FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

பணமதிப்பு குறைத்தல் எனும் நவம்பர் எட்டாம் தேதி மகா யக்ஞத்திற்குரிய பூர்ணாகுதிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அதற்காகவே காத்திருக்கிறார்கள்.

25 ஜனவரி 2024, 12:31 am IST
பகிர்:

பணமதிப்பு குறைத்தல் எனும் நவம்பர் எட்டாம் தேதி மகா யக்ஞத்திற்குரிய பூர்ணாகுதிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அதற்காகவே காத்திருக்கிறார்கள்.

புதிய வருடம் பிறந்த சூட்டோடு அரசியல், பொருளாதார விமர்சகர்கள் மற்றும் நிபுணர்கள் செலாவணியைச் செல்லாதாக்கும் திட்டத்தை விமர்சனம் செய்யத் தொடங்குவார்கள். ஆதரிப்போர் ஆதரிப்பார்கள் எதிர்ப்பவர்கள் எதிர்ப்பார்கள். நடுவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குக் குழப்பம் இருக்கும். ஒரு மாயை ஏற்படும்.

இத்தகைய மாயைக்கு இடையில் நம்முன் உள்ள கேள்வியெல்லாம் இந்த டிசம்பர் 30-ஆம் தேதி கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்துக்கு முடிவா, இல்லை இந்தியாவின் புதிய சகாப்தத்திற்குரிய தொடக்கமா என்பதுதான்.
நேர்முகமாகச் சிந்திப்பவர்களுக்கு இது புதிய சகாப்தத்திற்கோர் தொடக்கவிழா (சங்கல்பம்) என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக உயர்கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட இது வழிகோலும் என்பது உறுதி.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரதமர் மோடி, சில காபினெட் அமைச்சர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த செயலர்கள் முன்பாக உரையாற்றினார். இதில் பத்து குழுவாக அமைத்து அந்தந்தத் துறைகளைச் சார்ந்த செயலர்களிடமிருந்து ஆளுகை (நிர்வாகம்) குறித்த அறிக்கையைச் கேட்டிருந்தார்.

வேளாண்மை, போக்குவரத்து, எரிசக்தி, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முறையான நிர்வாகத்திற்குரிய புதிய வழிமுறைகளைப் பரிந்துரைப்பதுதான் இதன் அடிப்படை நோக்கமாகும். இந்தியர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் இது அமைய வேண்டும்.
நவம்பர் 8-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய அறிவிப்பு இந்தச் செயலர்களின் குழுவிற்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும். இந்தக் குழு கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுப்பதற்குரிய முறைகளை மனதில் கொண்டு செயல்படும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

கல்வித் துறையிலும் இத்தகைய மாற்றங்கள் கருப்பு பணத்திற்கு ஒரு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. உயர்கல்வியை நடத்திச் செல்லும் UGC, AICTE, NCTE போன்ற அதிகார அமைப்புகள் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பகுதிகளை விட்டுவிட்டு மிகவும் குறைந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பகுதியில் அதிக கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு ஒளிவு மறைவற்ற மாணவர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேசிய மதிப்பீட்டுக் கல்விகுழு (NAAC),தேசிய ஆய்வுக்குழு (NIRF) ஆகியன வழங்கிய அங்கீகாரத்தை கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இவற்றை AICTE, NCTE போன்ற அமைப்புகளும் மனதிற்கொள்ள வேண்டும். தேர்வு எப்படி நடத்த வேண்டும், பாட வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் போன்ற விஷயங்களைப் பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்க வேண்டும்.
இத்தருணத்திற்கு தேவையானது ஒரு தீர்க்கமான, தெளிவான கொள்கைதான். மாணவர் சேர்க்கை என்ற கொள்கையை முதலில் பார்ப்போம்.

தேசிய பொது நிதி மற்றும் கோட்பாட்டுக் கழகம், (National Institute of Public Finance and Policy) 2013-இல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப கட்டாய நன்கொடையாக தனியார் கல்லூரிகள் வசூலித்த பணம் மட்டும் 5,953 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. இது எல்லாமே கருப்புப் பணம்தான்.

தேசிய நுழைவுத் தேர்வு குறித்து (சஉஉப) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் இந்தப் பணம் 2016-இல் நிச்சயமாகக் குறைவாக இருக்கும். இருந்தும் சிக்கல் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.

கருப்புப் பணச் சிக்கல் என்பது மீண்டும் மயில் ராவணன் தலைபோல் மாணவர் சேர்க்கையின் போது தலைநீட்டும். உச்சநீதிமன்றத்தின் மூவகைச் சோதனைகளை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் மீண்டும் மீண்டும் அது தலைகாட்டிக் கொண்டே இருக்கும்.

நேர்மை, ஒளிவு மறைவின்மை மற்றும் வணிகவியல் நோக்கமின்மை ஆகியன தான் உச்சநீதிமன்றத்தின் மூவகைச் சோதனைகளாகும். TMA PAI நிறுவன வழக்கு (2002), Islamic Academy (2003),P.A. Inamdar (2005) வழக்கு ஆகியனவற்றில் உச்சநீதிமன்றம் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமைகளைத் தன் தீர்ப்புகளின் மூலம் வலுவூட்டியிருக்கிறது.

கட்டாய நன்கொடை வசூலிப்பதையும் சாடியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் மூவகைச் சோதனை வாய்பாடு மாணவர் சேர்க்கைக்கு நல்ல வழிகாட்டல்.
2014-இல், மூத்த வழக்குரைஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தை விசாரணைக் குழு வல்லுநராக (Amicus Curiae) நியமித்தது உச்சநீதிமன்றம்.

அனைத்து மாநிலங்களின் (குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிரம்) தலைமைச் செயலர்கள் கட்டாய நன்கொடை வாங்கும் தொழில்சார் கல்வி நிலையங்கள் பற்றிய தகவல்களை சல்மான் குர்ஷித்திடம் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்த மோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சல்மான் குர்ஷித்திடம் அறிக்கை கேட்டிருந்தது. அந்த அறிக்கை இன்று வரையில் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குள் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் 2017-ஆம் ஆண்டிற்குரிய மாணவர் சேர்க்கை முறை தொடங்கிவிட்டது.

அண்மையில் வெளிவந்த செய்தித்தாள் அறிக்கை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இணைந்த நுழைவுத் தேர்வை (JEE) அனைத்து பொறியியல் கல்வி நிலையங்களுக்கும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடுவதாக் கூறியுள்ளது.
இதனை 2018-லிருந்து அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவு. சட்டச் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களிடம் இதுபற்றிய ஆலோசனை நடத்த வேண்டும். இது கட்டாய நன்கொடை என்ற சிக்கலுக்கு தீர்வு காண வழி வகுக்க வேண்டும்.

பணமதிப்பு குறைத்தல் எனும் காலகட்டத்தில் ஒரு வலுவான மையத்தேர்வு முகமையை அமைக்க வேண்டும். GRE, GMAT, GATE  போல இது இருக்க வேண்டும். இந்த மையத் தேர்வு முகமை Central Testing Agency (CTA) NEET, JEE, CAT, CLAT ஆகியனவற்றை ஆண்டிற்கு இரண்டு முதல் நான்கு முறை பல மொழிகளில் நடத்த வேண்டும்.

அது கிராமப்புற மாணவர்களுக்குப் போதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது என்ற பேச்சுக்கு இடமில்லாமலும் போகும்.

இந்த இபஅ ஒவ்வொரு மாணவனின் அடிப்படைத் தகவல்களை கணினிவழியில் (Online) துல்லியமாகப் பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும். இதற்கெனத் தனித்த அடையாளத்தைக் கொண்டு MHRD நடத்தும் எந்த தேர்வையும் மாணவர்கள் எழுதலாம்.

நாட்டிலுள்ள எந்தக் கல்வி நிலையத்திற்கும் தான் விரும்பிய பாடத்தைக் குறிப்பிட்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான தனி அடையாள எண்ணை உபயோகித்து எந்தக் கல்வி நிலையத்திலும் விண்ணப்பிக்கலாம். தனியார் கல்வி நிலையங்கள் மாணவனின் NEET/JEE/CLAT போன்ற நுழைவுத் தேர்வு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஆகிய இரண்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்போது சரியான பாதையில் சேர்க்கை நடக்கிறது என்ற திருப்தியும் கிடைக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை அரசே நடத்த வேண்டும். அதே நேரத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மாணவர் சேர்க்கை முறையில் கொண்டுள்ள உரிமையில் தலையிடக் கூடாது.

அரசு கலந்தாய்வின் மூலம் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் பட்டியலை அனுப்பும்போது காலந்தாழ்த்தி அனுப்புகின்றன. தேசியத்தன்மை கொண்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கென்று உள்ளுர் மாணவர் சேர்க்கைக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

ஒரு தனியார் கல்லூரி, மையத்தேர்வு முகமை மற்றும் +2 மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைத் தானாகவே சேர்க்கலாம். மாணவர் சேர்க்கைத் தகவல்களை அரசுடன் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் ஒளிவு மறைவின்மையும் நேர்மையும் காக்கப்படும்.

விண்ணப்பதாரரோ அல்லது மாணவர் சேர்க்கை சம்பந்தமாக அக்கறை காட்டுபவரோ எளிதாகத் தங்களுடைய நிலை குறித்து அறிந்துகொள்ளலாம். வற்புறுத்தல் நிலையிலிருந்து தப்பலாம். கட்டாய நன்கொடையையும் தவிர்க்கலாம். விரும்பிய பொறியியல் பாடத்தைத் தெரிவுசெய்யலாம்.
கல்லூரிக் கட்டணத்தையும் கணினி வழியோ அல்லது அதற்குரிய அலைவரிசையிலோ சிரமமின்றி செலுத்திவிடலாம்.

மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் அனைத்து (அரசு மற்றும் தனியார்) கல்வி நிலையங்கள் கணினியில் சேர்ந்ததற்கான தகவலை பதிவு செய்யவேண்டும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிமுறைகள் செம்மையாகப் பின்பற்றப்படுவதால் தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவனுக்குச் சேர்க்கை கட்டாயம் கிடைக்கும்.

மாணவர் சேர்க்கை முறை தொழில்படிப்புக் கல்வி நிலையங்களில் முறையாக செயல்படுத்தப்படும்போது தவறுகளுக்கு வாய்ப்பே இல்லை. கணினிமயச் சூழலில் தூய்மைகாக்கப்படுகிறது. கட்டாய நன்கொடை வழி கருப்புப் பண உருவாக்கத்திற்கு இடமே இல்லை. சுருங்கச் சொன்னால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

கட்டுரையாளர்: முதன்மையர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments