FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மொழிபெயர்ப்புகள் ஒன்றுபோல இருப்பதில்லை

மொழிபெயர்ப்பின் மீது சிறு வயதிலேயே ஈடுபாடு ஏற்பட்டது. அதற்கு சில மோசமான மொழிபெயர்ப்புகளை வாசிக்க நேர்ந்ததும் ஒரு காரணம் என்று கூறலாம்.

7 நவம்பர் 2026, 7:48 pm
பகிர்:

'மொழிபெயர்ப்பின் மீது சிறு வயதிலேயே ஈடுபாடு ஏற்பட்டது. அதற்கு சில மோசமான மொழிபெயர்ப்புகளை வாசிக்க நேர்ந்ததும் ஒரு காரணம் என்று கூறலாம். ஃப்ரெஞ்ச், மலையாளம், உருது என நிறைய மொழிகளைக் கற்க வேண்டும் என விரும்பினேன். ஒரு புத்தகத்தின் இந்தி வடிவத்துக்கும் ஆங்கில வடிவத்துக்கும் இடையிலேயே நிறைய வேறுபாடுகள் இருந்ததைக் காண முடிந்தது.

ஆங்கிலத்தில் வாசித்த ஓஷோவைத் தமிழில் வாசித்தபோது ஏராளமான வித்தியாசங்களும், அரைகுறைத் தகவல்களாகவும் இருந்தன. எனக்குப் பிடித்த சில கதாசிரியர்களின் கதைகளையாவது நன்றாக மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்துத்தான் முதலில் தொடங்கினேன். அதுவே மெல்ல வளர்ந்து நாவல் என்ற இடத்தை நோக்கி நகர்ந்தது' என்கிறார் வேலூரைச் சேர்ந்த பேராசிரியை கயல்.

எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர் என்று பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர். அவர் மேலும் கூறியது:

Advertisement

Advertisement

'சிறு வயதிலேயே வாசிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அம்மா பரமேஸ்வரி ஸ்ரீநாதன் பணியாற்றிய வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியின் எதிரே இருந்த நூலகத்தில் நிறைய நூல்களை வாசித்திருக்கிறேன். ஆங்கிலத் துப்பறியும் கதைகள், உளவியல் தொடர்பான நூல்கள்,   தத்துவ நூல்கள் மிகப் பிடித்தமானவை.

ஆசிரியராகப் பணியாற்றிய என் அம்மா மிகுந்த அர்ப்பணிப்புள்ளவர். இருந்தாலும், நான் வாழ்நாளில் ஆசிரியர் பணிக்குச் செல்லக் கூடாது என்ற முடிவோடு இருந்தேன். ஆனால், வாழ்க்கை என்னை அங்குதான் இட்டுச்சென்றது.

முருகப்பா குழுமத்தின் வேலூர் கிளையில் பணியாற்றியபோது, அந்தக் கிளை மூடப்பட்டு சென்னையில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை செல்ல விரும்பாத எனக்கு வேலூர் ஆக்சிலியம் கல்லூரியின் வணிக மேலாண்மையியல் துறையில் பணி கிடைத்தது.

பணியில் சேர்ந்த இரண்டு நாள்களிலேயே இந்த வேலை எவ்வளவு மகத்தானது, இனிமையானது என்பதை அறிந்தேன். அதன் பிறகு டி.கே. எம். மகளிர் கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு செங்குந்தர் எம்.பி.ஏ. ஸ்டேண்ட் அலோன் கல்லூரி, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் பல பொறுப்புகளில் பணிபுரிந்தேன். நான் படித்த பல்துறை படிப்புகள் மற்றும் நூல்கள் அனைத்துமே பல்வேறு வகைகளில் என் வகுப்பறைகளில் என் மாணவர்களுக்குப் பல கோணங்களில் கற்பிக்க உதவுகின்றன.

எழுத்தார்வம் ஒன்பதாம் வகுப்பு படித்தபோதே, கவிதைகள் எழுதினேன். பள்ளி நாள்களில் சக மாணவிகள் கவிதைகள் கேட்பார்கள். எழுதித்தருவேன். சில மாணவிகள் அதைப் பத்திரமாக வைத்துக்கொள்வார்கள். பள்ளிகளில் தமிழ்க் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று மாவட்ட அளவில் நிறைய பரிசுகள் வாங்கியிருந்தேன்.

2015- ஆம்ஆண்டில் வெளியான 'கல்லூஞ்சல்' என்ற முதல் கவிதைத் தொகுப்பில் உள்ள 90% கவிதைகள் நான் பள்ளி, கல்லூரிகளில் பயின்றபோது எழுதியவையாகும்.

பின்னர், மழைக்குருவி (2016), ஆரண்யம் (2018), ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019), உயிரளபெடை (2020) என 5 கவிதைத் தொகுப்புகள் வெளியாகின. 2022-ஆம் ஆண்டில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன்.

மொழிபெயர்ப்பின் மீது ஆர்வம் திரும்பியதால், கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிடுவதும் சிறிது தடைப்பட்டுவிட்டது. 2026-ஆம் ஆண்டில் 'மீன் கண் பெண்' என்ற நூல் வெளியானது. இரண்டாம் கவிதை நூலான 'மழைக் குருவி'க்கு, 'பயணம்' இதழ் சிறந்த கவிதை நூலுக்கான பரிசை 2018- ஆம் ஆண்டில் வழங்கியது.

'மீன் கண் பெண்' கவிதை நூலுக்கு, திரைப்படப் பாடலாசிரியரான கவிஞர் கபிலன், தன் மகள் தூரிகை யின் பெயரில் வழங்கும் தூரிகை விருதை வழங்கினார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அப்துல் ரசாக் குர்னா எழுதிய 'போரொழிந்த வாழ்வு' என்கிற 420 பக்க நாவலையும், நெர்மின் இல்டிரிம் எழுதிய 'இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள்' என்கிற 620 பக்கங்கள் கொண்ட நாவலையும் மொழியாக்கம் செய்ய வைத்தது.

'புதிய கடவுளரும் பழைய துர் தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்' எனும் தொகுப்பும், 'கனவு இல்லம்' எனும் அமெரிக்கச் சிறுகதைகள் கொண்ட தொகுப்பும் 2022 -ஆம் ஆண்டு வெளியாகின.

2025-இல், 'கிளிமஞ்சாரோவின் வெண்பனி' என்கிற அயலகச் சிறுகதை தொகுப்பு வெளியானது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் கீன் எழுதிய 'ஜனநாயகத்தின் சுருக்கமான வரலாறு', டான் ப்ரவுன் எழுதிய 'இரகசியங்களின் இரகசியம்' மொழிபெயர்ப்பு நூல் விரைவில் வெளியாக உள்ளது.

2024 -ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது, 2024-இல் வெளியான நூல்களுக்கான மொழிபெயர்ப்புப் பிரிவில் 'போரொழிந்த வாழ்வு' நாவலுக்காக பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மொழி

பெயர்ப்பு விருது, 2025-இல் வெளியான நூல்களுக்கான மொழிபெயர்ப்புப் பிரிவில் 'இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள்' நாவலுக்காக, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  அறச் செம்மல் சீனு சின்னப்பா விருது, நல்லி திசை எட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளேன்' என்கிறார் கயல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.