FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீன்கள் காட்டும் புதிய வழி!

காலநிலை மாற்றத்தால் மீன்களின் இடம்பெயர்வு மற்றும் மீனவர்களின் வாழ்வாதார சவால்களைப் பற்றி...

10 நவம்பர் 2026, 2:35 am
மீன்கள் காட்டும் புதிய வழி!
பகிர்:

கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவது கடல்சார் சூழலின் தன்மையை மாற்றியமைத்து வருகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு, நுண்ணுயிரிகளின் பெருக்கம், அவற்றை உணவாகக் கொள்ளும் சிறிய உயிரினங்களின் எண்ணிக்கை, மீன்களின் வளர்ச்சி, இனப்பெருக்கம், இடம்பெயர்வு ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

'பைட்டோபிளாங்க்டன்' எனப்படும் நுண்ணிய பாசிகளின் பெருக்கம் மற்றும் கரிமப் பொருள்களின் சிதைவு ஆகியவை நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைக்கக்கூடும்; இதனால் கடல்வாழ் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்குத் தேவையான சூழல் பாதிக்கப்படுகிறது.

இந்தியக் கடற்கரையோரத்தில் நிலவும் வெப்பநிலை, நீரின் உப்புத்தன்மை, கடல் நீரோட்டங்கள், பருவமழை, ஆறுகளிலிருந்து கடலில் கலக்கும் நன்னீரின் அளவு ஆகியவை மீன்களின் பரவல், இடம்பெயர்வு, இனப்பெருக்க முறைகளைத் தீர்மானிக்கின்றன. கேரளம் மற்றும் கர்நாடகக் கடற்கரைப் பகுதிகளில் பாரம்பரியமாக அதிக அளவில் காணப்பட்ட 'ஆயில் சார்டின்' வகை மத்தி மீன்கள், அண்மைக் காலங்களில் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

அதேவேளையில், வழக்கமாக கிழக்குக் கடற்கரையில் அதிகமாகக் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான சிறிய வகை மீன்களான 'திரெட்ஃபின் பிரீம்' மீன்கள், தற்போது மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு முறைகள் கணிக்க முடியாதவையாக மாறுவதால், ஆறுகளிலிருந்து கடலுக்குள் பாயும் நீரின் அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, கடல் மற்றும் ஆறுகளுக்கு இடையே இடம்பெயரும் 'ஹில்சா' போன்ற மீன் இனங்களின் வாழ்க்கைச் சுழற்சியானது, கடல் வெப்பநிலை, நீரின் உப்புத்தன்மை, நன்னீர் வரத்து மற்றும் பருவமழை முறைகளில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடும். இம்மாற்றங்கள் கடலில் நிகழும் வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமல்ல; இவை மீன்பிடித் தொழிலைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் சமூக-பொருளாதாரப் பிரச்னைகளாகவும் உருவெடுத்து வருகின்றன.

மீன்கள் தங்கள் வழக்கமான வாழிடங்களிலிருந்து வெகுதொலைவு இடம்பெயரும்போது, மீனவர்கள் அவற்றைப்பிடிக்க கடலின் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் எரிபொருள், படகு பராமரிப்பு, பனிக்கட்டி, குடிநீர், உணவுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், கடலில் செலவிடும் நேரமும் கூடுகிறது. மீன் பிடிப்பு அளவு அதிகரிக்காத நிலையிலும், மீன்களைத் தேடுவதற்கான செலவுகள் அதிகரிப்பது மீனவர்களின் நிகர வருமானத்தைக் குறைக்கக்கூடும்.

புயல், பலத்த காற்று, கொந்தளிப்பான கடல், கனமழை, கடல் வெப்பநிலை மாற்றங்கள் போன்ற காரணிகள் பாதுகாப்பான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. 2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'ஒகி' புயலின் தாக்கம் குறித்த ஓர் ஆய்வின்படி, மீன்பிடிக்க முடியாத நாள்களால் ஏற்பட்ட வருவாய் இழப்பு கேரளத்தில் சுமார் ரூ.146.73 கோடி (15.17 மில்லியன் அமெரிக்க டாலர்) என்றும், தமிழ்நாட்டில் ரூ.17.89 கோடி (1.85 மில்லியன் அமெரிக்க டாலர்) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, 2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'டவ்தே' புயலின் தாக்கம் குறித்த ஆய்வில், கர்நாடகத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில் முறையே சராசரியாக 31, 39, 22 மீன்பிடி நாள்கள் இழக்கப்பட்டதாகவும், ஒரு மீன்பிடி குடும்பத்துக்கு ஏற்பட்ட சராசரி பொருளாதார இழப்பு சுமார் ரூ.1.02 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மீன் வகையைச் சார்ந்திருக்கும் மீனவர்களுக்கு, அந்த மீன் இனத்தின் எண்ணிக்கையிலோ அல்லது கிடைப்பதிலோ ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.

கேரளத்தில் மத்தி மீன் பிடிப்பு குறைந்ததைக் குறித்த ஆய்வு ஒன்றின்படி, 2011 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், மீன் இறங்குதளத்தில் அதன் மதிப்பு ரூ.1,256.2 கோடியிலிருந்து ரூ.171 கோடியாகவும், சில்லறைச் சந்தை மதிப்பு ரூ.2,286.9 கோடியிலிருந்து ரூ.268.7 கோடியாகவும் சரிந்தது; அதே காலகட்டத்தில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மீனவக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.3,35,593-லிருந்து ரூ.90,260-ஆகக் குறைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மீன் கிடைப்பதில் ஏற்படும் சரிவு, மீன் பிடிப்பவர்களின் வருமானத்தை மட்டுமல்லாமல், மீன் ஏலம் விடுதல், விற்பனை செய்தல், உலர்த்துதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் உட்படப் பலரின் வருமானத்தையும் பாதிக்கிறது. குடும்பச் செலவுகள் தொடரும் அதே வேளையில் மீன்பிடிக்கும் நாள்களின் எண்ணிக்கை குறைவதால், நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிறது.

மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் நிலையற்றதாக மாறும்போது, இளைய தலைமுறையினர் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயரக்கூடும்; இதன் விளைவாக, பாரம்பரிய மீன்பிடித் திறன்களும் கடலோரச் சமூகங்களின் பரம்பரை அறிவும் காலப்போக்கில் மங்கிப்போகலாம்.

கடல் வெப்பமடைதல் என்பது கடலோர மக்களின் கடன் சுமை, உணவுப் பாதுகாப்பு, குடும்பப் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் கடல் சூழலைப் பாதுகாப்பதுடன் நின்றுவிடக் கூடாது; அவை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். கடலைப் பாதுகாப்பது என்பது வெறும் மீன் வளத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல; தலைமுறைகளாகக் கடலைச் சார்ந்தே வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.