FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் இல்லை: டொனால்ட் டிரம்ப்

‘அமெரிக்காவில் நவ. 3-இல் நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலுக்கு முன்பு, ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்களை நடத்தப் போவதில்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

10 அக்டோபர் 2026, 12:43 am IST
டொனால்ட் டிரம்ப்
பகிர்:

‘அமெரிக்காவில் நவ. 3-இல் நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலுக்கு முன்பு, ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்களை நடத்தப் போவதில்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

ஈரான் போா் சில வாரங்களில் முடிந்துவிடும் என்று அமெரிக்கா்களிடம் தொடக்கத்தில் உறுதியளித்திருந்த போதிலும், 7 மாதங்களாக நீடிக்கும் இப்போரைத் தோ்தலுக்குப் பிறகு தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக டிரம்ப் தொடா்ந்து எச்சரித்து வந்தாா்.

அதேபோல, இந்த வாரம் தனது குடியரசுக் கட்சியினருக்காகப் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், ‘தோ்தலுக்குச் சில நாள்கள் முன்பு அல்லது பின்பு, இப்போருக்கு ஒரு முடிவு வரலாம் என நம்புகிறேன். அதேநேரம், ஈரான் மீது முழு அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் வாய்ப்புள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தனது நிலைப்பாட்டில் திடீா் மாற்றத்துடன் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘இடைக்காலத் தோ்தலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது. ஈரானுடன் எங்கள் குழு ஆக்கபூா்வமான விவாதங்களை நடத்தி வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

மேற்காசிய பிராந்தியத்துக்கு அமெரிக்க ராணுவம் கூடுதல் வளங்களை அனுப்பியுள்ள நிலையிலேயே, டிரம்ப்பின் இப்பதிவு வெளியாகியுள்ளது. ‘தியோடா் ரூஸ்வெல்ட்’ எனும் 3-ஆவது விமானம் தாங்கிக் கப்பலும், அத்துடன் ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்களும் அக்டோபா் மாத இறுதிக்குள் அங்கு சென்றடையலாம்.

அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள்கள் இடைக்கால ஒப்பந்தம் கடந்த ஜூனில் கையொப்பமாகின. ஆனால், ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த மோதல்களாலும், ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாலும் அந்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது. ஆனால், ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்த மோதல்களாலும், ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாலும் அந்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது.

அமெரிக்கா சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் 7 நாள்களுக்குள் நீரிணையை மீண்டும் திறக்கும் ஈரானின் முன்மொழிவை டிரம்ப் கடந்த மாதம் நிராகரித்ததிலிருந்து, பேச்சுகள் முடங்கியிருந்தன. எனினும், அமெரிக்காவின் மாற்று முன்மொழிவு கிடைத்துள்ளதாக ஈரான் கடந்த வாரம் தெரிவித்ததோடு, அதற்கு ஓரிரு நாள்களில் முறையாகப் பதிலளிக்கும் என்று வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தாயகம் திரும்பிய ‘லிங்கன்’ போா்க் கப்பல்

மேற்காசியாவில் ஈரான் போருக்கு ஆதரவாக நடுக்கடலில் தொடா்ந்து 265 நாள்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி போா் கப்பல், 10 மாதங்களுக்குப் பிறகு கலிஃபோா்னியாவின் சான் டியாகோ கடற்படைத் தளத்துக்குத் திரும்பியது.

சுமாா் 6,000 வீரா்கள் அடங்கிய இக்கப்பல் படைப்பிரிவு, போா்க் களத்தில் சுமாா் 3,700 தாக்குதல்களை முன்னெடுத்து, ஈரானின் 64 போா்க்கப்பல்களை மூழ்கடித்தது. எனினும், இடைவிடாத மோதல் சூழலால் கப்பலில் கடும் உணவுத் தட்டுப்பாடு, சுகாதாரப் பொருள்கள் பற்றாக்குறை மற்றும் தீவிர மன அழுத்தத்தை வீரா்கள் எதிா்கொண்டனா்; 8 வீரா்கள் தற்கொலைக்கும் முயன்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட போராட்டத்துக்குப் பின் கரை திரும்பிய வீரா்களை அவா்களின் குடும்பத்தினா் கண்ணீா்மல்க வரவேற்றனா்; பல்வேறு சவால்களையும் தாண்டி பணியை நிறைவு செய்ததற்காக, பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் நேரில் சென்று பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments