தேவையற்ற வேகத்தடை!
நம் வீட்டிற்கு வந்த விருந்தாளி தாகத்திற்கு ஏதேனும் கேட்டால், தொண்டை வறட்சியைப் போக்க, உடனே தண்ணீர் கொடுப்போம்.
நம் வீட்டிற்கு வந்த விருந்தாளி தாகத்திற்கு ஏதேனும் கேட்டால், தொண்டை வறட்சியைப் போக்க, உடனே தண்ணீர் கொடுப்போம். அவரிடம் உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, ரத்தக்கொதிப்பு இருக்கிறதா என்று கேட்டு அதற்கேற்ப பழச்சாறையோ, குளிர்பானத்தையோ, மோரையோ, காபி, டீ போன்றவற்றையோ கொடுப்பதில்லை. அதுபோல கல்வித்துறையில், அடிப்படைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு வேண்டும் என்றால், காலந்தாழ்த்தாமல் தயங்காமல் சில உடனடி தீர்வுகளைக் கொடுக்க வேண்டும். பகுப்பாய்வாளர்களும், படித்தவர்களும் பெரிய பெரிய சிக்கல்களை எல்லாம் பட்டியலிட்டு, மேம்பாட்டிற்கு வேகத்தடையாக இருக்கக்கூடாது.
காலங்காலமாக பிரச்னைகளை முன்வைத்து வளர்ச்சி எனும் தேருக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோமே தவிர, மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை முடுக்கி விடுவதே இல்லை. கல்வித் துறையின் அடிப்படைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காணாமல், அத்தனை சிக்கல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு அதற்கெல்லாம் ஒட்டுமொத்தத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அண்மையில் புதிய கல்விக்கொள்கை வரைவுத்திட்ட மாதிரி வடிவமைக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூடுதல் கால அவகாசமும் வழங்கி செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக்களை வரவேற்றது. இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய வழி காணப்பட்டது. பலரும் கருத்துகளைப் பதிவும் செய்தனர். பரிந்துரைக் காலமும் முடிவுற்றது.
Advertisement
Advertisement
பல செயல்பாட்டுப் பிரிவுகள், சமூக அமைப்புகள், சிந்தனையாளர்கள், பள்ளிக்குழுக்கள் மற்றும் பல்வேறு குழுமங்கள் கருத்துகளை முன் வைத்தனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்ற பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்த முடிவு செய்தது. இப்போது செயல்பாட்டிற்குரிய நேரம்.
பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யத் தனியே ஒரு குழுவை வடிவமைக்க முடிவு செய்துள்ளது அமைச்சகம். திருத்தி அமைக்கப்பட்ட வரைவுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. தேசிய கல்விக்கொள்கை எந்த நாளில் வலைதளத்தில் வெளியிடப்பட்டதோ அன்றிலிருந்து விமர்சனங்கள் இடைவிடாமல் வந்தவண்ணம் உள்ளன.
இந்திய அரசியல் சாசனத்தில் 46-ஆவது திருத்தமும் 82-ஆவது திருத்தமும் கொண்டு வரப்பட்டன. கல்வியை இசைந்து செல்லும் பட்டியலில் (Concurrent list) சேர்க்க 46-ஆவது திருத்தம் வழிவகை செய்தது. 82-வது திருத்தம் கல்வி அமல்படுத்துவதற்குரிய உரிமை என்று கூறியது. இந்தியாவில் கல்விக் கொள்கையை வகுப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு இரண்டு தடவை கல்விக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது.
முதலாவது கல்விக் கொள்கை 1968-லும், இரண்டாவது கல்விக் கொள்கை 1986-லும், 1992-ஆம் ஆண்டில் அதில் திருத்தமும் கொண்டு வரப்பட்டன. மாநில அரசுகளின் துணையோடு நாட்டின் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என்று ஒருங்கமைப்பு நோக்கில் இவை வகுக்கப்பட்டன. இரண்டுமே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கின. கருத்து மாறுபாடுகள் தொடர்ந்து இருந்துவந்தன.
முதலாவது கல்விக் கொள்கை 1976-இல் இந்திய அரசியல்சாசனத் திருத்தத்திற்கு முன் வைக்கப்பட்டது. பின்னது அதற்குப்பின்னால் உள்ளதாகும். இரண்டுமே கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டன. 10+2+3 முறை, மும்மொழிக் கொள்கை, சர்வ சிக்ஷô அப்யான், தகவல் தொழில்நுட்பம் போன்ற சிக்கல்களை வெற்றியுடன் சந்தித்தன. எத்தனை வேறுபாடுகள் இருந்த போதிலும் கல்வி எனும் பந்து சுழன்றது.
மூன்றாவதாக, இப்போது நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவுதான் முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியத்தின் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவுத்திட்டம் ஆகும். இது 217 பக்கங்களைக் கொண்டது. 9 பிரிவுகளையும் 90 பரிந்துரைகளையும் கொண்ட ஆவணமாகத் திகழ்கிறது. விரிவான விவாதம், கலந்தாய்வுகள், கூட்டங்கள் மற்றும் உரையாடல்களுக்குப் பின்னர்தான் இது வெளியிடப்பட்டது. கல்வி தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இது வெளிவந்தது.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் ஒழுக்கத்தின் அடிப்படையிலான கல்விக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஆசிரியர் கல்விச் சீரமைப்பு, தொழில்சார் கல்வி, மாணவர் சேர்க்கைக்கு தேசிய - மாநில நுழைவுத்தேர்வுகள் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைக் கல்வியில் சேர்த்தல் (ICT), கல்வி பெறும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வளர்ச்சி ஆகியன இப்பரிந்துரையில் அடங்கும். நடுநிலைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இதில் உள்ள முக்கியமான பரிந்துரை. பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களில் சில உடனடி நடைமுறைப்படுத்தற்குரியவை. கருத்து வேறுபாடு உள்ளவை எல்லாம் பரந்துபட்ட விவாதத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவை, அவ்வளவே!
கல்விக் கொள்கை போன்ற மாபெரும் திட்டமானது முழுமைத்தன்மையை உடனடியாக எட்டிவிடாது. தொடர்ந்து சிக்கல்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆகையால், எளிதில் நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடியனவற்றை தாமதப்படுத்துவது நல்லதல்ல. கல்வி கண்ணோட்டத்தில் நடைமுறைப்படுத்துவதுதான் சாலச் சிறந்தது.
இந்தப் புதிய கல்விக் கொள்கை நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்படுகிறது என்பதாலேயே, "கல்வியே காவி மயமாக்கப்படுகிறது' என்று ஓலமிடுவது அரசியலே தவிர, கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற அக்கறையின்பாற்பட்டதல்ல. கல்வியைத் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி என்பதும் விவரமில்லாத பேச்சு. ஆசிரியர் கல்விச் சீரமைப்பு, நிர்வாகச் சீர்திருத்தங்கள், தொழில்சார் கல்வி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, தகவல் தொலைத்தொடர்பைத் தொழில்நுட்பக் கல்வியில் சேர்த்தல் போன்றவற்றில் எங்கிருந்து காவி மயம் வந்தது என்று தெரியவில்லை.
இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவுத்திட்டத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு என்னவென்றால், இத்திட்டம் சிறுபான்மையினரால் நடத்தப்பெறும் கல்வி நிலையங்களின் கோட்பாட்டை குறுக்கிடுகிறதோ என்ற அச்சம்தான். மதபோதனை சாராத கல்வியில் சிறுபான்மையினருக்கு என்று சலுகைகள் எதற்காக என்கிறது புதிய கல்விக் கொள்கை. இது இன்று, நேற்று எழுப்பப்படும் கேள்வி அல்ல. உச்சநீதிமன்றம், உண்ணிகிருஷ்ணன் வழக்கில் (1993) அரசியல் சாசனப்பிரிவு 30-ஐ 19(1)(G)-யுடன் இணைத்தாலும், உச்சநீதிமன்றம் TMA Pai (2003) வழக்கில், உச்சநீதிமன்றத்தின் மற்றொரு St.Xaviers College வழக்கை குறிப்பிட்டுள்ளது.
அரசியல் சாசனம் 30-ன்படி சிறுபான்மையினருக்கு உரிமை வழங்கப்பட்டதன் நோக்கமே பெரும்பான்மையினருக்கு ஒத்த நிலையில் சிறுபான்மை சமூகத்தினரும் உரிமை பெறுகிறார்கள் என்பதை உணர்த்தவே என்பதுதான் அத்தீர்ப்பின் வாசகமாகும். பிரிவு 30 என்பது சமநிலைப்படுத்துவதற்கு வகுக்கப்பட்டதே தவிர, முரண்பாட்டை வளர்ப்பதற்காக அல்ல.
சிறுபான்மையினருக்கு அளித்த சில உரிமைகள், பெரும்பான்மையோர் நடத்தும் கல்விக்கூடங்களுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் சாசன கட்டாய நடைமுறை என்ற போர்வையில் மத்திய - மாநில அரசுகளின் கோட்பாடுகள் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு விஷேச உரிமைகளை வழங்கியது. அது தவறாக பயன்படுத்தப்பட்டு கல்வி வணிகத்துக்கு உதவுகிறது என்பதுதான் புதிய கல்விக் கொள்கைக்கான ஆலோசனைக் கருத்துகளில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு.
இத்தகைய வேறுபாட்டைப் பற்றி 1972-இல் இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஜி.பி. கஜேந்திரகட்கர் தேசிய ஒருமைப்பாட்டுத் தத்துவம் குறித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற மற்றும் அரசியல் சாசனக் கல்விக் கழகத்தில், நேருவின் மூன்றாவது நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்தும்போது இக்கருத்துகளைக் கூறினார் இவர். அதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.
சிறுபான்மையினர் வழங்கும் மாநில சி.பி.எஸ்.இ. அடிப்படையிலான பள்ளிக் கல்வி, கலை, அறிவியல், மொழியியல், கருத்துகள், சட்டம் உள்ளிட்ட உயர்கல்வி போன்ற பொதுக்கல்வியில் ஆசிரியர்களும் மாணவர்களும் இனக்காழ்ப்பில்லாவதர்களாக உள்ளனர். சிறுபான்மையினருக்குரிய மொழி, பண்பாடு, எழுத்துமுறை ஆகியனவற்றிற்கும் பள்ளிக் கல்வி, கலை இலக்கியக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்விச் சாலைகள் போன்ற கல்வி நிலையங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அத்தகைய சூழலில் இத்தகைய கல்வி நிலையங்களுக்கு மதம் மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மை உரிமைகளை அரசியல் சாசனப் பிரிவு 29 மற்றும் 30-இன் அடிப்படையில் பொதுவாகவும் 30(1)-இன் அடிப்படையில் உறுதியாக வழங்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் நீதிபதி கஜேந்திரகட்கர்.
சுருங்கச் சொன்னால் தங்கள் மொழி, பண்பாடு, எழுத்துமுறை ஆகியனவற்றைக் காக்க, கல்விநிலையங்களை நடத்தினால், அவர்களுக்குச் சிறுபான்மை இன உரிமை வழங்கப்பட வேண்டும். மற்ற கல்வி நிலையங்களைப்போல் நடத்தும் B.Com, B.B.A., B.E., M.B.A. ஆகிய பாடங்களைப்போல அவர்கள் பொதுக்கல்வி பாடங்களைக் கற்பித்தால், அத்தகைய சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு அரசியல் சாசனம் 29 மற்றும் 30-இன்படி, சிறுபான்மை சிறப்புரிமை வழங்குதல் தேவையற்றது என்கிறது புதிய கல்விக் கொள்கை.
சிறுபான்மை உரிமைச் சிக்கல் என்பது, (கல்வி உட்பட) பல்வேறு அரங்கங்களில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்ட நோக்கிலும் வாதாடப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை இந்த ஒரே ஒரு சிக்கலுக்காக நிறுத்திவைப்பது சரியல்ல.
கல்யாண வீட்டு விருந்தில் உப்புக் குறைந்துவிட்டது என்பதற்காகக் கல்யாணத்தையே நிறுத்துவது எப்படி சரியில்லையோ அதுபோல இந்த ஒரு பிரச்னையால் புதிய கல்விக் கொள்கை தடைபடுவது தேவையில்லாதது. பிரச்னைக்கோ கருத்து வேறுபாடுக்கோ உள்ளானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு சீர்திருத்தப் பணிகள் தொடர வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் சொல்லப்பட்ட நடைமுறைக்கேற்ற பரிந்துரைகளை செயல்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். உடனடியாக ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை செயல்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டுவது சரியல்ல!
கட்டுரையாளர்:
முதன்மையர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.