உலகம் வாழ உயர்வழி காட்டியவர்
நூற்றாண்டுகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஞான ஒளியாய்த் திகழ்ந்த அருட்பிரகாச வள்ளலாரைப் பற்றி...
இரு நூற்றாண்டுகளுக்கு முன் இம்மண்ணில் அவதரித்து, வரும் நூற்றாண்டுகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஞான ஒளியாய்த் திகழ்கிறவர் அருட்பிரகாச வள்ளலார்.
எடுத்த பிறவிக்குத் தாயும் தந்தையுமாய் இருவர் இருந்தாலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் யாவுமாய் இருப்பவன் இறைவனே' என்பதை உலகோர் உணரும் வண்ணம் அருட்பா இசைத்த ஆன்மிகவாதி அவர். தாவர சங்கமமாம் இப்பூவுலகில், 'எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்று முன்கூறியவர் மாணிக்கவாசகர். பின்வந்த தாயுமானவர், 'எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே' என்று வேண்டியதோடு,. 'அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்பநிலை தானே வந்து எய்தும்' என்றும் உறுதி கூறினார்.
அவ்வழியை நீளவிரித்து, 'எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும், தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்?' என வினவி, 'அவர் உள்ளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் எனத் தெரிந்துகொண்டு, அந்த வித்தகர்தம் அடிக்கே ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்தது' என்றும் பாடினார் வள்ளலார்; கூடவே, அவ்வழியை நாடிக் கடைப்பிடிக்கச் சன்மார்க்கம் காட்டினார்.
Advertisement
Advertisement
இவ்வுலகில் பிறந்த சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேகங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென்று அறிந்தபோதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை என்று அறிய வேண்டும் என்பதையும் உணர்த்தினார். அப்பேருள்ளம்தான், 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது'; அவ்வாட்டம் தீர்க்க ஓடியது. அதனால்தான், வாடிய முல்லையைக் கண்டதும் ஓடிய தன் தேரை நிறுத்தி, அதன்மீது அக்கொடியைப் படரவிட்டுப் பாதுகாத்த பாரியை இவ்வுலகம் வள்ளல் என்று கொண்டாடியது.
அதுபோலவே, இவரையும் வள்ளலார் என்று கொண்டாடிவருகிறது. இவர், 'பசியினால் இளைத்தே வீடுதோறு இரந்தும் பசிஅறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்கிறார்; 'நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்உறக் கண்டு உளம் துடித்தேன்' என்கிறார்; இவற்றுக்கெல்லாம் மேலாக, 'ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்' என்றும் பாடுகிறார். யார் இந்த ஈடின் மானிகள்? மனதில் இதம் உடையவர்கள் மனிதர்கள்; மானம் உடையவர்கள் மானிகள். ஈடு இணை சொல்ல முடியாத இம்மானிகளைத் தேடிப்போய் உடன் உதவுவதே உயிர் இரக்க ஒழுக்கம் என்பது இவர்முடிவு.
'நடந்து நடந்து காலும் சோர்ந்தது; கேட்டுக் கேட்டு வாயும் சோர்ந்தது; நினைந்து நினைந்து மனமும் சோர்ந்தது. இனி இப்பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்? என்றெண்ணிக் கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே- ஜீவகாருண்யம் என்கிறார். மானம் கருதி, அத்தகு ஏழைகள் கண்ணீர் வடிக்கின்ற காட்சியின் பின்புலத்தை, பகற்போதும் போய்விட்டது; பசியும் வருத்துகிறது; வேறிடங்களில் போக வெட்கந் தடுக்கின்றது; வாய் திறந்து கேட்க மனம் வலிக்கின்றது; வயிறு எரிகின்றது.
உயிரை விடுவதற்கும் உபாயம் தெரியவில்லை. இவ்வுடம்பை ஏன் எடுத்தோம் என்று மனமும் முகமும் சோர்ந்து சொல்வதற்கு நாவெழாமல், உற்பாத சொப்பனங் கண்ட ஊமையைப்போல், மனம் மறுகுகின்ற மானிகளாகிய சீவர்களுக்கு ஆகாரங்கொடுத்து மானத்தைக் காப்பதுவே ஜீவகாருண்யம் என்று எழுதுகிறபோது இவர்தம் திருவிழிகளில் பெருகிய கண்ணீர் அல்லவா, இவர்தம் எழுதுகோலுக்கு மையாய் இருந்திருக்க வேண்டும்.
அதனால்தானோ, 'சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்' எனச் சினந்து, 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்,இந்தச் சகத்தினை அழித்திடுவோம்' என்று வெகுண்டு பாரதியார் பாடினார்போலும். பசிக்கொடுமையை அனுபவித்தவர்களுக்குத்தான் இப்பாட்டின் பொருள் புரியும்; துடிப்பவர்கள் பாடு தெரியும்.
வயிற்று நெருப்பான பசியைப் போக்க, வடலூரில் அடுப்பு நெருப்பினை ஏற்றி, வருவோர்க்கெல்லாம் உணவு ஈந்த இவர் ஏற்றிய நெருப்பு இப்போதும் அணையாது எரிவதைப் பெருமையாகப் பார்க்கிறது உலகம். இதுவே, தத்தம் இடங்களில் இருந்து இத்தருமச் செயல்புரியும் உத்தமர்களுக்கெல்லாம் ஒளிகாட்டி வழிகாட்டுகிறது.
இன்று, ஏழையரை, முதியவரை, ஏதுமற்ற ஏதிலியரை, நோய்முற்றி நொந்துபோய் இருக்கும் துயரினரைத் தேடித்தேடிப் பசியாற்றும் அருட்பணியைத் தேர்ந்து செய்வதற்கு எத்தனையோ அறச்சாலைகள் எங்கெங்கெல்லாமோ இயங்குவதைப் பார்க்கிறோம். மணிமேகலை கதை காட்டிய ஒற்றை அமுதசுரபி இன்று உலகெங்கும் எத்தனையோ அமுதசுரபிகளாகிப் பணிபுரிவது, இவர்தம் கருணையால்தான்.
பிரிக்க முடியாது கட்டுதல், பிணித்தல்; பிறக்கிறபோதே இவ்வுடலைப் பிணித்திருப்பது, பசி. அதனை உடனே போக்காவிட்டால், பாவம் பல புரிய அதுவே காரணம் ஆகிவிடுகிறது அதனால், 'பசிப்பிணி என்னும் பாவி' என்கிறார் மணிமேகலை-ஆசிரியர்; 'அதனைத் தீர்த்தவர் புகழை அளந்து உரைக்கத் தொடங்கினால், என் நாக்கு நிமிராது' என்றும் தவிக்கிறார். பசிப்பிணி- புறப்பிணி; உயிர்ப்பிணி ஆகிய பிறவிப் பிணி, அகப்பிணி.
பிறப்பு இறப்பு என்கிற சொற்களை நிறுத்தாமல் விரைந்து சொல்லிப் பார்த்தால்,. பிறப்பு என்கிற ஒற்றைச்சொல்லின் அடுக்குகளாக அது விரிவது புரியும்.. வள்ளலார், பிறந்து இறந்து இளைத்த உயிர்களை நிரந்தரமாக்க மரணமிலாப் பெருவாழ்வுக்கான மார்க்கத்தை நிறுவுகிறார். 'நோயற்ற வாழ்வில் நாம் வாழவேண்டும்' என்பது நோக்கம். இதுதொடர்பான இவர்தம் உரைகள் ஓர் அற்புத மருத்துவராகவே இவரை உணரவைக்கின்றன.
பின்பற்றுவோர் பேறு பெற்றோர். இன்றைக்கு, பசிப்பிணி தீர்க்கப்பட்டு வருகிறது. பணி நிமித்தமாகவோ, வறுமை காரணமாகவோ மூட்ட மறந்த வீட்டு அடுப்புகளுக்குப் பதிலாக, பெரும்பெரும் அடுப்புகளில் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் விடுதிகள் பெருகியிருக்கின்றன. ஆனால், அவற்றைவிடவும் அதிக அளவில் மருத்துவமனைகள் பெருகிவருகின்றன.
இயல்பான நோய்களைவிடவும், வருத்தி வரவழைத்துக்கொண்ட செயற்கை நோய்கள் கணக்கில் அடங்காதவை. உடம்பை அழிக்கும் நோய்களை விடவும், உயிரைச் சிதைக்கும் ஒழுங்கற்ற செயல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களைப் பற்றிய நோய்கள் எத்தனை எத்தனை? இவை எவற்றால் வருகின்றன? அறமும் ஆக்கமும் தருகிற விழுமியக் கல்வியை, பேரின்ப வீட்டின் திறவுகோலான தென்மொழியாம் தமிழை விலக்கியதன் விளைவு என்பதைப் பலரும் சொல்லி இருக்கிறார்கள்.
வள்ளற்பெருமானும், பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாகத் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளாற் பல்வகை தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்' என்று இறைவனுக்கு நன்றி கூறுகிறார்.
சாகாக் கல்வியை, மிக எளிதாய் - இலேசாக அறிவிக்க வல்லதான நம் தாய்மொழித் தமிழைப் பேணாது விட்டதனால் விளைந்தது இப்பேரவலம், அயலக அறிஞர்களெல்லாம் தத்தமது மொழிகளில் பெயர்த்து எழுதிப் பேணி, பின்பற்றி வருகின்ற அறநெறிகளைப் புறந்தள்ளி வருகிறவர்களால் தடுமாறுகிறது நம் தாயகம். கவனத்தை ஈர்த்துக் காலத்தைப் போக்கும் புறச்சாதனங்களிடம் - உயிரனைய பொழுதுகளை விழுங்கிடப் பெருகும் எந்திரக் கருவிகளிடம் அடைக்கலமாகிய மனித மனங்களும் இப்போது இரக்கம் ஒன்று இல்லாத எந்திரங்களாகவே மாறிவருகின்றன.
இன்னமும் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல், கொட்டும் மழைக்கும் கொளுத்தும் வெயிலுக்கும் ஒதுங்கி வாழ்ந்திட நிழல் இல்லாமல், வருத்தும் நோய்களுக்கு மருந்து இல்லாமல் தவிக்கும் மனிதர்கள் மலிந்த பூமியையே அழிக்கும் வகையில் நடக்கும் போர்கள் எதனால்? உயிர் இரக்கம் என்னும் ஒழுக்கம் இன்மையால் தானே? இதற்கு, ஜீவகாருண்யம் என்கிற நாமம் இட்டு நமக்கான ஒழுகலாறுகளைத் தந்த வள்ளல்பெருமானைப் பின்பற்றத் தவறியதனால்தானே, குற்றச்செயல்கள் மிகுந்துவருகின்றன.
'பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே; பகராத வன்மொழி பகருகின் றீரே; நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே; நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே...'என்றும், 'எண்ணாதது எண்ணவும் நேரும்ஓர் காலம்; எத்துணை கொள்கின்றீர் பித்துஉல கீரே' என்று மனம் நொந்து பாடும் வள்ளலார், இவ்வுலகினை வெறுக்கவில்லை; சபிக்கவும் இல்லை. மாறாக, 'மானுடர்களே விரைந்து வாருங்கள்' என்று உவந்து அழைக்கிறார்.
'உலகீர், சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே; சத்தியச் சுத்தசன் மார்க்க; வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை; விளம்பினேன் வம்மினோ விரைந்தே...'என்கிறார்.
சமரச சன்மார்க்கத்தில் சேருவதற்கான தகுதி எது? 'அருள் உடையவர் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே' என்று உறுதிபட உரைக்கிறானாம் இறைவன். 'தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள் தம்மோடும் கூடி நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளையாடி நண்ணுக' என்றும் கட்டளை இடுகிறானாம். உலகம் இவ்வகையில் ஆன்மநேய ஒருமைப்பாடு எய்தல் வேண்டி, இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார், இந்த உணர்வில் ஒன்றிய எவருள்ளும் அவரே வந்து நிறைவார்; உலகம் அமைதியில் சமரசமாய் வாழ அருள்வார் என்றே நம்பிச் செயல்படுவோம் நாம்.
இன்று வள்ளலாரின் அவதாரத் திருநாள்
கட்டுரையாளர்: எழுத்தாளர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.