FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கைத்தறிப் பூங்கா "கை' கொடுக்குமா?

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் கைத்தறிப் பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். நம் நாட்டில் உழவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் செய்து வருகிற தொழில் நெசவுத்தொழில்

25 டிசம்பர் 2023, 9:50 pm
பகிர்:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் கைத்தறிப் பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். நம் நாட்டில் உழவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் செய்து வருகிற தொழில் நெசவுத்தொழில் என்கிற அடிப்படையில் நெசவாளர்கள் மீது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

  2005-ம் ஆண்டு முதல் உலக ஜவுளி வர்த்தகத்தில் ஒதுக்கீட்டு முறை விலக்கிக் கொள்ளப்பட்டது. சந்தை அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் தற்போதைய நிலவரப்படி ஜவுளி உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகவே உள்ளது என்பதும் ஆறுதல் தரக்கூடிய செய்தியாக உள்ளது.

  மத்திய அரசு உண்மையாகவே கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், உலக வர்த்தகத்திற்கேற்ப தயார்படுத்தவும் நெசவாளர்களை ஊக்குவிக்க விரும்பினால், தேசிய அளவில் கூட்டுறவு அமைப்பை ஒழுங்குபடுத்தி வலுப்படுத்த வேண்டும். 2004-ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறபோது ""தேசிய அளவில் கூட்டுறவு சட்டங்களைத் திருத்தியமைத்து பஞ்சாயத்து நகர்பாலிகா போன்ற கூட்டுறவு மாதிரிச் சட்டத்தை நிறைவேற்றுவோம்'' என்று கூறினார்.

Advertisement

Advertisement

  தற்போது மீண்டும் அவரே பிரதமராக இருக்கின்ற நேரத்தில் கூட்டுறவு அமைப்புகளை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு, பஞ்சாயத்து ராஜ் போன்ற கூட்டுறவு மாதிரிச் சட்டத்தை இயற்றி அதற்கென தேர்தல் ஆணையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் கூட்டுறவு அமைப்புகளில் காணாமல் போன மக்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

  தமிழகத்தைப் பொறுத்தவரையில் கூட்டுறவு அமைப்புகள் முற்றிலும் சிதைந்துபோய் உள்ளன. தொடர்ந்து கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக அமைப்புகள் இல்லாத காரணத்தால் ஆளும் கட்சியினரின் ஆசியுடன் அதிகாரிகள் நடத்தும் வேட்டைக்காடாகவே பல கூட்டுறவு அமைப்புகள் உருவாகிவிட்டன. அதில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியிருக்கின்றன.

  கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் துணிகளுக்கு விற்பனை ஊக்குவிப்பு என்கிற முறையில் 500 ரூபாய் சேலை ஒன்றுக்கு 100 ரூபாய் (மானியம்)  தள்ளுபடி என்கிற பெயரில் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 20 சதவீத தள்ளுபடி மானியம் எல்லா துணிகளுக்கும் வழங்கப்படுகிறது. பருத்தி அல்லாத பட்டுச் சேலைக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படுகிறது.

  இந்த தள்ளுபடி மானியத் தொகை மத்திய அரசால் தீனதயாள் ஹாத்கர்கா புரோத்சாஹன் யோஜனா என்கிற திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்குக் குறிப்பிட்ட அளவில் வழங்கப்படுகிறது. கூடுதல் தேவைக்கு மாநில அரசு பொறுப்பேற்று நெசவாளர் கைத்தறி வேலை மற்றும் நலன்களைக் கருதி வழங்குகிறது.

  இவ்வாறாக வழங்கப்படும் தள்ளுபடி தொகையை போலி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அமைத்து அவற்றின் மூலம் போலியாகவே ஆவணங்கள்படி துணிகளைத் தயாரித்து விற்பனை செய்ததுபோல் காட்டி, இன்று கோடிக்கணக்கில் தள்ளுபடி மானியத் தொகை நெசவாளர்கள் பெயரில் மோசடி செய்யப்படுகின்றன.

  இதற்காகவே தமிழகம் முழுவதிலும் போலியான நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. லஞ்சம் கொடுத்து சுயநிதிக் கல்லூரிகள் தொடங்குவதுபோல், சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போலி கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படுகின்றன.

  ஏற்கெனவே கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்தவர் தற்போது மனைவியின் பெயரில் முதன்மை அமைப்பாளராகச் சேர்ந்து அதன் மூலம் கூட்டுறவு சங்கத்தை அமைப்பது தற்போது வெகுவேகமாக தமிழகம் முழுவதிலும் பரவி வருகிறது. பரமக்குடியில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தோன்றியுள்ளன.

  மனைவி தலைவராகவும், கணவர் சங்கத்தின் மேலாளராகவும் இருக்கக்கூடிய அதிசயங்கள் எல்லாம் கூட்டுறவு அமைப்பில் வந்தது சோகத்திலும் மிகப்பெரிய கொடுமை! இதனால் உண்மையில் கைத்தறியை நம்பி வாழும் நெசவாளர்களின் குரல் அரசின் கவனத்துக்குச் செல்லாமலேயே இருந்து விடுகிறது.

  உண்மையில் தறி நெய்து வரும் நெசவாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஆறாவது ஊதியக் கமிஷன் பற்றி எல்லா தரப்பு ஊழியர்களும் அரசும் பேசிக்கொண்டிருக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு 2004-ல் 10 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட்டது. அதாவது ரூ. 1,000 அடிப்படைக் கூலி என்றால் ரூ. 100 கூடுதலாகக் கிடைக்கும்.

  2009 பட்ஜெட் கூட்டத் தொடரில் கைத்தறி மானியக் கோரிக்கையிலும் எந்தவித அறிவிப்பும் இல்லை! 2007 மே மாதம் 10 சதவீத பஞ்சப்படியை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். அதற்குப்பின் எந்தவித பஞ்சப்படி அறிவிப்பும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் 2004-ம் ஆண்டு விலைவாசிப்படிதான் தற்போதைய ஊதியத்திலும் வாழ்க்கையை நகர்த்தக்கூடிய பரிதாப நிலையில் நெசவாளர்கள் இருக்கிறார்கள்!

  மத்திய அரசு நெசவாளர்களுக்காக வழங்கும் நலத்திட்டங்களும் நெசவாளர்களுக்கு உரியமுறையில் கிடைப்பதில்லை. மகாத்மா காந்தி புங்கர் பீமா திட்டம், நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் போன்ற நலவாழ்வுத் திட்டங்களுக்கு உரியவகையில் நிதியை  ஒதுக்கியிருந்தாலும் நெசவாளர்கள் கையில் கிடைப்பதில்லை.

  உதாரணமாக புங்கர் பீமா திட்டத்தின்கீழ் ஒரு நெசவாளருக்கு மத்திய அரசு ஆண்டுச் சந்தாவாக ரூ.150-ம், ஆயுள் காப்பீட்டுக்கழகம் ரூ.100-ம், மாநில அரசு ரூ.80-ம் ஆக மொத்தம் நெசவாளர் ஒருவருக்கு ரூ.330 என ஆண்டுதோறும் சந்தா செலுத்தப்படுகிறது.

 இந்தத் திட்டத்தின்கீழ் நெசவாளர் குடும்பத்து மாணவர்களின் கல்விநிதியாக 9-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையில் காலாண்டுக்கு ஒரு முறை ரூ.300 வழங்க வேண்டும். ஆனால், 2008-2009-ம் கல்வி ஆண்டு முடிந்த பின்னரும் இந்தக் கல்வித்தொகை பெரும்பாலான இடங்களில் வழங்கப்படவில்லை.

  இதுபோன்ற பிரச்னைகளை எடுத்துச் சொல்வதற்குரிய தளமாக இருந்த கூட்டுறவு அமைப்புகள் தொடர்ந்து தேர்தல் நடத்தாமல் உள்ள காரணத்தால், அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடிவதில்லை. ஒன்றேகால் லட்சம் பேர் கொண்ட சத்துணவு அமைப்பாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தால் சட்டப்பேரவையில் முதல்வர் பதில் தரக்கூடிய சூழல் ஏற்படுகிறது. தமிழகத்தில் கைத்தறியை நம்பி சுமார் 7 லட்சம் குடும்பங்கள் உள்ளன. உண்மையான நெசவாளர் பிரச்னைகளை எடுத்துப் பேசுவதற்கான தளங்களும் வாய்ப்புகளும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.

  நெசவாளர் வாழ்வில் விடியல் வரவேண்டும் என்றால் மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது மாநில அரசின் பிடியில் இருக்கும் கூட்டுறவு அமைப்பை விடுவித்து, நகர்பாலிகா பஞ்சாயத்துராஜ் சட்டத்தைப்போல கூட்டுறவு அமைப்பிற்கென  தனியாகத் தேர்தல் ஆணையம் அமைக்க வேண்டும்.

  அடித்தளத்தில் இருக்கும் நெசவாளர்களை கூட்டுறவு அமைப்பின்கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு முழு ஜனநாயக உரிமைகளை அரசியல் பேதமின்றி வழங்க வேண்டும். நாட்டில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக உள்ள நெசவாளர்களின் வாழ்க்கையில் துயரம் களையப்பட கூட்டுறவுத் தேர்தல்தான் மிகச்சிறந்த வழியாக இருக்க முடியும். அதுவும் சுயேச்சையான கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் நடத்துகிற தேர்தலாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய, மாநில அரசுகள் நெசவாளர்களுக்கு அறிவித்திருக்கிற கைத்தறிப் பூங்கா திட்டங்கள் கலர்கலரான கனவுகளாகத்தான் முடியும். நெசவாளர்களுக்குக் கை கொடுக்க முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments