FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செய்தற்கு அரிய செயல்

பிரதம மந்திரி மோடி நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தொலைக்காட்சியின் மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது

25 ஜனவரி 2024, 12:11 am IST
பகிர்:




பிரதம மந்திரி மோடி நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தொலைக்காட்சியின் மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது ஒவ்வோர் இல்லத்தினரும் செயல்களை போட்டுவிட்டு தொலைக்காட்சி அறைக்கு மன இருக்கத்தோடு அமர்ந்து கேட்டனர்.
அன்று காலையில்தான் பிரதமர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இரவு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதம மந்திரியின் அணுகுண்டு அறிவிப்பு மெதுவாக அவர்களுக்கு விளங்கியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் இச்செயலை புகழ்ந்தார்கள், சிலர் கண்டித்தார்கள்.
பொது இடங்களிலோ, இல்லத்திலோ அல்லது தங்கள் மனதிற்குள்ளேயோ வாழ்த்தினார்கள். சிலர் புலம்பினார்கள். ஆனால் மோடியின் அதிரடி அறிவிப்பை யாரும் அலட்சியம் செய்ய முடியவில்லை.
மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தாங்கள் தொடர்ந்து வாங்கிய கணக்கில் காட்டப்படாததும், மறைத்து வைக்கப்பட்டதுமான கொள்ளை பணம் எந்த அளவில் ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆக இருக்கிறது என்று அறியவேண்டும் என்று விரைந்தனர்.
அதேபோல புதிதாக லஞ்ச பண வரவை எதிர்பார்ப்பவர்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு பணம் தருபவர்கள் பணத்தை ரூ.100 அல்லது ரூ.50 அல்லது சில்லறை காசுகளாக தருவார்களா என்ற கவலை, ரூ.500 மற்றும் ரூ.2,000 புது நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும்வரையில் தாமதித்து பிறகு அவற்றை பெற்றுக் கொள்ளலாமா என்ற யோசனை.
மிக நேர்மையான மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் ஏ.டி.எம்.மிற்கு சென்று தாங்கள் வாங்கவேண்டிய மளிகை சாமான்கள், இடுபொருள் மற்றும் பயன்படுத்தும் சாமான்கள் ஆகியவற்றிற்காக பணம் எடுக்க முயன்றனர். வங்கியில் கணக்கு இல்லாதவர்களுக்கும் என்ன நிகழ்கிறது என்பதை அறியாதவர்களுக்கும் சின்ன குழப்பம்.
500, 1,000 போன்ற ரூபாய்களை திருவிழாக்களின்போது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த குழந்தைகள் பலர் கலர் பென்சில் மற்றும் பொம்மைகள் வாங்கலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு தங்களுடைய திட்டம் நிறைவேறாதோ என்ற அச்சம். பெற்றோர்கள் இவர்களுக்கு நிறைவான ஒரு பதிலை சொல்லி தேற்றினர்.
பயங்கரவாதிகளுக்கும் தேசத்திற்கு எதிரானவர்களுக்கும் தங்களுடைய பயங்கரவாத, தேசவிரோத செயல்களுக்கு இதுவரை கிடைத்துக் கொண்டிருந்த கருப்பு மற்றும் கள்ள பணம் இப்போது வற்றிவிட்டது என்ற எரிச்சல்.
கள்ள மார்க்கெட் சந்தை இதுவரையில் இக்கூட்டத்திற்கு உதவியாக இருந்தது. இப்பொழுது சிதைக்கப்பட்டுவிட்டது. ஆற்காடு, மு.ஏ. சீதாராம ஐயர் தயாரித்த துர்முகி வருட பஞ்சாங்கம் சொன்ன பலன்கள் அனைத்தும் மோடியின் அறிவிப்பினால் பலித்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் சிலர் - வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும், கணக்கில் இல்லாத கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நேரும்.
தணிக்கை துறையின் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடிக்கணக்கில் பணம் சேரும்படியான யோகம் உண்டு என்று பஞ்சாங்கம் கூறியது. மொத்தத்தில் பல்வேறு மக்களுக்கு பல்வேறு உணர்வுகளை தந்தார் மோடி.
எப்படியிருந்தபோதிலும் மோடியின் செய்திச் சுருக்கம் இதுவே: பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்களை வங்கியிடம் கொடுங்கள். இல்லாவிட்டால் பணம் தவறான வழியில் வந்தது என ஒப்புக்கொண்டு வங்கியிடம் கொடுத்து அதன் விளைவுகளை எதிர்நோக்குங்கள். மூன்றாவதாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை கடலைக்கோ, சுண்டலுக்கோ அல்லது மழைகாலத்தில் கப்பல் விடவோ பயன்படுத்துங்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 2015-16 ஆண்டறிக்கையின்படி புழக்கத்தில் மொத்த பணம் சுற்றில் இருக்கக் கூடியது ரூபாய் 16,415 லட்சம் கோடி ஆகும். அதில் ரூபாய் 14,180 கோடி 500, 1,000 ரூபாயாக இருக்கிறது. இது சந்தையில் உள்ள மொத்த பணத்தில் 86 விழுக்காடு ஆகும்.
இந்த பெரிய அளவு பணத்தை திருப்பி பெற்று, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல மிகுந்த தைரியமும் தெளிவும் உள்ள ஒருவாரால்தான் முடியும். விரும்பியலட்சியங்களை அடைய இந்த கருப்பு பணத்தை வசூலிப்பது ஒரு முக்கிய கருவியாக அமைகிறது.
தற்போதைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வருவது என்று ஒரு இரவில் நடக்ககூடியது அல்ல. இதை செய்வதற்கு ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்னதாகவே பணத்தை அட்சிடும் வேலையை துவங்கியிருக்கக்கூடும்.
சில காலமாகவே இவை அனைத்தும் மிக ரகசியமாக நடைபெறுவது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். இந்தியா தன்னுடைய அணு ஆயுத பரிசோதனையை மிகவும் ரகசியமாக செய்தது போலவே மோடியும் இந்த பொருளாதார அணு குண்டை ரகசியமாகவே வெடிக்கச் செய்தார். அதனுடைய ரகசியத்தன்மைக்காகவே மோடி எதிர்ப்புவாதிகள்கூட அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
மே 2014 தேர்தலுக்கு முன்னாலும் தேர்தல் நேரத்திலும் அதற்கு பின்னாலும் மோடியின் அரசியல் எதிரிகள், விமர்சனர்கள் அவரை குறைகூறிக் கொண்டிருந்தனர். ஆனால் மோடி உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு இந்தியாவிற்கு பல பெரிய திட்டங்களை வகுத்தார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு கொள்ள உலகின் பல பகுதிகளுக்கும் கடல்கடந்த பயணங்களை அவர் மேற்கொண்டதற்காக சிலர் குறை கூறினர். உலக நாடுகளின் தலைவர்களோடு அவர் கொண்ட நட்புறவும், இந்தியாவை ஒரு வல்லரசாக நிலை நிறுத்த அவர் எடுத்த முயற்சிகள் நமக்கு மிகவும் பெருமை அளித்துள்ளது.
சென்ற மாதம் பாகிஸ்தான் மீது தீங்கு அகற்றும் ஒரு தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தியபொழுது உலகம் முழுவதும் இந்தியாவை ஆதரித்ததற்கு இந்த வெளிநாட்டு பயணங்களே காரணமாகும்.
சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்காத பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கும் தேசிய உணர்வலை நம்மிடையே அதிகரித்ததற்கும் அவர் எடுத்த இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை காரணம் ஆகும்.
இந்த தீடீர் தாக்குதல் பற்றி குறிப்பிட்டு சில வாரங்களுக்கு முன்னாள் ஒரு பொது கூட்டத்தில் மோடி பேசினர்.
வருமானத்தை தாமே முன்வந்து அறிவித்தல் மற்றும் பயனாளிகளுக்கு பயனை நேரடியாக வழங்கச் செய்தல் போன்ற திட்டங்களால் அரசாங்கம் ஒரு லட்சம் கோடியை அடைய முடியும் என்றால் கறுப்புப் பணத்தின்மீது செய்யப்படும் தீடீர்தாக்குதல் இன்னும் அதிக பணத்தை கொண்டுவரும் என்றார்.
மோடியின் இந்த வீரம்மிக்க முடிவினை எதிர்ப்பவர்கள் தங்களை பொதுமக்களின் காவலர்களாக சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் அதிகப்படியான பொதுமக்கள் எந்த இடர்பாட்டையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். இந்த திட்டம் வருவதற்கு பயனாக சில முன்கூட்டிய திட்டங்களை ஏற்றுக்கொண்டிருந்தால் பொதுமக்களுக்கு இந்த சிரமம் இராது.
பிரத்யேகமான அடையாளச் சின்னத்தை உருவாக்கியபோது அது தனி மனிதனுடைய தனிமையை பாதிப்பதாக குறைசொல்லப்பட்டது. ஒன்றுமே வைப்பு தொகை வைக்க இயலாவிட்டாலும் வங்கி கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற திட்டம் வங்கித் துறையை அழித்துவிடும் என்று குறைகூறினார்கள்.
பதுக்கி வைத்த வருமானத்தை அறிவிக்கும் திட்டம் கொல்லைப்புற வி.டி.ஐ.எஸ். என்று குறைகூறப்பட்டது. இப்பொழுது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பயனற்றதாக்கப்பட்ட பிறகு அது வர்த்தகர்களுக்கும், பொது மக்களுக்கும் எதிரானது என்று குறைகூறப்படுகிறது.
மக்கள்தொகையில் 95 சதவீதம் பேருக்கு பிரத்யேக அடையாளஅட்டை வழங்கப்பட்ட நிலையில், பிரதம மந்திரி ஜன் தன் யோஜனாவில் 22 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, நேரடி மானிய மாற்றுமுறை மூலமாக 35 ஆயிரம் கோடி சேதாரம் தடுக்கப்பட்ட பிறகு, பதுக்கி வைத்த வருமானத்தை தாமே தெரிப்படுத்துதல் மூலமாக 65 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்ட பிறகு, மக்களுடைய மனநிலை கள்ளப்பணம், ஊழல், கருப்புப்பணம் இவற்றிற்கு எதிராக கனிந்துள்ள நிலையில் பிரதம மந்திரி மோடியின் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் செல்லாது எனும் அறிவிப்பு பாராட்டுக்குரியது, துணிச்சலானது, தேசப்பற்றுமிக்கது.
நாட்டுக்கு மோடி ஆற்றிய உரையின் முடிவில் இம்முயற்சி ஒரு "மகாயக்ஞம்' என்று கூறினார். உலகமே இந்தியா இந்த மகாயக்ஞத்தை எவ்வாறு நடத்துகிறது என்று கவனித்துக் கொண்டிருக்கிறது.
தேசியவாத பொருளாதாரர் மோடிக்கு இந்த மகாயக்ஞத்திற்குரிய பூர்ணாஹுதி நாள் வெகுதொலைவில் இல்லை. நேர்மறையான நம்பிக்கையுடனும் உணர்வு மிகுந்த ஆற்றலுடனும் அந்த நாளுக்காக நாம் காத்திருப்போம்.

கட்டுரையாளர்:
முதன்மையர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments