உச்சநீதிமன்றத்தை எதிர்நோக்கி...!
ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள உத்தவ கீதையில், யுதிஷ்டிரர் இல்லாதபோது பாண்டவர்களில் நால்வர் பகவான் கிருஷ்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டனர்
ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள உத்தவ கீதையில், யுதிஷ்டிரர் இல்லாதபோது பாண்டவர்களில் நால்வர் பகவான் கிருஷ்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டனர். கண்ணா, "கலியுகம் என்றால் என்ன? அப்போது என்ன நடக்கும்?' என்றனர். "உங்களுக்குக் கலியுகத்தின் சூழலை செயல்படுத்தல் மூலம் விளக்குகிறேன்' என்றான் கண்ணபிரான் புன்முறுவலுடன். வில் ஒன்றினை எடுத்து நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் எய்தான். அவற்றைத் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்குமாறு ஏவினான்.
அர்ஜுனன் ஒரு திசையில் சென்றான். அம்பினை எடுத்து வந்தான். இனிமையான குரல் ஒன்று அவன் காதில் வந்தது. குயில் ஒன்று தன்னை மறந்து கூவிக் கொண்டிருந்தது. ஆனால், உயிருள்ள முயலின் சதையைச் சுவைத்துக் கொண்டிருந்தது. அந்த முயல் அப்போது வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அர்ஜுனனுக்கு இது தூக்கிவாரிப்போட்டது. "ஒரு தெய்வீகப் பறவை இப்படியொரு கொடிய செயலைச் செய்கிறதே' என்று துடித்தான். அந்த இடத்தை விட்டு உடனே சென்றான்.
ஐந்து கிணறுகள் சூழ்ந்த ஓர் இடத்திலிருந்து பீமன் ஓர் அம்பை எடுத்துவந்தான். ஒரு கிணற்றைச் சுற்றி மற்ற நான்கும் அமைந்திருந்தன. நான்கு கிணறுகளிலிருந்தும் இன்சுவை நீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், நடுவில் உள்ள கிணற்றில் சொட்டுத் தண்ணீர் கூடக் கிடையாது. பீமனுக்கு இது புரியாத புதிராக இருந்தது.
நகுலன் தான் சென்ற திசையிலிருந்து அம்பு ஒன்றைக் கொண்டு வந்தான். வருகின்ற வழியில் பசு ஒன்று கன்று ஈனும் தறுவாயில் இருப்பதைப் பார்த்தான். பின்பு அது கன்றை ஈன்றவுடன் பசு அதனை நாவால் நக்கிக் கொண்டிருப்பதையும் கண்டான். கன்றுக்குட்டி சுத்தமான பிறகும் கூட, பசு நாவால் நீவுவதை நிறுத்தவில்லை. மக்கள் மிகவும் சிரமப்பட்டுப் பசுவையும் கன்றையும் பிரித்தனர். அதற்குள் கன்று மிக மோசமாகக் காயம்பட்டிருந்தது. சாதுவான பிராணி ஒன்றின் இந்தச் செயல் நகுலனுக்கு அதிர்ச்சியூட்டியது.
சகாதேவன் மலைக்குக் கீழ் விழ்ந்திருந்த அம்பை எடுத்தான். அப்போது பெரிய பாறை ஒன்று உருண்டு வீழ்வதைக் கண்டான். அது உருண்டோடும்போது வழியிலுள்ள குன்றுகளையும் மரங்களையும் நசுக்கிக் கொண்டே வந்தது. ஒரு சின்னஞ்சிறிய தாவரம் அதனைத் தடுத்து நிறுத்தியது. சகாதேவனால் இதை நம்பவே முடியவில்லை.
வியப்பில் திரும்பிய நால்வரும் இந்த நிகழ்வுகளுக்குள்ள உள்ளர்த்தத்தைக் கண்ணனிடம் கேட்டனர். முகத்தில் புன்னகை தவழக் கண்ணனும் விளக்க முற்பட்டான். கலியுகத்தில் பிறந்தவர்கள், பண்டிதர்கள் இனிக்க இனிக்கப் பேசுவார்கள். மிகுந்த அறிவு படைத்தவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், குயில் எப்படி முயலை இம்சித்ததோ, அதேபோல் அவர்கள் மற்றவர்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திவிடுவார்கள்.
கலியுகத்தில் ஏழைகள், பணக்காரர்களுக்கு மத்தியில் வாழ்வார்கள். செல்வந்தர்களிடம் சொத்துக்கள் குவிந்திருக்கும்; அபரிமிதமாகவும் இருக்கும். ஆனால், ஏழைகளுக்குக் கொடுக்க பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வரமாட்டார்கள். நான்கு கிணற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது, நடுவில் ஒரு கிணறு வற்றிக் கிடப்பது போல.
கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பாசத்தைப் பொழிவார்கள். அந்த அளவுகடந்த பாசம் குழந்தைகளை பாதிப்பதோடு அவர்களுடைய வாழ்க்கையையும் சிதைத்துவிடும். பசு தன் கன்றுக்குட்டியை எல்லைமீறி நக்கிக்கொடுத்ததற்கு ஒப்பாகும் இது.
கலியுகத்தில் மக்கள் ஒழுக்கம், பண்பாடு, நீதி, நேர்மை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் உருண்டோடும் பாறையைப் போல் இருப்பர். எவராலும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. கடவுளின் நாமாவளி ஒன்றுதான் அவர்களை அழிவுப்பாதையிலிருந்து சின்னஞ்சிறு தாவரத்தைப் போலக் காப்பாற்றும் என்று கூறினான் குழலூதும் கண்ணன்.
இன்றைய சூழலில், தொழில்சார் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை முறையை, பகவான் கண்ணனின் இந்த அரிய விளக்கத்துடன் ஒப்பிடுவது மிகப் பொருத்தமுடையதாக உள்ளது.
குயில்பாடும் பாட்டைப்போல சில சிறந்த தொழிற்கல்வி பயிற்றும் கல்லூரிகள் மிகவும் பொருத்தமான, தேவையான, தரமான கல்வியைத் தருகின்றன. ஆனால், பெற்றோர்களின் பிடரியை நெருக்கும் வகையில் கட்டாய நன்கொடை மற்றும் இன்னபிற கட்டணங்கள். இந்தக் கட்டணம் என்ற பெயரில் வாங்கப்பெறும் தொகைகள் சொல்லி மாளாது.
தேவைக்கு மீறி நக்கிக்கொடுத்த பசுவைப்போல, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்தும், தேவைக்கு மேல் அவர்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி இடங்களை அதிகவிலை கொடுத்து வாங்கி உச்சாணிக் கிளையில் தங்கள் பிள்ளைகளை நிறுத்துவர்.
பிளஸ்டூ தேர்வுக்கு அவர்கள் செல்வதற்கு முன்பாகவே இத்தனை முன்னேற்பாடுகளும் செய்யப்பெறும். இப்படிப் பெற்றோர்களுக்கே தங்கள் பிள்ளைகளின்மீது நம்பிக்கை இல்லையென்றால், சமுதாயத்திற்கு எப்படி எதிர்கால டாக்டர்களிடமும் பொறியியலாளர்களிடமும் (என்ஜினியர்களிடமும்) நம்பிக்கை வரும்?
பல நல்ல கல்லூரிகள் மிக அருகில் அல்லது மாநிலத்தில் உள்ளன. இந்தக் கல்வி நிலையங்களின் தனித்த நல்லமை, பசித்துவாடும் மாநிலம் அல்லது வட்டாரத்தின் சிக்கல்களுக்கு ஒட்டுமொத்தமான தீர்வைக் கொடுக்க இயலாது.
மேலாண்மையில் பட்டமேற்படிப்புக்கும் (MBA) இது பொருந்தும். மாணவர்களுக்கு நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) விவரம், வால்ஸ்ட்ரீட் (WALLSTREET), யூரோ நெருக்கடி (EURO CRISES) போன்ற இன்னபிற செய்திகளும் கற்பிக்கப்படும்.
இப்பாடங்கள் யாவும் கற்போரை உலக அளவில் மேலாண் வல்லுநர்களாக உருவாக்கும் நோக்கிலேயே கற்பிக்கப்படுகின்றன. ஏதோ எல்லோரும் உலக அளவிலான பதவிகளுக்குத் தேவை என்கிற ஒரு தவறான எண்ணத்தில் இவை கற்பிக்கப்படுகின்றன.
இங்கே உள்ளூரில், வட்டாரத்தில், மாநிலத்தில் மற்றும் தேசிய அளவில் சிக்கல்களுக்குப் பஞ்சமே இல்லை. அவற்றிற்குத் தீர்வு காண்பதைப்பற்றி நாம் அக்கறை காட்டுவதில்லை. அருகில் நல்ல நல்ல கல்வி நிலையங்களை வைத்துக் கொண்டு, உள்நாட்டுச் சிக்கல்களுக்குத் (நீரில்லா வறண்ட கிணற்றைப்போல) தீர்வு காண்பதை நினைத்துப் பார்ப்பதே இல்லை.
தனிமனிதனின் ஒழுக்கமும், பண்பாடும் நாளுக்குநாள் தேய்ந்து வருவதைப் போலக் கல்வி நிலையங்களின் தரமும், மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையும் குறைந்து வருகின்றன. கடவுள்தன்மை மிக்க ஒரு குறுக்கீடு கட்டாயத் தேவையாகிறது.
கல்வி நிலையங்களில் உள்ள தரக்குறைபாடு எனும் பிரச்னைக்கு அரசு, கடவுளாக இருந்து செயல்பட்டு தவறு செய்கின்ற கல்வி நிலையங்களைத் தட்டிக்கேட்க வேண்டும். அது அரசு நடத்துவதாக இருந்தாலும் சரி, அரசு உதவிபெறும் கல்வி நிலையமாக இருந்தாலும் சரி அல்லது தனியார் நடத்துவதாக இருந்தாலும் சரி, தயங்காமல் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
நன்றாகச் செயல்படும் கல்வி நிலையங்கள் எதுவாக இருந்தாலும் (அரசு அல்லது தனியார்) அதைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை சிக்கலைப் பொருத்தமட்டில் கடவுள் நிலையில் உச்சநீதிமன்றம் இரண்டு முக்கியமான வழக்குகளில் நல்லதொரு தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஜூலை 2013-இல் உச்சநீதிமன்றம் துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு கொண்டுவந்த பொது நீட் (NEET) எனப்படும் மாணவர் சேர்க்கைக்குரிய பொது நுழைவுத்தேர்வுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. பொது மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்குரிய நுழைவுத் தேர்வுக்குத்தான் அந்தத் தடை விதிக்கப்பட்டது. எனினும், உச்சநீதிமன்றம் இந்த ஆணையை மறுபரிசீலனைக்குப் பரந்த அமர்வுக்கு அனுப்பிவிட்டது.
பரந்துபட்ட அமர்வு, பதல் வழக்கில் கருத்துமாறுபாடு கொண்ட நீதிபதி ஏ.ஆர்.தவேயின் சிறுபான்மைத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் தன்னாட்சி, இந்த NEET நுழைவுத்தேர்வால் கடுமையாக பாதிக்கப்படாது என்பதுதான் தவேயின் மூல ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல மாணவர்களையே இந்த NEET நுழைவுத்தேர்வு வழங்கும் என்பது அவருடைய பார்வை. இது கல்வி நிலையங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தனியாகத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் முன்பாக உள்ள இரண்டாவது பிரச்னை என்னவென்றால், சல்மான் குர்ஷித் கொடுக்க வேண்டிய அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய தீர்ப்பாகும். உச்சநீதிமன்றத்தால் இவர் ஆகஸ்ட் 2014-இல் நியமிக்கப்பட்டார். கட்டாய நன்கொடைச் சிக்கல் குறித்த விரிவான பகுப்பாய்வை நிகழ்த்தி, அறிக்கை வழங்க வேண்டும் என்பதுதான் அவருக்கு இடப்பட்ட கட்டளை ஆகும்.
இதுவரையில் அதுபற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மாணவர் சேர்க்கைக் காலம் தொடங்கிவிட்டது. முன்பதிவு கவுன்ட்டர்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டன.
கறுப்புப் பண அறிக்கை ஒன்று, வருடாந்திர நிகர வருமானம் கட்டாய நன்கொடைத் தொழிலின் மூலம் கிடைப்பது 50,000 கோடி ரூபாய்க்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள் மூலமாக மட்டும் 12,000 கோடியாம். அதனால், சல்மான் குர்ஷித்தின் அறிக்கையை வெளியிடவும் நடைமுறைப்படுத்தவும் இதைவிடப் பொருத்தமான நேரம் கிடைப்பது அரிது.
உச்சநீதிமன்றம் உரிய முறையில் நல்ல விடியலைத் தரவேண்டும். தகுதியைக் கையில் வைத்துக்கொண்டு ஏங்கும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தைத்தான் கடவுளாக மலைபோல் நம்பிக் காத்திருக்கிறார்கள். மாணவர் சேர்க்கையில் உள்ள முள்கள் நீக்கப்பட்டு அது மலராக மணம் வீசட்டும்.
கடவுள்தன்மை மிக்க ஒரு குறுக்கீடு கட்டாய தேவையாகிறது. கல்வி நிலையங்களில் உள்ள தரக்குறைபாடு எனும் பிரச்னைக்கு அரசு, கடவுளாக இருந்து செயல்பட்டு தவறு செய்கின்ற கல்வி நிலையங்களைத் தட்டிக்கேட்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.