மாநிலப் பட்டியலுக்கு வருமா கல்வி?
மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கு வகைச் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தால்
மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கு வகைச் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, அரசமைப்புச் சட்டப்படி, கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கும் உண்டு என ஒற்றை வரியில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால், ஆயிரக்கணக்கான கிராமப்புற தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போகாமல் இருந்திருக்கும். நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடவில்லை.
அதேசமயம், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்பை பொருத்தவரை, நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளும் அதேவேளையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ள மாநிலப் பாடத்திட்ட மாணவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது.
எனவே, இருதரப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டுமென பொன்னான வாய்ப்பை அளித்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இருதரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை கணிசமான அளவு அதிகரித்திருக்கலாம்.
அது எப்படி திடீரென நம் தேவைக்கு ஏற்றாற்போல், எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரித்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழலாம்.
அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் (எம்.சி.ஐ.) நினைத்தால் இது சாத்தியமே. எப்படியெனில், புதிதாக தொடங்கப்படும் ஒரு மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ. அனுமதி அளித்தாலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு அக்கல்லூரியில் எம்.சி.ஐ. ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வின்போதுதான் வகுத்துள்ள விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற தவறும்பட்சத்தில், அக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய எம்.சி.ஐ.-க்கு அதிகாரம் உண்டு.
இத்தகைய சூழலில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட கல்வியாண்டில், அக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்காக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு அம்மாணவர்கள் தங்களது மருத்துவப் படிப்பை தொடரும் நடைமுறை உள்ளது.
இதே வழிமுறையைப் பின்பற்றி, இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறிப்பிட்ட அளவு கூடுதல் இடங்களை உருவாக்கியிருந்தால், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் என இரு தரப்பு மாணவர்களும் பயனடைந்திருப்பர்.
மதிநுட்பமான இந்த நடவடிக்கையை தமிழக அரசு முழுவீச்சில் மேற்கொள்ளவில்லை. விளைவு, இனி நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது உறுதியாகிவிட்டது.
மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகதான் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறதென கூறப்படுகிறது. இத்தேர்வின் நோக்கம் உண்மையில் மருத்துவக் கல்வியை தரம் உயர்த்துவதா? அல்லது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக்குவதா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், தற்போது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பாடங்களை மாணவர்கள் சரிவர படிக்காமல் போகும் ஆபத்து உள்ளதே.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவப் படிப்புக்கு மாநில அரசு நுழைவுத் தேர்வு நடத்தி வந்தபோது, எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு, அவர்களின் பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொண்டுதான் கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
இதனால் மாணவர்கள் பிளஸ் 2 பாடங்களையும் நுனிப்புல் மேயாமல், கவனமாக படிக்க வேண்டிய அவசியம் இருந்தது. தற்போதைய நீட் தேர்வு நடைமுறை, முந்தைய இந்த நடைமுறையை கேலிக்கூத்தாக்கியுள்ளது.
தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) என கூறிவிட்டு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாக ஒரு தரவரிசைப் பட்டியலும், அந்தந்த மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மற்றொரு தரவரிசைப் பட்டியலும் தயாரிக்கப்படுவது முறையா?
இவற்றைவிட முக்கியமாக, நீட் தேர்வில் ஒரு மாணவன் எடுக்கும் மதிப்பெண் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு போதுமானதாக இல்லையென்றால், அவருக்கு மேலும் இரண்டு முறை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அதாவது ஒரு மாணவர் மூன்றுமுறை நீட் தேர்வு எழுதலாம். இப்படி மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஒரு முறைக்கு மேல் வாய்ப்பளிக்க, எம்.பி.பி.எஸ். என்ன, ஐ.ஏ.எஸ். போன்ற நிர்வாகம் சார்ந்த படிப்பா?
இதுபோன்ற முரண்பாட்டு முடிச்சுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு முடிவுகட்டும் வகையில், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநில அரசு பட்டியலின்கீழ் கொண்டு வர வேண்டியது இன்றைய சூழலில் தவிர்க்க இயலாத அவசியமாகிறது.
தேர்தல், அரசியல், விளையாட்டு போன்றவற்றில் வேண்டுமானால், ஒரு தரப்பினர் தோல்வியடைவதும், மற்றொரு தரப்பினர் வெற்றி பெறுவதும் சகஜமாக இருக்கலாம்.
ஆனால் கல்வியில், அதுவும் மனித உயிர்களை காக்கும் உயரிய படிப்பான மருத்துவத்தில், ஒரு தரப்பு மாணவர்களின் தோல்வியில், இன்னொரு தரப்பு மாணவர்கள் வெற்றிப் பெறுவது நியாயமாகாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.