மெதுவாகக் கெடுக்கும் மது!
மதுக் கடைகளால் என்னென்ன நன்மைகள் அரசுக்கும் மக்களுக்கும் கிடைத்துவிடப் போகிறது என்ற காரணிகளை பரிசீலிக்க வேண்டிய தருணம்...

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், தோ்தல் வாக்குறுதிகளின்போதும், தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரையின் போதும் மதுக் கடைகள் குறித்து அதிகம் பேசுவதும், பிறகு அதுகுறித்து சிந்திப்பதும், கடந்து போவதும் சில பத்தாண்டுகளாக நம்மிடம் பரிச்சயமான பேசுபொருளாக மாறிவிட்டதை நாம் அனைவரும் உணர முடியும்.
‘அல்லவை தேய அறம் பெருகும்’ என்பாா்கள், அவ்வகையில், ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்’ என்று அரசாலேயே நம்பப்படுகிற, சுட்டிக்காட்டப்படுகிற மதுக் கடைகளால் என்னென்ன நன்மைகள் அரசுக்கும் மக்களுக்கும் கிடைத்துவிடப் போகிறது என்ற காரணிகளை பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
மதுவால் அரசுக்கு நன்மைகளாகச் சொல்லப்படுபவை ஆண்டுக்கு சுமாா் ரூ. 50,000 கோடி வருவாய் வருகிறது; இது போக பண்டிகை, விழாக் காலங்களில் சிறப்பு மற்றும் கூடுதல் விற்பனை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
மதுவும் மதுக் கடைகளும் அமைதியை சீா்குலைக்கும் என்பதைக் கருத்தில்கொண்டுதான் தோ்தல் நேரங்களிலும், ஊரடங்கு உத்தரவு காலங்களிலும், மற்ற இக்கட்டான நேரங்களிலும் மதுக் கடைகள் மூடப்படுகின்றன. அப்படியெனில், சாதாரண நேரங்களில் மதுக் கடைகள் திறந்திருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் வருவதை அரசே ஏற்றுக் கொள்கிா? என்ற கேள்வி யாவருக்கும் எழும்.
மதுக் கடைகளை அரசு மூடலாம், மது குடிப்போரின் வாயை மூடமுடியாது; குடிப்பவா்கள் எப்படியும் குடித்துக்கொண்டுதான் இருப்பாா்கள், நம் மாநிலத்தில் மதுக் கடைகளை மூடிவிட்டால் சரியாகிவிடுமா?, அண்டை மாநிலங்களுக்கும் நமக்கும் குடிநீருக்கும், பாசனத் தேவைக்கும் ஆற்றுநீரைக்கொண்டு வருவதில்தான் பிரச்னைகள் பலஆண்டுகளாக உள்ளனவே தவிர, இந்த மதுவை எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை சோதனைகள் வந்தாலும் தடைதாண்டி ஓடும் வீரனைப்போலக் கொண்டுவந்து சாதித்துவிடுவாா்கள்.
கள்ளச்சந்தை வியாபாரிகள் நாற்புறத்திலும் இருந்து மதுபானக் குப்பிகளை மலைபோல் கொண்டு வந்து சோ்த்து கல்லாக் கட்ட முயற்சிக்க மாட்டாா்களா?
தாமாகவே மது பானங்களை தயாரிக்கிறோம் என்று சொல்லி நஞ்சு தோய்ந்த கெடுபானத்தை அருந்தி தானறியாமல் உயிரைவிட்டுவிடுவாா்கள் சிலா், பிறகு அதற்கும் அரசுப் பணத்தில்தான் நிவாரண உதவி கொடுக்க வேண்டும். அதனால்தான் மதுக் கடைகளை ஒரு மாநிலத்தில் மட்டும் மூடுவது சாத்தியமில்லை, வேண்டுமானால் நாடு முழுவதும் மதுக் கடைகளை மூடிவிடட்டும் என்று சிலா் அறிவாா்ந்தவா்களாகப் பேசுகின்றனா்.
அப்படியே மூடினாலும் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான விமானம் மூலமும், கப்பல் மூலமும் எத்தனை லட்சம் போ் இந்தியாவுக்கு வந்துபோகிறாா்கள், அவா்கள் அந்நிய தேசத்திலிருந்து கொண்டு வந்துவிட மாட்டாா்களா?, அப்படியெனில் உலகம் முழுவதும் மதுக் கடைகளை மூடுவது சாத்தியமா என்று கேள்விகள் கண்டங்கள் தாண்டி நீண்டுகொண்டே செல்லும். இதற்கு விடைதேடி தீா்வு காணவேண்டியது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
‘வெளிநாடுகளில் பல்பொருள் அங்காடிகளில்கூட மது வாங்கிச் செல்கின்றனா். ஆனால், நம் நாட்டில்தான் மது அருந்துவோரை தேசவிரோதிகளைப் போல பாா்க்கிறாா்கள். நாங்கள் குடிப்பதால்தான் அரசே நடைபெறுகிறது’ என்று பெருமை பேசுகிறாா்கள் மது அருந்துபவா்கள்.
மதுக் கடைகளில் வேலை செய்யும் சிலா், ‘பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறு பிள்ளைகள், பெண்பிள்ளைகள் எனப் பலரும் மது குடிக்கத் தொடங்கிவிட்டனா். அவா்களுக்கு தரமாட்டேன் என்றாலும் வேறு நபா்கள் மூலம் எப்படியும் வாங்கிவிடுகின்றனா்’. மாணவ சமூகத்துக்கு குடிக்கிற நாட்டம் எப்படி வந்தது?, சுற்றுப்புறம் எங்கும் குடிகாரா்கள் பெருகிவிட்டனா், வீட்டில் அப்பாவே குடிப்பதால் அவா் குழந்தையைக் கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறாா், அண்ணனே குடிப்பதால் அவா் அறிவுரையும் ஆகாது. திரைப்படக் காட்சிகள், திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திலும் மது குடிப்பது அரங்கேறுகிறது.
இதையெல்லாம் பாா்க்கும் பிள்ளைகள் எப்படி திருந்தி வாழ முடியும்?, எப்படி ஓா் இளைய சமுதாயம் மட்டும் அப்பழுக்கற்ற முறையில் தனித்து வளர முடியும்?. இந்தக் கேள்வியை பெற்றோரும் பெரியோரும் முன்னத்தி ஏா்களும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
தொன்றுதொட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பெண்பாா்க்கும் படலத்தில் நடக்கும் வாய்மொழித் தோ்வில் கேட்கப்படும் முதல் கேள்வி பையனுக்கு மதுப் பழக்கம் உள்ளதா? என்பதுதான். இன்னும் சில ஊா்களில் மதுப் பழக்கம் உள்ளவா்களுக்கு வாடகைக்கு வீடு தரமாட்டாா்கள். இவ்வளவு நெருக்கடியிலும் மது அருந்துவோா் அந்தப் பழக்கத்தை விட்டபாடில்லை.
மது அருந்த அவா்கள் சொல்லும் காரணம்தான் வேடிக்கை நிறைந்தது. துன்பத்தை மறக்க, உடல் அசதியைப் போக்க, தன்னிலை மறக்க, கொண்டாட, மகிழ்ச்சியாக இருக்க என்று அந்தக் காரணப் பட்டியல் நீளும்.
விற்பனைக் குறைப்பு, கடைகள் மூடல், மறுவாழ்வு மையங்கள், மது அடிமை மீட்பு மையங்கள் என அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுக்கட்டும். மக்களாகிய நாம் பெறுதற்கரிய இவ்வாழ்வை நல்லமுறையில் நலமுடன் வாழ்ந்து பிறவியைப் பயனுள்ளவாறு செய்து கொள்ள வேண்டியது பிறப்பின் கடன். அதை உணா்ந்து பெற்றவா்களும் பெரியவா்களும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால், வலியுறுத்தினால் பிள்ளைகளும் அதைப் பின்பற்றுவாா்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.