பொறியில் சிக்கித் தவிக்கும் பொறியியல்!
பள்ளித் தேர்வு முடிவுகள் வந்தவுடனே நிர்வாக ஒதுக்கீட்டுக்காகப் பெற்றோர்களும் பிள்ளைகளும் கல்வி நிலையங்களுக்குப்
பள்ளித் தேர்வு முடிவுகள் வந்தவுடனே நிர்வாக ஒதுக்கீட்டுக்காகப் பெற்றோர்களும் பிள்ளைகளும் கல்வி நிலையங்களுக்குப் படையெடுக்கும் காட்சியை நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது.
முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவேகூடக் கல்வி நிலையங்களின் கதவுகளைத் தட்டுகின்ற போக்கு சிறுகதை இல்லை; அது ஒரு பெருங்கதை; தனிக் கதை. இந்தக் கட்டுரையில் குறிக்க விரும்புவதெல்லாம் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான மூன்று பிரச்னைகள் பற்றித்தான்.
நிர்வாக ஒதுக்கீட்டின்படி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை என்பது கட்டாய நன்கொடை எனும் தொற்றுநோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டாலும், இந்திய மருத்துவக் கழகம் இதற்கு ஒரு லட்சுமணன் கோட்டை வகுத்திருக்கிறது. புற்றீசல் போலச் சேர்க்கக் கூடாது என்று கண்டித்துக் கூறியுள்ளது. கூடுதல் ஒதுக்கீடு, என்ன பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் நடக்காது. மருத்துவக் கல்லூரியின் முறைக்கு மாறுபட்டது பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.
பாரதிதாசன் பல்கலைக்கழக வழக்கில் உச்சநீதிமன்றம் 2001-இல் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காது என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
எனவே, புதிய பாடங்களைத் தொடங்கவோ, கூடுதல் மாணவர்களைச் சேர்க்கவோ பொறியியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி. டி.இ. (AICTE)-யின் அனுமதி பெற வேண்டியதில்லை. புதிய படிப்புகளைத் தொடங்கவும், கூடுதல் மாணவர்களைச் சேர்க்கவும் போதிய உள்கட்டமைப்பு வசதி கட்டாயம் இருத்தல் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அதற்காகக் கூடுதல் உபகரணங்களை வாங்கிவிட்டு, வரவேற்பு அதிகம் உள்ள பாடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்க்கலாம் என்று தங்களுக்குச் சாதகமாகப் பல்கலைக்கழகங்கள் தீர்ப்பை அர்த்தம் செய்யக் கூடாது. ஆனால் செய்கிறார்கள்.
சில பல்கலைக்கழகங்கள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கின்றன. ஒரு தனித்த பொறியியல் பாடத்தில் மட்டும் 500 முதல் 600 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இப்படியே இந்த நிலை தொடருமானால், பல்கலைக்கழகம் என்பது பட்டம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகத்தான் இருக்குமே தவிர, அறிவு புகட்டும் கல்விச் சாலையாக இருக்காது.
அப்படியே சுண்ணாம்பும் செங்கல்லும் செம்மையாக இருந்தாலும், அதாவது கட்டமைப்பு, கட்டட அமைப்பு வசதிகள் இருந்தாலும், ஆசிரியர் தரம், கற்றல் - கற்பித்தல் அமைப்பு, வளாக நேர்முகத்தின் மூலம் கிட்டும் வேலைவாய்ப்பு எல்லாம் எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு மாணவர் சேர்க்கை இருந்தால் தரமும் திறமும் எங்கே எங்கே என்று கேட்கத்தானே தோன்றும்.
பொறியியல் பாடங்களைக் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலைமை. ஆசிரியர் பற்றாக்குறை சொல்லி முடியாது. இப்படி கொத்துக்கொத்தாய் மாணவர்களைச் சேர்த்துவிட்டு, அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் திறமையான ஆசிரியர்கள் இல்லை என்றால் எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? படிப்பில் தரம் இருந்தால்தானே வேலைவாய்ப்புக்கான வாய்ப்புக் கிடைக்கும்?
ஆகையால், தேவை நிதானமான மாணவர் சேர்க்கை வரம்பு. எந்தவித வரம்பும் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதுவே தீர்வு காணப்பட வேண்டிய முதல் பிரச்னை.
சமூக அக்கறை கொண்ட ஆசிரியர் ஒருவர் அறிக்கை ஒன்றை அண்மையில் வலைதளத்தில் வெளியிட்டார். சினிமாவில் வரும் இரட்டை வேடம்போல ஒருவரே வெவ்வேறு கல்லூரிகளில் பாடம் நடத்துவதாக அவ்வறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் (தெலங்கானா, ஆந்திரம்) என்ற ஐந்து மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் எட்டு மாநிலங்களில் 90% கல்லூரிகளில் குறைந்தது ஒற்றை நகல் ஆசிரியராவது இடம் பெறாமல் இருக்கமாட்டார் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
ஒரே ஆசிரியர் பல்வேறு பாடங்களைக் கற்பிக்கும் ஆற்றல் வல்லவராக இருக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன. ஒரே ஆசிரியர் பல்வேறு அவதாரங்களை ஒரே நேரத்தில் எடுக்கும் முறையை ஏற்படுத்துகிறார்கள்.
தொடக்கக் கல்வியின்போது, ஒரே ஆசிரியர் ஆங்கிலம், தமிழ், கணக்கு, வரலாறு, அறிவியல் என்று எல்லா பாடங்களையும் பள்ளிகளில் எடுப்பதுபோல, பொறியியல் கல்லூரிகளிலும் எடுக்கச் செய்வது என்பது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தனக்குத் தெரியாத பாடங்களை, ஆசிரியர் எடுப்பது போன்ற ஆபத்து வேறென்ன இருக்க முடியும்?
அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) வருடாந்திர வலைதள அனுமதி வழங்கும் முறையால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரதமர் மோடியின் கணினி இந்தியா கொள்கைப்படி இந்த விரும்பத்தகாத போக்கை எளிமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வலைதள அனுமதி வழங்கும் முறைமைப்பாட்டில் ஆசிரியரின் தனித்த அறிமுக எண்ணை (Faculty Unique Identification Number - FUIN) எளிதாக வடிவமைக்க முடியும். அப்படிச் செய்துவிட்டால் ஆள்மாறாட்டத்துக்கோ, நகல் ஆசிரியர் போக்குக்கோ இரட்டை வேட நிலைக்கோ வாய்ப்பு எழாது. எந்த நிலையிலும் ஒருவர் மற்றொரு பொறியியல் கல்லூரியின் பெயர்ப் பட்டியலில் இடம்பெற முடியாது. அப்படி ஏற்படாத வரையில் தரமான பொறியியல் கல்வி என்பது சாத்தியப்படாது. இதுதான் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான இரண்டாவது சிக்கல்.
மூன்றாவது சிக்கல் கட்டாய நன்கொடைக் கட்டண வசூல்தான். இன்று நடைமுறையில் இருக்கும் மாணவர் சேர்க்கைக் குழப்பத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. இந்நோய்க்குரிய அறிகுறிகள் கணக்கிலடங்கா.
பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்தி நன்றாக அறுவடை செய்கின்றன. விண்ணப்ப விற்பனையை உயர்த்த அவர்களாகவே அவர்களுக்கே உரிய முறையில் நுழைவுத் தேர்வு வைக்கின்றனர். சில பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை ஏதோ தேசியப் பாதுகாப்பு விஷயம் போல் ரகசியமாகச் செய்யப்படுகிறது. சில மாநில அரசுகளே தெளிவில்லாத மாணவர் சேர்க்கை வாய்ப்பாட்டை மேற்கொள்கின்றன. சுருங்கச் சொன்னால் குழப்பத்தின் உச்சக்கட்டம் இது.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 1981-இல் அளித்த தீர்ப்பை யு.ஜி.சி. (UGC) புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. அதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ். நடராஜன் 1984-இல் அளித்த தீர்ப்பையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இவ்விரு தீர்ப்புகளுமே தேசிய நுழைவுத் தேர்வின் தேவையை அன்றே வலியுறுத்தின. பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்களின் தரத்தை ஒப்பீட்டு முறையில் மதிப்பீடு செய்ய வழிவகுப்பது இந்த நுழைவுத் தேர்வே என்று இந்தத் தீர்ப்புகள் கூறின.
கலப்புப்பை அணுகுமுறை காலத்தின் கட்டாயம். அது இணை நுழைவுத் தேர்வு-முதன்மை (JEE-Main) போன்ற மதிப்பீட்டு முறைகளின் வழி கிடைக்கிறது. இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IITs) மாணவர் சேர்க்கைக்காக ஜே.இ.இ. இப்போது பயன்படுத்தப்படுகிறது.
தேசிய தொழில்நுட்பக் கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும், இணை நுழைவுத் தேர்வு மதிப்பீட்டையும் இணைத்து இங்கே அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய அரசின் நிதிஉதவி பெறும் தொழில்நுட்பக் கழகங்களும், முற்போக்கு நிகர்நிலைப் பல்கலை.களும் ஜே.இ.இ. முதன்மை மதிப்பீட்டுத் தேர்வைப் பின்பற்றுகின்றன. குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸô, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முறையை (தங்கள் மாநில மொழிப் பாட விருப்பத்தை இணைத்து) பின்பற்றுகின்றன.
தமிழ்நாடும் முதலில் பொது நுழைவுத் தேர்வு முறையைத்தான் பின்பற்றி வந்தது. 2006-இல் ஆனந்தகிருஷ்ணன் குழு பொது நுழைவுத் தேர்வு முறையைப் புறந்தள்ளி, தொழில்சார் பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணே போதுமென்று கூறியது. இந்த முடிவுதான் பொறியியல் பட்டதாரிகள் தரத்தில் பெருஞ்சரிவை ஏற்படுத்தியது.
டாக்டர் ஆனந்தகிருஷ்ணன், பல நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய அளவிலான குழு 2003-இல் சமர்ப்பித்த அறிக்கையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் ஏற்படும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்வு தவிர்க்க முடியாத வரவேற்பாகும் என்ற கருத்தும் மற்றொரு பின்னடைவாகும். பிளஸ் 2 வகுப்பில் வானுயர மதிப்பெண் பெற்றவர்களில் பலர் மாபெரும் தோல்வியை அடுத்தடுத்தப் படிப்புகளில் தழுவினர் என்பது உண்மை.
இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு உண்டு. ஜே.இ.இ. முதன்மைக்கு சீரான, எல்லா மாநிலங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பாடத் திட்டம் தேவை. ஆண்டுதோறும், மையப்படுத்தப்படாத தேர்வுகள் பலமுறை நடத்தப் பெற வேண்டும். தொழில்சார் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குப் பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும் கூட்டி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
முதலில், ஜே.இ.இ. மெயின், பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் இணைத்து மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது என்பதை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டாயமாக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்குத் திட்ட வழிமுறையை உருவாக்கி அதை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும்.
குஜராத், மகாராஷ்டிரம், ஒடிசா போன்ற மாநிலங்கள் இந்த முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்கி நல்ல பயனையும் பெற்றுள்ளன. தனியார் தொழில்சார் கல்லூரிகளில் தர மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்கிய முன்னோடி மாநிலமான தமிழ்நாடும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனிநிலை அடையாள எண்ணை (Unique Identification Number) வலைதளம் வழியாக மாணவருக்கு வழங்கலாம். ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிந்தபின், மாணவர்களைப் பற்றிய தகவல்களை உயர்கல்வி நிலையங்கள் வலைதளத்தில் தருவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இதில் மாணவரின் தனிநிலை அடையாள எண், தரவரிசை, விருப்பம், இன்றியமையாக் குறிப்புகளைத் தருதல் வேண்டும். மாணவர் சேர்க்கைக் கோட்பாடு பற்றிய செய்தி இடம் பெறுவது நல்லது. கட்டாய நன்கொடை எனும் அரக்கனை ஒடுக்க இதுவே வழி!
மேலே குறிப்பிட்ட மூன்று பிரச்னைகளையும் தீர்க்காத வரையில், பொறியியல் கல்வியும் பட்டமும் அடையாளமாக இருக்குமே தவிர, வேலைவாய்ப்புக்கோ, மாணவர்களின் வருங்கால வளர்ச்சிக்கோ, தேச முன்னேற்றத்துக்கோ பயன்படாது!
கட்டுரையாளர்:
டீன், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
தொழில்சார் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும் கூட்டி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.