நடுப்பக்கக் கட்டுரைகள்

கனவு நனவாகுமா?

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

 கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்திய கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கர்நாடகத்தில் வெற்றி பெற்றதுபோல் வெற்றி பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
 மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பாஜகவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிற பொதுக்கருத்தை கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவு தகர்த்திருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி, வரும் 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவானதோர் அணியை உருவாக்க அனைத்து மாநிலக் கட்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறது; அதற்கான முயற்சி எடுக்கத் தூண்டியிருக்கிறது.
 பாஜகவுக்கு எதிராக ஏற்றமிகுந்த ஓர் அணியை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும் என்பது நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் கனா; அந்தக் கனா நனவாக முடியுமா முடியாதா என்பது ஆகப்பெரிய வினா.
 பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் முனைப்போடு ஈடுபட்டிருக்கிறார்.
 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் (பாரத் ராஷ்டிர சமிதி), பாஜக அல்லாத பிற கட்சி முதல்வர்களான கேரள முதல்வர் பினராயி விஜயன் (சிபிஎம்), தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (திமுக), கர்நாடக முதல்வர் சித்தராமையா (காங்கிரஸ்) ஆகியோர் பாஜகவைத் தோற்கடிக்கும் லட்சியத்திற்கு நிச்சயம் தோள்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 முதலில் 2023 ஜூன் 12 அன்று பாட்னாவில் நிதீஷ் குமாரால் திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் இப்போது ஜூன் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் பிரதிநிதிகளை அனுப்பாமல் நேரடியாகவே வர வேண்டும் என்பது ஒரு கட்டளையாகச் சொல்லப்படுகிறது.
 மேலும், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முக்கிய சக்தியாக முன்னிறுத்தப்படுகிறது. ராகுலும் அவரது தாயார் சோனியா காந்தியும் வெளிநாட்டில் இருப்பதால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதால், ஜூன்23-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ்போன்ற தலைவர்கள் காங்கிரஸை முன்னிறுத்தும் திட்டத்தை விரும்பவில்லை. கேரளத்தில் காங்கிரஸுக்கு எதிராக சிபிஎம் இருக்கிறது; மேற்கு வங்கத்தில் திரிணமூலுக்கு எதிராக காங்கிரஸும், காங்கிரஸுக்கு எதிராக சிபிஎம்-மும், திரிபுராவில் சிபிஎம்-க்கு எதிராக காங்கிரஸும் உள்ளன.
 ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை இரண்டும் காங்கிரஸை எதிர்ப்பதில் ஒற்றுமையாக உள்ளன. எனவே, பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்பது உறுதியில்லை.
 1999-ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவரும் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி தலைவராக இருந்தவருமான சரத் பவார், பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் இறுதியில் என்ன முடிவெடுப்பார் என்பது தற்போது தெரிய வாய்ப்பில்லை.
 ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த விவகாரத்தில் உறுதியாக இல்லாமல் இருக்கிறார். இதேபோல் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் காங்கிரஸ் தலைமையிலான எதிரணியில் இணைந்து ஓரணியாக நிற்க சம்மதிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
 இம்மாதிரியான அரசியல் சூழல் இந்தியாவுக்குப் புதிதல்ல. நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நேரு தலைமையிலும், பின்னர் இந்திரா காந்தியின் தலைமையிலும் காங்கிரஸ் ஏகபோக உரிமையாக அதிகாரம் செலுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. 1950-களில் சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ், வேறு எந்த கட்சியும் தனக்கு சவாலாக உருவெடுத்துவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டது. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிஎஸ்பி-எஸ்எஸ்பி (சோஷலிஸ்ட்), இந்து மகாசபா போன்ற கட்சிகள் மீது காங்கிரஸ் கடும் நடவடிக்கை எடுத்தது.
 1970-களின் முற்பகுதியில் "இந்திராவே இந்தியா இந்தியாவேஇந்திரா' என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது. காங்கிரஸுக்கு மாற்று இல்லை; வேறெந்த கட்சிக்கும் ஆற்றலும் இல்லை என்று விதந்தோதப்பட்டது. காங்கிரஸ் கோலியாத்தைப் போல தோற்றமளித்தாலும், சில டேவிட்டுகளும் அக்கட்சியில் தோன்றத்தான் செய்தார்கள்.
 1970-களில், ஜெயபிரகாஷ் நாராயணனும் ஜே.பி.கிருபளானியும் நிறுவிய நவ நிர்மாண் இயக்கம் (நிதீஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இதில் உருவானவர்கள்தான்) வட இந்தியாவில் காலூன்றத் தொடங்கியது. மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், சரண் சிங், வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர், மது தந்தவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராஜ் நாராயண் போன்ற இந்திரா காந்தி எதிர்ப்பாளர்கள் அனைவரும் அப்போது ஒன்றிணைந்தார்கள்.
 இவ்வாறு காங்கிரஸ் (ஓ), இந்திய சோஷலிஸ்ட் கட்சி, பாரதிய ஜனசங்கம் (பாஜகவின் பழைய பெயர்), லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணி பிறந்தது. "ஜனதா கட்சி' என்றுபெயரிடப்பட்ட அந்தக் கலவை அணி, அதுவரை வெல்ல முடியாத கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. இந்த முன்னணிக்கு திமுகவும், சிபிஎம் கட்சியும்ஆதரவு தெரிவித்தன.
 1975-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனமும், அது உருவாக்கிய அத்துமீறல் அலைகளும், தலைவர்களை வேட்டையாடிய தயவு தாட்சண்யமற்ற அடக்குமுறைகளும், ஜனதா கட்சியின் சரித்திர வெற்றிக்கு முக்கியமான காரணிகளாக இருந்தன. முதல் முதலில் காங்கிரஸ் அல்லாத கட்சியொன்று ஆட்சிக்கட்டிலில் அமர்வதை ஆச்சரியத்துடன் பார்த்தது பாரதம்.
 ஆனால், துரதிருஷ்டவசமாக, பின்னர் ஜனதா கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. அதிகார ஆசைகளும், ஆணவ செயல்பாடுகளும் ஜனதா கட்சியின் ஆட்சியில் மண்ணை அள்ளிப் போட்டன. மொரார்ஜியின் ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்ந்து, லோக்தள் தலைவர் சரண் சிங் பிரதமரானார். தமிழகத்திலிருந்து அதிமுகவின் ஆதரவையும் பெற்றார்.
 இந்த நிலையில் முதல் முதலாக தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சத்தியவாணி முத்து, பாலா பழனூர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக மத்தியில் பொறுப்பேற்றனர். ஆனாலும், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க முடியாமல் சரண்சிங் அரசும் கவிழ்ந்தது.
 ஆதலால் 1980-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜனதாவை சறுக்க வைத்து சரித்திரம் படைக்கும் அளவுக்கு இந்திரா காந்தி, தன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை மீட்டெடுத்தார்.
 பின்னர் 1984 வரை இந்திரா காந்தியாலும் (1984-இல் படுகொலை செய்யப்பட்டார்), பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தியாலும் (1991-இல் படுகொலை செய்யப்பட்டார்) வழிநடத்தப்பட்ட காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய முன்னணி (நேஷனல் ஃபிரன்ட்) உருவான 1989 வரை காங்கிரஸ்ஆட்சி தொடர்ந்தது. தேசிய முன்னணி (1989-91) ஜனதா தளம் தலைமையிலான கட்சிகளின் கூட்டணியால் உருவாக்கப்பட்டது. இதில் என்.டி. ராமா ராவ் (தெலுங்கு தேசம்) தலைவராகவும், பிரதமரான வி.பி. சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.
 தமிழகத்தில் திமுக, ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் என்.டி. ராமா ராவ், அஸ்ஸாமில் அஸ்ஸாம் கன பரிஷத் போன்ற பிராந்திய கட்சிகள் தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தின. இடதுசாரி கட்சிகள் காங்கிரஸின் மேலாதிக்கத்தைத் தகர்க்கும் சக்தியாக அந்த முன்னணியை ஆதரித்தன. அந்தக் கூட்டணியும் இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
 பின்னர் ஆளும் கட்சிக்கு எதிராக ஐக்கிய முன்னணி (1996-98) என்ற அமைப்பு ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, திமுக, தெலுங்கு தேசம், ஏஜிபி, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளால் உருவாக்கப்பட்டது. பதின்மூன்று கட்சிகளைக் கொண்ட அந்தக் கூட்டணிதான் தேவே கௌடாவை (ஜனதா தளம்-எஸ்) பிரதமராக்கியது; பின்னர் ஐ.கே. குஜ்ராலை பிரதமராக்கியது. இருப்பினும் அதன் ஆட்சி 1998-இல்கவிழ்ந்தது.
 காங்கிரஸ் இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக அரசியல் வனாந்தரத்தில் உள்ளது. 2024-இல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விக்கான விடை, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான, குறிப்பாக மாநிலக் கட்சிகளுக்கு இடையிலானபேச்சுவார்த்தைகள் எப்படி முடியும் என்பதைப் பொறுத்து உள்ளது.
 பாஜகவுக்கு எதிரான அணியை வழிநடத்த காங்கிரஸ் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் இன்றைய தேசிய அரசியலைத் திணறடித்துக் கொண்டிருக்கும் வினா.
 எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகம் உயிர்வாழ குறைந்தபட்சம் இரண்டு சமமான சக்தி வாய்ந்த கட்சிகள்தேவை. புகழ்பெற்ற அமெரிக்க நகைச்சுவை நடிகர் பாப் ஹோப்பின் வார்த்தைகள் இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானவை: "எந்த ஒரு கட்சியாலும் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது; அதனால்தான் எங்களுக்கு இரண்டு கட்சிகள் உள்ளன'.
 ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் குரலை ஷேடோ கேபினெட் குரல் என்று அழைப்பதுண்டு. இந்த பாட்னா மாநாடு வலுவான ஷேடோ கேபினெட்டை உருவாக்குமா என்பது மில்லியன் டாலர் வினா
 வாகும்.
 
 கட்டுரையாளர்:
 அரசியலாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT