FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திரை விமரிசனம்

நீதிக்கான போராட்டத்தில் வென்றதா லெனின் பாண்டியன்? திரைவிமர்சனம்

அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் கங்கை அமரன், தர்ஷன் கணேசன் நடிப்பில் உருவாகியுள்ள லெனின் பாண்டியன் திரைப்படம் குறித்த விமர்சனம்

25 செப்டம்பர் 2026, 9:37 am IST
Lenin Pandian
★★★★★ 2.5/5
நீதிக்கான போராட்டத்தில் வென்றதா லெனின் பாண்டியன்? திரைவிமர்சனம்
பகிர்:

அரசியல் செல்வாக்குடன் அதிகார வெறி கொண்டு அலையும் வில்லன்களுக்கு எதிராக சாமானிய முதியவர் நடத்தும் சட்டப் போராட்டம் என்ன ஆனது என்பதே லெனின் பாண்டியன் திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அவருடன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் கங்கை அமரன் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீரித்தா ராவ் மற்றும் ரோஜா ஆகியோரும் இவர்களுடன் நடிகர்கள் ஜாஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ்வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கேமரா எட்வின் சாகே, கலை இயக்கம் அத்தூரி ஜெயக்குமார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இளையராஜா, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர்.

சிறு வயது முதலே தன்னுடைய தோற்றத்தால் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கதாநாயகன் தர்ஷன் தன்னுடைய சுய அடையாளத்திற்காக ஏங்குகிறார். பணியின் போது இறந்த தனது தந்தையின் காவலர் பணி அவருக்குக் கிடைக்கிறது. இந்நிலையில் மற்றொருபுறம், துரைசாமி (கங்கை அமரன்) ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி மீனாட்சி மணல் கடத்தல் கும்பல்களின் லாரி மோதி இறந்து விடுகிறது. இந்த சட்டவிரோத கும்பலை தண்டிக்க நினைத்து உள்ளூர் கிராம நிர்வாக அலுவலருக்கு (அர்ச்சனா) தகவல் சொல்கிறார் துரைசாமி. அர்ச்சனாவும் வில்லன்களால் தீர்த்துக் கட்டப்பட இதனால் அதிர்ச்சியடைந்த கங்கை அமரன் தன்னால் இறந்த அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு நீதிமன்ற படிக்கட்டு ஏறுகிறார். இந்த வழக்கு நேர்மையான நீதிபதியான பீமாராவ் எனும் ஜார்ஜ் கைகளுக்குப் போகிறது. முதியவரான கங்கை அமரன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அவருக்கு காவலாக பணியமர்த்தப்படுகிறார் நாயகன் தர்ஷன்.

Advertisement

Advertisement

மிகப்பெரிய மணல் கடத்தல் கும்பலை எதிர்த்து சாதாரண முதியவர் நடத்தும் சட்ட போராட்டம் வென்றதா? இல்லையா? என்பதே லெனின் பாண்டியன் திரைப்படத்தின் கதை.

முதல் திரைப்படமானாலும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் நாயகன் தர்ஷன். சுய சந்தேகத்துடன் எதையும் அணுகும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுக்க எதிரிகளிடம் எதிர்த்து நிற்பது தொடங்கி, சூழ்நிலை கைதியாக சிக்கிக் கொண்டு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாவது வரை காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். காதலனுக்காக பேசுவதும் சண்டையிடுவதும், பிறகு இறங்கி வந்து சமாதானம் செய்வதுமாக நாயகி ஸ்ரீத்தா சிறப்பாக நடித்திருக்கிறார். மருத்துவமனை காட்சிகளில் அவரது நடிப்பு காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது. திரைப்படத்தின் ஆஸ்தான நாயகனாக கங்கை அமரனை குறிப்பிடலாம். வயதான முதியவர் கதாபாத்திரத்திற்கு பாரதிராஜா பொருந்திப் போனதைப் போலவே கங்கை அமரன் படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார். காதலுடன் ரோஜாவிடம் பேசுவது தொடங்கி அப்பாவித்தனமாக ஏமாந்து நிற்பது வரை பக்கத்து வீட்டு முதியவரை கண் முன் நிறுத்தியிருக்கிறார் அவர். ஆட்டுக்குட்டி மீனாட்சிக்கு அவர் அழுவதும், முட்ட காளான் சாப்பிட விரும்பி கேட்பதுமாக காட்சிக்கு காட்சி அவரது நடிப்பு பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. இவருக்கு மனைவியாக நடித்திருக்கும் ரோஜா முதல் மரியாதையை நினைவுபடுத்துகிறார். துணிச்சலான, திடமான பெண்ணாக வரும் இடங்கள் யதார்த்தத்துடன் அமைந்துள்ளன.

படத்திற்கு பெரும் பலம் கதாபாத்திரங்கள் தேர்வு எனச் சொல்லலாம். காவலராக வரும் போஸ் வெங்கட், நீதிபதியாக வரும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் பட்டாசாக நடித்துள்ளனர். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் அவர்களது நடிப்பு அட்டகாசமாக கைகொடுத்துள்ளது. ஜார்ஜ் மரியத்தின் நடிப்பு சட்டம் ஒருவருக்கு கொடுக்கும் வாய்ப்பு, விடுதலை ஆகியவற்றை திரையில் அப்படியே கடத்தி நம்பிக்கை ஏற்படுத்துகிறது. சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமான நடிப்பும், அதற்குண்டான நியாயமும் கொடுத்திருக்கிறார் அர்ச்சனா. இவர்களுடன் ஆடுகளம் நரேன் என பலர் நடித்துள்ளனர். வில்லனாக வரும் யுகேந்திரனும் பார்வையாளர்களை ஏமாற்றவில்லை.

படத்தின் பெரிய பலமாக இருப்பது முதல் பாதியில் வந்த யதார்த்தமான காட்சி அமைப்புகள். குறிப்பாக நீதிமன்ற காட்சிகள் சமகாலத்தில் சட்டம் எப்படியான வாய்ப்புகளை சாதாரண மனிதர்களுக்கு ஏற்படுத்தவல்லது எனும் நம்பிக்கையை கடத்துகிறது. ஒரு நேர்மையான நீதிபதி நினைத்தால் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்க முடியும் என்பதை திரைக்கதை அழுத்தமாக பதித்திருக்கிறது. ”அதிகாரி என சொல்லாதீங்க அலுவலர்ன்னு சொல்லுங்க, தோற்றத்தை வைத்து மதிப்படக்கூடாது போன்ற வசனங்கள் காட்சியோடு ஒட்டி வருவதால் கைதட்டலை அள்ளுகின்றன.

இசைஞானி இளையராஜாவின் பாண்டி முனி பாடல் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. முதல் பாதியில் விறுவிறுப்பு கூட்டும் அவரது பின்னணி இசை இரண்டாம் பாதியையும் விட்டு வைக்கவில்லை. பரபரப்பான இடங்களில் பின்னணி இசையைத் திணிக்காமல் அமைதியாக அதைக் கடத்துவதும் கிளைமாக்ஸ் காட்சிகளில் கண்களில் நீர் வழிய வைக்கும் அவரது அழுத்தமான இசையும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள எழுத்து, சரியாக அமைந்த தொழில்நுட்ப வேலைகள் படத்தை தூக்கிவிட்டிருக்கிறது. முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் கதை, இரண்டாம் பாதியில் காதல் காட்சிகளுக்கு நடுவில் சற்று திசை மாறி இருக்கிறது. உள்ளூரில் வில்லனை எதிர்க்க முடியாமல் தவிக்கும் முதியவர் எப்படி உயர் நீதிமன்றத்தின் படிகளை ஏறினார் என்பதை விளக்கியிருக்கலாம். யதார்த்தத்துடன் பயணிக்கும் முன்பாதி கதை, இரண்டாம் பாதியில் சற்று சினிமாத்தனங்களால் நிரம்பி விடுகிறது. நீளும் கிளைமாக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். ஆங்காங்கே டாணாக்காரன் எட்டிப் பார்க்கிறான்.

அதிகாரமும் அரசியலும் சாதாரண மக்களை எவ்வளவு இன்னலுக்கு உள்ளாக்குகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் பாலச்சந்திரன். இந்த நீதி அமைப்பும், அரசு முறைகளும் எளிய மக்களிடமிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு இருக்கிறது என்பதை வசனங்களின் வழி வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.

அதேசமயம் மனித மனங்களுக்குள் ஊடுருவும் உணர்வுகளை காட்சிகளாகவும் வடித்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். சிவகங்கை பகுதி கிராமத்தை கண்முன் நிறுத்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது எட்வினின் கேமரா. கலை இயக்கம், படத்தொகுப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.

அடையாளம் தேடும் இளைஞனுக்கும், நீதியை தேடும் முதியவருக்கும் இடையிலான லெனின் பாண்டியன் இந்த வாரத்தின் கவனிக்கத்தக்க திரைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments