காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!
ஒரு புதிய மாநில நிர்வாகம் பொருளாதார சூழலை எவ்வாறு சமாளிக்க இருக்கிறது என்பதும், பொருளாதாரத்தை அரசு எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்பதையும் பெரும் சவாலாகவே நான் (கட்டுரையாளர்) பார்க்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இரண்டாவது இடத்தை திமுகவும், மூன்றாவது இடத்தை அதிமுகவும் பெற்று, பெரும்பான்மை இல்லாத முதலிடத்தைப் பெற்றது தமிழக வெற்றிக் கழகம். சுமார் 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட இயக்கங்கள் சாதித்த விளைநிலங்களில் இருந்துதான் இந்த வித்துகள் முளைத்திருக்கின்றன என்பதை நாம் மறுதலித்துவிட முடியாது. திராவிட இயக்கங்கள் போட்ட சமூகநீதிப் பாதையில் இருந்துதான் இந்த இளம் தளிர் பூத்துக் குலுங்கி இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.
திராவிட இயக்கங்கள் விதைத்திட்ட சமூகநீதி, தமிழ் வளர்ச்சி, பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் அடித்தட்டில் இருப்பவர்களும் அமைச்சராக முடியும் என்கிற ஜனநாயகத்தின் மாபெரும் கனவைத் தந்திட்ட திராவிட இயக்கங்களின் பள்ளிக்கூடத்தில் பாலபாடம் பயின்றவர்கள்தான் இன்றைய வளரும் தலைமுறையினர். அதே பாதையில் இவர்கள் பயணித்தாலும் ஜாதி கட்டமைப்புகளைக் கடந்து பணபலம் அற்று யாருமே அரசியல் பின்புலமற்ற குடும்பத்தைச் சார்ந்து எளியவர்கள் அரசியலில் கோலோச்ச முடியும் என்பதை நிரூபித்த பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகள், முன்னாள் முதல்வர் அண்ணாவின் சித்தாந்தங்கள் இன்னும் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Advertisement
Advertisement
காலப்போக்கில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஜாதிகள் ரீதியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதும், பணபலம் தேர்தலில் பாதாளம் வரை பாய்வதை நோக்கி பயணப்பட்டுப் போனார்கள். அவற்றை உடைத்தெறிந்து புதியவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் மக்கள். தேர்தல் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில், கூட்டணி அமைச்சரவையும் அமைக்கப்பட்டு இளையவர்கள், பட்டியலினத்தவர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட புதியவர்களுக்கான வாய்ப்பை ஜனநாயகம் வழங்கியிருக்கிறது.
ஒரு புதிய மாநில நிர்வாகம் பொருளாதார சூழலை எவ்வாறு சமாளிக்க இருக்கிறது என்பதும், பொருளாதாரத்தை அரசு எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்பதையும் பெரும் சவாலாகவே நான் (கட்டுரையாளர்) பார்க்கிறேன்.
தற்போதைய கடுமையான பொருளாதார எதார்த்தங்களை எதிர்கொள்வதற்கு சீரிய கொள்கை முடிவுகளும், பொருளாதார மேலாண்மையும் அவசியம். ஏனென்றால், மலை போல் கடன் சுமை, எப்படிச் சமாளிப்பது? மாநிலத்தின் நிதிநிலை 2026}27}ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை சுமார் ரூ. 10.71 லட்சம் கோடியை எட்டுகிறது. இது மாநிலத்தின் செலவு செய்யும் திறனை நேரடியாகப் பாதிக்கிறது.
மார்ச் 2026 நிலவரப்படி, கடனுக்கான வட்டி அசல் திருப்பிச் செலுத்தும் தொகை மற்றும் ஆண்டுக்கு சுமார் ரூ. 1.16 லட்சம் கோடி என்கிற பிரம்மாண்ட அளவைத் தொடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கடன்சுமை மாநிலத்தின் மூலதன செலவினங்களை கேபிட்டல் எக்ஸ்பென்டிச்சர் தின்று ஜீரணித்து விடுகிறது. அவ்வாறெனில் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என்பது புரியாத புதிராகவே திகழ்கிறது. நிலைமை இவ்வாறெனில் அரசு ஈட்டும் வருவாயில் பெரும்பகுதி பழைய கடன்களை அடைப்பதற்கே சென்று விடுவதால் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், பிற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான நிதியில் கடுமையான முடக்கம் ஏற்பட்டு விடுகிறது.
மேலும் மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியின் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. இதன் மூலமாக கட்டணமில்லா பேருந்துகளில் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பயணிக்க இயலும் என்கிற தவெக அரசின் வாக்குறுதியை எவ்வாறு நிரூபித்திட முடியும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கெனவே போக்குவரத்துத் துறை பல்வேறு பாதிப்புகள் அடைந்து நிதிச் சுமையை சந்தித்து அதன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் பணப் பலன் வழங்க முடியாத நிலையிலும், தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு பணப் பலன் வழங்குவதிலும், புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கோர முடியாத நிலையிலும், பழைய பேருந்துகள் சீர் செய்ய முடியாத நிலையிலும் இருப்பதற்கு இந்தப் பொருளாதாரச் சுமையே பெரும் காரணமாக அமைகிறது.
மின்சாரத் துறையில் மார்ச் 2026 தரவுகளின்படி ரூ. 1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன் உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், நிதி மேலாண்மையைக் கையாள்வதில் பெரும் சவாலை நோக்கி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது புதிய அரசு. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியும், ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கான மாத உதவித் தொகை போன்ற நலத் திட்டங்கள் புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்றும், விஜய் அரசில் உள்ள அனுபவமற்ற புதிய அமைச்சர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் பெரும் சவாலாகவும், கேள்விக்குறியாகவும் அமைந்திருக்கிறது.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை மீறி விஜய் வெற்றி பெற்றிருந்தாலும், நிர்வாக இயந்திரத்தை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது பெரும் சவாலாக இருக்கிறது. சட்டம்} ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் எனப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்த தவெக உண்மையான நிர்வாகச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள், அவர்கள் அரசில் நடக்காமல் தடுப்பது அவர்களுக்கு வாக்களித்த மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. நிர்வாக அமைப்புகளின் செயல்முறைகளைப் பற்றி முழுமையான புரிதலைப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும்.
குறிப்பாக, முதல்வர் விஜய் தன்வசம் மட்டுமே கணிசமான துறைகளை வைத்துள்ளார். காவல், பொது நிர்வாகம் போன்ற துறைகளை இதற்கு முந்தைய முதல்வர்களும் தங்கள் வசம்தான் வைத்திருந்தார்கள். ஆனால், இவ்வளவு துறைகளை ஒரே நபராகக் கையாளுவது என்பது அனுபவம் வாய்ந்த முதல்வர்களுக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. ஆகவேதான், துறைசார் அதிகாரிகளை எப்படி அணுகப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் அந்தந்த துறைகள் சார்ந்து எதிர்க்கட்சி எழுப்பும் கேள்விகளை இவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் பெரும் சவாலாகவே இருக்கும். திமுக, அதிமுக போன்ற கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போது அதை இவர்கள் சமாளிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்திருக்கிறது.
இடதுசாரிகள் தவிர்த்து மற்றவர்கள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளனர் என்பதும், கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதும் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதை.
தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணத்தில் அமைச்சர்கள் மிகத் தாமதமாக நியமிக்கப்பட்டதும், அவர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டதும், துறை சார்ந்த நடவடிக்கைகளைக் கற்றுக் கொள்ள நாளாகும் என்பதும், நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரம் என்னும் பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. தேசிய வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு 10% என்பது ஒரு சாதனை. ஒரு பொருளாதார கட்டமைப்பு மாற்றம் எவ்வாறு நிகழ வேண்டுமோ, அதற்கு ஏற்றவாறு பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறை 3% என்கிற கட்டுக்குள் வைத்திருந்தாலும், கல்வி, சுகாதாரம், மனிதவளக் குறியீடு போன்ற துறைகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் தமிழ்நாடு மாற்றிக் காட்ட வேண்டும்.
மாநில உற்பத்தி மதிப்பில் 13% வேளாண் துறையின் பங்களிப்பு இருக்கிறது. நான்கில் ஒரு பங்கு மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் குறித்து பேசப்பட்ட அளவுக்கு, விவசாயத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பேசப்படவில்லை. 93% பேர் குறு, சிறு விவசாயிகள் என்னும் நிலையில், நிலம் மேலும் மேலும் துண்டாடப்பட்டு வருவதும், குறு, சிறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலைக்குரியது. நிலத்தின் மதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து நிலத்தை விற்றால் லாபம், சாகுபடி செய்தால் நஷ்டம் என்பதை எவ்வாறாக நாம் மாற்றப் போகிறோம்?
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சிறந்த பங்கை ஆற்றி வந்தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பெருமளவில் இருக்கிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பணி நிலைமை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதற்கு சாம்சங் தொழிலாளர்களின் போராட்டமே ஒரு சாட்சி. கவனமாகச் செயல்பட்டால் மட்டுமே ஆட்சியை அடுத்தகட்டத்துக்கு அழைத்துப் போக முடியும் என்பதை முதல்வர் விஜய் அறிந்து கொண்டு தனது அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசைக் கொண்டு சென்றால் வரலாறு என்றும் வாழ்த்தும்.
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.