தாய் எப்படி உயிருடன் வந்தார்? விஜய் ஆண்டனி எதற்காக சென்னையில் இருந்து தப்பித்து ஊட்டிக்கு வர வேண்டும்? விஜய் ஆண்டனியை விரும்பிய ப்ரீத்தி அஸ்ரானி என்ன ஆனார்? என்பதே அப்பா குட்டி திரைப்படத்தின் கதை.

அப்பாக்குட்டி

தன்னை நம்பி செண்டிமெண்ட் கதைகளை எடுக்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. முதல் பாதி முழுக்க பெண் பிள்ளைக்கான அப்பா போல அன்புகாட்டும் அவரது நடிப்பு இரண்டாம் பாதியில் ஆண் பிள்ளையின் அப்பா போல அதிரடி காட்டியிருக்கிறது. இதற்கு முன் அவருக்கு அமைந்த திரைப்படங்களை போன்று மென்மையான வசனங்கள், மீட்டர் எகிறாத அவரது நடிப்பு இந்த திரைப்படத்திலும் தொடர்ந்திருக்கிறது. அவருக்கு இணையாக படத்தை தூக்கிக் கொள்ள வேண்டிய பெரிய பொறுப்பு சிறுமி லிதன்யாவிற்கு இருந்திருக்கிறது. துறுதுறுவான அவரது நடிப்பு படத்தைக் காப்பாற்றி இருக்கிறது. முதல் பாதி காதல் காட்சிகளில் கவனிக்க வைக்கும் ப்ரீத்தி அஸ்ரானி இரண்டாம் பாதியில் சப்ஸ்ட்டியுட் ஆக மாறியிருக்கிறார். இவர்களுடன் கவனிக்க வைக்கிறது விஜய் ஆண்டனியின் நண்பனாக வரும் முருகானந்தத்தின் காமெடி. சீரியசான இடங்களில் தைரியத்துடன் அவர் எடுத்து வைத்த காமெடி திரையரங்கை குலுங்க செய்திருக்கிறது. ரசிக்கும்படியான அவரது காமெடி இரண்டாம் பாதியின் எனர்ஜி பூஸ்டர்.

இவர்களுடன் ஜென்சன் திவாகர், அருவி மதன், பசுபதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், விஜயன், ஹரிப்பிரியா இசை, ஹரிதா, முன்னார் ரமேஷ் என பலர் நடித்துள்ளனர். ஹரிப்பிரியா மற்றும் பகவதி பெருமாள் நடிப்புக்கு பாராட்டுக்கள்.

"நீ தான் என் கண்ணாடி", "அப்பாவை போல" பாடல்கள் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. "அப்பாவைப் போல" பாடலில் வரும் குரல் பார்வையாளர்களை உலுக்குகிறது.

திரைப்படம் தொடங்கும் போது வரும் திருட்டு சம்பவம் தொடங்கி குழந்தைக்காக ரகுல் ப்ரீத்தி சிங் செய்யும் தியாகம் வரை யதார்த்தத்தை மீறிய பல காட்சிகள் நாடகத் தன்மையான உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன. குழந்தை முக்கியம் என ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தும் விஜய் ஆண்டனிக்கு அந்த குழந்தை ஏன் முக்கியம் என்பதை பேசுவதற்கான ஒரு காட்சியோ, உரையாடலோ இல்லாமல் இருப்பது எழுத்தில் வெளிப்பட்டுள்ள பலவீனம். முதல் பாதியில் காதல் கதை என நாம் காத்திருக்க இரண்டாம் பாதி நம்மை வேறு உலகத்திற்குள் கொண்டு செல்வதும், இரண்டாம் பாதியில் நீண்டு கொண்டே செல்லும் காட்சிகளும் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் இல்லை. விஜய் ஆண்டனிக்கு நீதிபதி கொடுத்த தண்டனை என்ன ஆனது என்பதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே கிளைமாக்ஸ் காட்சி உருவாகி விடுகிறது. இப்படி கவனிக்க வேண்டிய பல இடங்களை இயக்குநர் கவனிக்கத் தவறியிருக்கிறார்.

அப்பாக்குட்டி

எனினும் இந்தக் குறைகளை மறைக்கும் வகையில் கடைசி 20 நிமிடங்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நம்மை நடிப்பாலும், உணர்வைத் தட்டி எழுப்பும் காட்சிகளாலும் கட்டிப் போட்டு அழ வைத்து விடுகிறது இந்த அப்பா குட்டி. வெகுஜன மக்கள் ரசிக்கும் கிளைமேக்ஸ் காட்சிகளால் அப்பா குட்டியை வெற்றி பாதையின் பக்கம் கடத்திக் கொண்டு வந்து விட்டார் விஜய் ஆண்டனி. கெஞ்சல் கொண்ட அவரது நடிப்பு நீதிபதியைப் போலவே நம்மையும் சாட்சிகளையும், ஆதாரங்களையும் கவனிக்க விடாமல் செய்து விடுகிறது.

அப்பா மகள் அன்பிற்கு அப்பா குட்டி இனி புது முகவரி.

summary

Film review of Vijay Antony’s 'Appa Kutty'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.