முகப்பு

மனதில் பதியுமாறு படிப்பது எப்படி? சில உத்திகள்!

மாணவர்கள் படித்ததை நினைவில் கொள்வதற்கான சில உத்திகள் குறித்து...

26 வினாடிகள் முன்பு
மனதில் பதியுமாறு படிப்பது எப்படி? சில உத்திகள்!
மனதில் பதியுமாறு படிப்பது எப்படி? சில உத்திகள்! - படம்: TNIE
பகிர்:

தேர்வை நினைத்துக் கவலைப்படுகிறீர்களா? அல்லது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கடினமாகப் படிக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் படிக்கும்போது குறிப்பு எடுத்துப் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கலாம் அல்லது முக்கியமான வரிகளை அடிக்கோடிட்டும் படிக்கலாம்.

ஆனால், நாம் வழக்கமாக மனப்பாடம் செய்து படிக்கும் முறைகள் தேர்வுக்கு வேண்டுமானால் உதவலாமேதவிர, படித்தவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க இந்த முறை பயன்படுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள சில வழிகள் உள்ளன.

குறிப்புகள் எடுப்பதற்கு முன்பு படித்த தகவல்களைப் புரிந்துகொள்வதற்கு அதிக நேரம் ஒதுக்குவது முக்கியமானதாகும்.

Advertisement

Advertisement

“எது எளிமையாக இருக்கிறதோ, அதைத்தான் நாம் எளிதாக நினைவில் வைத்திருக்க முடியும் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல” என்கிறார் அறிவுசார் உளவியலாளர் பூஜா கே. அகர்வால்.

படிப்பு உத்திகள் குறித்த தவறான நம்பிக்கைகள் உடைத்தல்

சமூக வலைதளங்களில் பல்வேறு படிப்பு உத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், அவை பெரிய அளவில் பயனளிப்பதில்லை.

படிக்கும்போது மூளையைத் தூண்டுவதற்காக சூயிங்கம் (Chewing Gum) மெல்லுவது, நறுமண எண்ணெய்களை முகர்வது, இசையைக் கேட்டுக்கொண்டே படிப்பது போன்றவை படிப்பதற்கு ஏற்றதல்ல என்கிறார் அகர்வால்.

“இவையெல்லாம் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம். தூக்கம் வராமல் விழித்திருக்க உதவலாம். ஆனால், அது கற்றலையோ படிப்பதையோ மேம்படுத்துவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்கிறார் அவர்.

முக்கியமான வரிகளை அடிக்கோடிடுவது, குறிப்பு எடுத்து படிப்பது போன்றவை படிப்பில் கவனம் செலுத்துவதாகத் தோன்றலாம். ஆனால், நீண்ட கால நினைவாற்றலை மேம்படுத்துவதில் இவை குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) அறிவாற்றல் உளவியல் பேராசிரியர் ராபர்ட் பிஜோர்க்.

”ஒரே தகவலைத் தொடர்ந்து திரும்பத் திரும்பப் படிக்கும் இந்த முறை, நேரத்தை வீணடிக்கக் கூடும். ஒழுங்கான முறையில் படித்தால், படிப்பதற்குத் தேவையான நேரத்தை எவ்வளவு குறைக்க முடியும் என்று மாணவர்களே எங்களிடம் கூறியிருக்கிறார்கள்” என்கிறார் ராபர்ட் பிஜோர்க்.

உண்மையில், இத்தகைய ‘ஒரே நேரத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பயிற்சி’ என்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே இருக்கும் என்று ராபர்ட் பிஜோர்க் கூறுகிறார். “

திறமையாகப் படிப்பது எப்படி?

எளிதான வழிகளை மட்டும் பின்பற்றுவதற்குப் பதிலாக, கற்றுக்கொள்வதற்கான சில சவாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பிஜோர்க். சிறிய மனரீதியான சவால்கள் மூளையில் உள்ள நரம்பியல் சார்ந்த இணைப்புகளை வலுப்படுத்துகின்றன. இது, பின்னர் அந்தத் தகவல்களை நினைவுக்குக் கொண்டுவர உதவுகின்றது.

இதற்குச் சிறந்த வழிகளில் ஒன்று ‘நினைவிலிருந்து மீட்டெடுத்துப் பயிற்சி செய்தல்’ (Retrieval Practice) ஆகும். இதற்குப் பல வழிகள் உள்ளன. ஆனால், இதற்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களே போதுமானதாக இருக்கும் என்கிறார் அகர்வால்.

படிக்கும்போதே குறிப்புகள் எடுப்பதற்குப் பதிலாக, சில பக்கங்களைப் படித்துவிட்டு சிறிது நேரம் நிறுத்துங்கள். பின்னர், படித்தவற்றில் உங்களுக்கு நினைவில் இருப்பதை எழுதுங்கள். அதன் பிறகு தொடர்ந்து படிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

அவ்வாறு நாம் சிந்தித்து நாம் எழுதும்போது ஏற்படும் மனச் சவால்களை எதிர்கொள்வதும் பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதும் நீண்ட காலக் கற்றலுக்கு உதவும் என்கிறார் அகர்வால்.

அறிவுசார் உளவியல் பேராசிரியர் ஹென்றி எல். “ரோடி” ரோடிகர், படித்த தகவல்களை நினைவிலிருந்து மீட்டெடுப்பது பல வழிகளில் பயனுள்ளதாக இருப்பதாக அவர் கூறுகிறார். அவை:

* நினைவில் உள்ளவற்றை எழுதுவது.

* படித்ததைப் பற்றி நண்பருடன் விவாதிப்பது.

* மனதிற்குள் நினைவுபடுத்திப் பார்ப்பது.

ஆனால், மூன்றாவதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

“படித்ததை ஒருமுறை பார்த்துவிட்டு, ‘இது எனக்குத் தெரியும்’ என்று நினைத்துக் கொள்வது மட்டும் போதாது. அந்தத் தகவலை உங்கள் மனதுக்குள் தெளிவாக நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்” என்கிறார் அவர்.

சிந்திக்க ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்

புதிய தகவலை படிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை படித்தவற்றை நினைவூட்ட ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.

நேரம் இருந்தால், நினைவில் இருப்பவற்றை எல்லாம் எழுதிக்கூட பார்க்கலாம். இதனை அகர்வால் ‘மூளையில் இருப்பதை அப்படியே எழுதுதல்’ (Brain Dump) என்று குறிப்பிடுகிறார்.

அதன்பிறகு, நீங்கள் படித்தவற்றை நன்றாகக் கற்றுக்கொண்டீர்களா என்பதை மதிப்பீடு செய்யுங்கள். இதற்கு ‘மீள்சிந்தனை’ (Metacognition) என்று பெயர்.

உங்களையே சில கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள்: முதன்முதலில் இந்தப் பாடத்தைப் படித்தபோது, எது மிகவும் கடினமாக இருந்தது? இந்தப் பாடத்தை நான் எவ்வளவு நன்றாகக் கற்றுக்கொண்டேன்? எந்தப் பகுதிகளை மீண்டும் படிக்க வேண்டும்? இவற்றையெல்லாம் தொடக்கத்தில் இருந்து நினைவுப்படுத்தி பாருங்கள்.

“இவையெல்லாம் நினைவிலிருந்து மீட்டெடுக்கும் பயிற்சியாகும், இந்த முறைகள் மேலும் கற்றலை மேம்படுத்தி, கூடுதல் பலனைத் தருகிறது. நீங்கள் கற்றுக்கொண்ட தகவல்களுக்கு இடையே அதிக தொடர்புகளை உருவாக்கும்போது, நீங்கள் கற்றுக்கொண்டது மனதில் ஆழமாக பதிவாகிறது” என்கிறார் அகர்வால்.

கால இடைவெளியில் படிப்பது நினைவாற்றலை அதிகரிக்கும்!

ஒரே நாளில் பல மணி நேரம் தொடர்ந்து படிப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு நாள்களில் நேரத்தை வகுத்துப் படித்தால், படித்தவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்க முடியும்.

தேர்வுக்கு முன்பு குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் படிப்பது, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவக்கூடும்.

“தேர்வுக்கு முன்பு ஒரே நேரத்தில் அதிகமாகப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், படிக்கும் நேரத்தை பிரித்துப் படித்தால் நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்” என்கிறார் அகர்வால்.

உதாரணமாக, வெள்ளிக்கிழமை தேர்வு எழுதும் ஒரு மாணவர், தேர்வுக்கு முந்தைய நாள் மூன்று மணி நேரம் தொடர்ந்து படிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். ஆனால், படித்தவற்றை விரைவில் மறந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே மாணவர் திங்களன்று ஒரு மணி நேரம், புதனன்று ஒரு மணி நேரம், வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் எனப் படித்தால், தேர்விலும் சிறப்பாகச் செயல்படுவதுடன், படித்தவற்றை நீண்ட காலத்திற்கும் நினைவில் வைத்திருக்க முடியும் என்கிறார் அகர்வால்.

சிலவற்றை மறப்பதும் கற்றலுக்கு நல்லதுதான்!

“மறந்துவிடுவதை நாம் ஒருவிதமான ஏமாற்றமாக உணர்கிறோம். ஆனால், மறப்பதும் இயல்பான ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் அகர்வால்.

எனவே, படித்த அனைத்தையும் உடனடியாக நினைவுபடுத்த முடியவில்லை என்பதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நினைவுபடுத்த முயற்சி செய்வது கற்றலை வலுப்படுத்த உதவும்.

மேலும், இரவு முழுவதும் தூங்காமல் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நன்றாக படிப்பதற்கு உதவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, போதுமான இரவு தூக்கம் ஆகும். பகலில் நாம் கற்றுக்கொண்ட தகவல்களை நினைவில் நிலைநிறுத்துவதற்கு போதுமான தூக்கம் உதவுவதாக என்று ரோடிகர் கூறுகிறார்.

“பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஏன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்கூட, படிப்பதற்காக இரவு நேரத்தில் தூங்காமல் இருக்கிறார்கள். அப்படி செய்தால் நன்றாகப் படிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது சரியான அணுகுமுறை அல்ல” என்கிறார் அவர்.

summary

Recall what you have read: close the book and try writing down what you have read.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.