FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேளீர் தமிழ் வரலாறு-13: தாய்மொழிக்காகச் சுதேசமித்திரனின் முதற்குரல்!

இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்காகப் பொதுவெளியில் ஒலித்த முதல் தமிழ்க்குரல் 'சுதேசமித்திரனி'ன் குரல்தான்!

7 நவம்பர் 2026, 5:53 pm
பகிர்:

இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்காகப் பொதுவெளியில் ஒலித்த முதல் தமிழ்க்குரல் 'சுதேசமித்திரனி'ன் குரல்தான்!

'சுதேசமித்திரன்' ஆசிரியர்க்கு ஒரு கட்டுரை அனுப்பினேன்' என 1.9.1903ஆம் தேதியும், 'சில பகுதிகள் நீக்கப்பட்டு என் கட்டுரை 'சுதேசமித்திரனி'ல் வெளிவந்தமை கண்டு மனநிறைவெய்தினேன்' என 3.9.1903ஆம் தேதியும் தன் அந்தரங்க நாட்குறிப்பில் ஆர்.எஸ். வேதாசலம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

சுவாமி வேதாசலமாகவோ மறைமலையடிகளாகவோ அப்போது அவர் ஆகியிருக்கவில்லை.

Advertisement

Advertisement

நாட்குறிப்பு வடிவிலான சுயசரிதை என்று மறைமலையடிகளின் நாட்குறிப்புகளைச் சொல்லலாம். உ.வே. சாமிநாதையரின் 'என் சரித்திரம்', திரு.வி.க.வின் 'வாழ்க்கைக் குறிப்புகள்' வரிசையில் தமிழின் வரலாற்றையும் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் அறியத் துணையாகும் ஆவணம் அவை.

அடிகள் தன் கைப்பட எழுதிய ஐம்பத்துமூன்று ஆண்டு (1898-1950) நாட்குறிப்புத் தொகுதிகளிலிருந்து தெரிவுசெய்த பகுதிகளைப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி 1988இல் மொழிபெயர்த்துப் பதிப்பித்துத் தமிழுலகுக்குத் தந்திருந்தார். இன்றுவரை நாட்குறிப்புகளின் முழுவடிவம் வெளிவரவில்லை.

மறைமலையடிகளின் கட்டுரை வெளிவந்த காலம் நாளிதழாகச் 'சுதேசமித்திரன்' வெளிவந்த தொடக்க காலம். முழுக்க முழுக்க ஜி. சுப்பிரமணிய ஐயர் தான் ஆசிரியர். தமிழாசிரியர் ஒருவர் எழுதிய கட்டுரையை உடனடியாக வெளியிட்டிருக்கிறார் அவர். அவரது கத்தரி பதம் பார்த்துவிட்டதே எனக் கட்டுரையாசிரியர் வருத்தப்படாமல் மனநிறைவெய்தும் அளவு 'சுதேசமித்திரன்' இதழாசிரியரின் பணி இருந்திருக்கிறது.

'தமிழ்' என்ற தலைப்பிலேயே 1906ஆம் ஆண்டு நூலொன்றை எழுதியவர் திருமணம் செல்வக்கேசவராயர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் சென்னப்பட்டணத்தில் அதிகம் பேசப்பட்ட பேராசிரியர்களில் அவரும் ஒருவர். சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தனால் முன்னோடிப் புள்ளியாகக் குறிப்பிடப்பட்டவர். பாரதியாரின் 'இந்தியா' வார இதழில் 'கற்பலங்காரம்' என்னும் தமிழின் முன்னோடிச் சிறுகதையை எழுதியவர். 'தமிழுக்குக் கதி' எனக் கம்பனையும் திருவள்ளுவரையும் தமிழர் நெஞ்சில் அந்த நாளில் அழுத்தமாகப் பதியச் செய்தவர்.

'தமிழ்' என்னும் தனது நூலின் ஆங்கில முன்னுரையில் ஓர் அரிய செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். 1890களின் தொடக்கத்தில் 'சுதேசமித்திரன்' இதழில் தமிழ் குறித்துப் பதினைந்து கட்டுரைகளை அவர் எழுதியிருந்தார் என்பதே அந்தச் செய்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழுக்குச் 'சுதேசமித்திரன்' அளித்துவந்த இடத்தைத் திருமணம் நம் நெஞ்சில் மணக்கச் செய்கிறார்.

'சுதேசமித்திரன்' பக்கங்கள் தோறும் எத்தனை எத்தனையோ பரிமாணங்கள்! அரிய வரலாற்றுச் செய்திகளின் கருவூலம்! 1902 சூலை 4ஆம் தேதி திடீரென விவேகானந்தர் காலமாகிவிட்டார். அவர் மரண

மடைந்த செய்தி தமிழ் மட்டுமே அறிந்த தமிழர்களுக்கு எப்படி வந்துசேர்ந்திருக்கும்? 'சுதேசமித்திரன்' 1902 சூலை 8ஆம் தேதி நாளிதழில் செய்தி வந்துவிட்டது. ருசியாவில் லியோ டால்ஸ்டாய் 1910 நவம்பர் 20இல் காலமானார். விரிவான வாழ்க்கை வரலாற்றோடு அந்தச் செய்தியும் உடனடியாகச் 'சுதேசமித்திரனி'ல் வெளிவந்துவிட்டது. தமிழ்நாட்டுச் செய்தியென்ன, இந்திய, உலகச் செய்திகளென்ன எல்லாவற்றையும் தமிழர்களின் கைகளுக்கு, பார்வைக்கு உடனுக்குடன் 'சுதேசமித்திரன்' கொண்டுவந்துசேர்த்தது.

ஜி. சுப்பிரமணிய ஐயர் காலத்து நாளிதழில்தான், 26-5-1914இல் கனக சுப்புரத்தினம் என்னும் தன் இயற்பெயரில் முதன்முதலாகப் பாரதிதாசன் எழுதிய 'தமிழ் பாஷைக்குப் புதிய நிகண்டு வேண்டும்' என்னும் கருத்தை முன்வைத்த கட்டுரை வெளிவந்திருந்தது.

தமிழ்ச் சமூகத்தைப் பிரதிபலித்தும், தமிழின் வளர்ச்சிக்கும் இந்திய விடுதலைக்கும் சமூகச் சீர்திருத்தத்திற்கும் பாடுபட்டும் தமிழர்களுக்கு உணர்வூட்டி அறிவூட்டும் பணியைச் 'சுதேசமித்திரன்' தொடர்ந்துகொண்டேயிருந்தது.

ஜி. சுப்பிரமணிய ஐயர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழில் ஒரே நாளிதழ்தான். நீதிக் கட்சியின் 'திராவிடன்', திரு.வி.க.வின் 'தேச பக்தன்' முதலியனவெல்லாம் பிறகுதான் தோன்றின.

வடமொழியின் பெருமை அறிந்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதைவிடத் தாய்மொழிக்கு நிகர் எதுவுமே இல்லை என்ற தெளிவும்கொண்டவர் அவர்.

15.10.1902 'சுதேசமித்திரன்' ஒரு துணைத் தலையங்கத்தோடு வெளிவந்தது. தமிழ்ச் சமூகத்தில் தமிழுக்காக ஒலித்த முதல் போர்க்குரல் அது.

தமிழ்மண்னில் தமிழுக்காக எத்தனை எத்தனை அமைப்புகள், இயக்கங்கள் காலந்தோறும் வீறார்ந்த அரும்பெரும் பணிகளை ஆற்றியிருக்கின்றன' ஆற்றுகின்றன. அவை அனைத்திற்கும் முன்னோடிச் செயல்பாடு இது. தாய்மொழிகளுக்காக, தமிழுக்காக முதல் தமிழ் நாளிதழ் முதற்குரலைத் தனது தலையங்கத்தின் வாயிலாக முழங்கியது.

அந்தத் துணைத் தலையங்கத்தின் தலைப்பு 'உயர்தரக்கல்வி சிப்பார்சுகளும் திராவிட பாஷைகளும்'.

ஏன் இந்தத் தலையங்கம்!

என்ன நடந்தது?

அன்றைய இந்தியாவின் வைசிராய் கர்சன் பிரபுவின் எண்ணப்படி, இந்திய அரசாங்கத்தின் உள்துறை 1902 ஜனவரி 27இல் செய்த தீர்மானத்தின்படி, பிரிட்டிஷ் இந்தியாவின் பல்கலைக்கழகங்களின் தரத்தை ஆராயவும் மேம்படுத்தவும் 'இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆணையம்' அமைக்கப்பட்டது.

ஆங்கிலேய வழக்கறிஞரும் கல்வியாளருமாகிய சர் தாமஸ் ராலே (தஹப்ங்ண்ஞ்ட்) இந்த ஆணையத்தின் தலைவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலச் சட்டப் பேராசிரியராகவும், பிரிவி கவுன்சிலின் பதிவாளராகவும் இந்திய வைசிராயின் நிருவாகக் குழுவின் அங்கத்தினராகவும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர் அவர்.

இந்த ஆணையத்தில் அறுவர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களைத் தவிர ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஓர் உள்ளூர் உறுப்பினரும் நியமிக்கப்பட்டார். அப்படிச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு - சென்னை மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டவர் சர் சி. சங்கரன் நாயர்.

இந்தக் குழுவின் அறிக்கை 1902ஆம் ஆண்டிலேயே சிம்லா அரசு மத்திய அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது.

இந்த ஆணையம் மொழிப் பாடங்களுக்குச் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. கட்டாய மொழிப்பாடமாக ஆங்கிலத்தோடு ஒரு செவ்வியல் மொழியைப் பட்டப் படிப்பில் கற்க வேண்டும் என்றது. செவ்வியல் மொழிக்கு மாற்றாகத் தாய்மொழியை - வட்டார மொழியை (வெர்னாகுலர்) ஏற்கக் கூடாது எனத் தெரிவித்தது. அந்தக் காலம் சமஸ்கிருதம் செவ்வியல் மொழியாகக் கொள்ளப்பட்டிருந்தது. தமிழ் செவ்வியல் மொழியாகக் கருதப்படவில்லை. அதாவது சமஸ்கிருதம் கட்டாயம். தமிழ் முதலான மொழிகளுக்கு இடமே இல்லை.

பட்டப்படிப்பில் எல்லா நிலைகளிலும் தாய்மொழிகளில் - வட்டார மொழிகளில் கட்டுரை எழுதுதல் மட்டும்தான் பாடப் பகுதி. அது கட்டாயம். ஆனால் அதைப் பாடமாகக் கற்பிக்கத் தேவையில்லை.

இவற்றைத் தவிரத் தாய்மொழிகளின் மேம்பாட்டுக்குச் சில ஆலோசனைகளும் கூறப்பட்டிருந்தன.

இந்த இரு பரிந்துரைகளும் பொதுவாக மக்கள் பேசும் தாய்மொழிகளைப் புறக்கணிப்பனவாக இருந்தன. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் தேவையில்லை என்னும் நிலையை உருவாக்கின.

வெகுண்டெழுந்தது 'சுதேசமித்திரன்'.

'உயர்தரக்கல்வி விசாரணைச் சங்கத்தாருடைய சிப்பார்சுகள் பலவற்றுள் சமஸ்கிருத பாஷை உயர்தரக் கலாசாலை மாணவர்களுக்கு கட்டாய பாடங்களில் ஒன்றாயிருக்க வேண்டுமென்கிற சிப்பார்சுமொன்று. அச்சங்கத்தார் அதனைக் கட்டாய பாடங்களில் ஒன்றாய்க் கருதவேண்டுமென்று சொல்லியதோடு நிறுத்திக் கொள்ளாமல், தென்னிந்தியாவிலுள்ள ஜனங்களனைவருக்கும் தாய்ப்பாஷைகளாயுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இவைகளை அடியோடு உயர்தரக் கலாசாலைகளை விட்டே தொலைத்துவிடலாமென்றும் சிப்பார்சு செய்திருக்கிறார்கள்' எனத் தொடங்கியிருந்தது துணைத் தலையங்கம்.

மேலும் 'சமஸ்கிருத பாஷையின் பெருமையும் உபயோகமும் எங்ஙனமிருப்பினும், ஏற்கெனவே மரித்துப்போன பாஷையென்றும், வருஷக் கணக்கா யிருக்குமிடந் தெரியாமல் மறைந்துபோயுள்ள பாஷையென்றும் சொல்லப்படும் அதனை மாணவர்கள் வாசித்தே தீரவேண்டுமென்றும், அவர்கள் தங்கள் வீடுகளிலும் வெளியிடங்களிலும் தங்கள் பெற்றோருடனும் உற்றோருடனும் மற்றோருடனும் பேசிவரும் பாஷைகளைக் கைவிடவேண்டுமென்றும் அச்சங்கத்தார் மனதிற் பட்டதற்குக் காரணம் மட்டும் புலப்படவில்லை' என வினாவையும் வியப்பையும் அடுத்து முன்வைத்திருந்தது.

தாய்மொழி வழிக் கல்வியல்ல, ஒரு பாடமாகக்கூடத் தாய்மொழிகளுக்கு இடமில்லை என்ற அரசாங்கத்தின் நிலைக்கு எதிராக அடுக்கடுக்காகக் கடுமையாகக் கருத்துகளைத் துணைத் தலையங்கத்தில் முன்வைத்தார் ஜி. சுப்பிரமணிய ஐயர்.

சென்னைப் பல்கலைக்கழகம்கூடத் தாய்மொழிகளை ஆதரிக்காவிட்டால் எப்படி என்று கேட்டுத் தலையங்கம் இப்படி நிறைவுபெற்றிருந்தது:

'மிஸ்டர் பாட்பீல்டு என்ன, மிஸ்டர் லாஸரெஸ் என்ன, இவ்விரண்டு பாதிரிகளுக்கு தமிழ்பாஷையினிடத்துள்ள அபிமானங்கூட நம்மிந்தியர்களுக்கிருப்பதாய்க் காணவில்லை.

'நண்பர்காள்! இச்சமயம் உங்கள் தாய்ப்பாஷைகளுக்கு நேரவிருக்கும் கெடுதியை நன்குணர்ந்து, சென்னைச் சர்வகலாசாலையார்கூட, உங்கள் தாய்ப்பாஷைகளை ஆதரிப்பதை நிறுத்திவிட்டால், ஏற்கெனவே ஆதரிப்பாரின்றித் தவிக்கும் அப்பாஷைகள் விருத்தியடையப் பெறாது நசிக்குமென்பதை எடுத்துக்காட்டி முறையிடுங்கள்.'

இந்தத் தலையங்கத்தை எழுதியது மட்டுமல்ல, இன்னும் எல்லா வகையான முயற்சிகளையும் தமிழுக்காக மேற்கொண்டார் ஜி. சுப்பிரமணிய ஐயர்.

அதே காலத்தில் இந்தப் பிரச்சினையில் ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையின் ஆங்கில மாத இதழான 'சித்தாந்த தீபிகை' தமிழுக்கு, தாய்மொழிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. 1903 ஜனவரி - பிப்ரவரி இதழில் அறிஞர் பண்டிதர் சவரிராயன் இத்தொடர்பாக விரிவாக எழுதுகையில் 'தமிழுலகு தமிழுக்காகக் குரல்கொடுத்த அறிஞர்களான பாட்பீல்டு, ஜான் லாஸரெஸ், ஜி. சுப்பிரமணிய ஐயர் முதலியோருக்கு உரிய அளவில் நன்றி பாராட்டவில்லை' என எழுதியிருந்தார்.

ஆங்கிலேய அரசாங்கம் மட்டுமல்ல, தமிழுக்கு எதிரான நம்மவர்களும் அசைந்துகொடுப்பதாக இல்லை.

1905ஆம் ஆண்டிலும் தமிழுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.

1905 மே 5ஆம் தேதி. 'சுதேசமித்திரனி'ல் ஒரு தலையங்கம். இந்த முறை முதன்மைத் தலையங்கம். தலைப்பு என்ன தெரியுமா?

'சம்ஸ்கிருதப் படிப்பும் தேசபாஷைப் படிப்பும்'.

முதற் பத்தியில் விரிவாக சமஸ்கிருதத்தின் பெருமையைப் பேசிய தலையங்கத்தின் இரண்டாம் பத்தி 'ஆனால்' என்று தொடங்கியது.

'ஆனால் சம்ஸ்கிருதத்தைப் படித்தும் ஆதரித்தும் வரும் நமது ஜனங்கள் சீவபாஷைகளாயிருக்கும் தேசபாஷைகளை அசட்டை செய்தல் தகுமா என்று ஆலோசிக்க வேண்டும். நம்மவரில் பலர் ஒருவிதமான தேசாபிமானத்தால் தூண்டப்பட்டு, சம்ஸ்கிருதங் கற்றலே யவசியமென்றும், தமிழ் தெலுங்கு முதலான சீவபாஷைகளை அசட்டை செய்துவிடலாமென்றும் சொல்லுவதுண்டு.

'தேசபாஷைகள் நமது பிறப்பிலேயே நமக்கு வருகிறபடியால், சம்ஸ்கிருதம் மட்டும் நன்றாய்க் கற்றால் ஜனன பாஷையைக் கஷ்டமின்றிக் கற்றுவிடலாமென்பது இவர்களபிப்பிராயம். இந்த அபிப்பிராயத்தைக் கொண்டே காலேஜ்களில் தேசபாஷை கற்பிக்கப்பட வேண்டியதில்லையென்றும், சம்ஸ்கிருதம் கட்டாயமாகப் படிப்பிக்க வேண்டுமென்றும்

சர்வகலாசாலைப் பரிசீலனைக் கமிஷன் சிப்பார்சு செய்ய, அதை நாம் சரியல்லவென்று வாதித்தபோது நம் வாதத்தை வெகுபேர் ஒப்பவில்லை. யோசித்துப் பார்த்தால், தேச பாஷைகள் அபிவிருத்தியாவது தேச úக்ஷமத்துக்கு எவ்வளவு தூரம் அவசியமென்பது விளங்கும்.

'சர்வ ஜனங்களும் அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் பேசுவது தேச பாஷையே தவிர சம்ஸ்கிருத பாஷையல்ல'என்று தொடர்ந்தது அந்தத் தலையங்கம்.

மேலும், 'தமிழ் பேசும் ஜனங்கள் மட்டும் 160 லட்சம் ஜனங்களுண்டு. இந்த 160 லட்சம் ஜனங்கள் இயல்பாய்ப் பேசும் பாஷையை விருத்தி செய்யாமல் அவர்களுக்குத் தற்கால உபயோகத்துக்குரிய அறிவை சம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்ட நூல்கள் மூலமாகப் பரவச்செய்கிறதென்றால், அந்த முயற்சி பயன்படுமா?' எனக் கேட்டார் ஜி. சுப்பிரமணிய ஐயர்.

முத்தாய்ப்பாகத் 'தமிழ்ப் பாஷையில் ஏற்கெனவே பல அரிய நூல்கள் செய்யப்பட்டு தமிழ் ஜனங்கள் அவைகளை உற்சாகத்துடன் கற்று வருகிறார்கள். இந்த நூல்களையனுசரித்து மேன்மேலும் புதுநூல்கள் செய்து பாஷையைப் பலப்படுத்துவதே நலமாகும்' என்று தீர்மானமாக அறிவுறுத்தினார்.

1911 ஏப்ரல் 5. தமிழ் முதலிய தேச மொழிகளின் புறக்கணிப்பு தொடர்ந்துகொண்டிருந்த காலம். மீண்டும் 'சுதேசமித்திரன்' தலையங்கம்.

இந்த முறை தலையங்கத்தின் தலைப்பு: 'யூனிவர்சிடிப் பரீட்சைகளில் தமிழை அசட்டை செய்தல்'. விரிவான தலையங்கம். ஆட்சியாளர்களின் மனமும் தாய்மொழியைப் போற்றாத நம்மவர்களின் மனமும் மட்டும் விரிவுபெறவே இல்லை.

இந்த விவகாரம் பற்றியும் 'சுதேசமித்திரன்' செய்த தொடர்முயற்சிகள் பற்றியும் ஒரு தனிநூலே எழுத வேண்டும்.

தலையங்கத்தின் முடிவுப்பகுதியை மட்டும் இப்போது பார்ப்போம்.

'தமிழைப் போன்ற தேசபாஷைகள் நாகரிகமற்ற மிலேச்ச பாஷைகளல்ல. தமிழ்ப் பாஷையானது அநாதி காலந்தொட்டுச் சிறந்த பல நூல்களைப் பெற்று, நாளதுவரையில் அபிவிர்த்தியாகி வருவது மல்லாமல் அது இரண்டு கோடி ஜனங்களால் பேசப்படும் பாஷையாகவும் இருக்கின்றது.

'இது தமிழ்ப் பாஷையை நமது யூனிவர்சிடி விசேஷமாய் ஆதரிக்க வேண்டிய காலமாயிருக்க, யூனிவர்சிடியிலுள்ள நம்மவர்களே அதை அலட்சியம் செய்து வருவது தேசத்தைப் பிடித்த கேடுகாலமேயன்றி வேறல்ல.'

இதற்குமேல் என்ன சொல்ல!

ஜி. சுப்பிரமணிய ஐயர் பாரதி சொன்னதுபோல் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட 'தமிழ்நாட்டுத் தலைவர்' மட்டுமல்லர்' தமிழ் விடுதலைக்கும் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்!

'சுதேசமித்திரன்' தலையங்கம் எழுதி எட்டு மாதங்கள் உருண்டோடியிருந்தன. ஜி. சுப்பிரமணிய ஐயர் என்னும் நாளிதழ் ஆசிரியரின் தலையங்கக் குரல், ஒரு தமிழாசிரியரின் குரலாகச் சென்னை மாகாண ஆளுநரின் முன்பு மென்மையாக ஒலித்த நிகழ்வு நடந்தது. சென்னை இராசதானிக் கல்லூரி என்னும் இன்றைய மாநிலக் கல்லூரிக்கு 1912 ஜனவரி 25ஆம் தேதி சென்னை மாகாண ஆளுநர் கார்மைக்கேல் வந்திருந்தார். தமிழாசிரியர் உ.வே. சாமிநாதய்யரை அவருக்கு முன்பே அறிமுகமுண்டு. தனது வகுப்பறைக்கு வருகைதருமாறு ஆளுநரை உ.வே. சாமிநாதய்யர் கேட்டுக் கொண்டார். ஆளுநரும் வந்தார்.

இதற்கிடையே தொடர்புடைய ஒரு செய்தியைத் தெளிவுபடுத்திக் கொண்டு நாமும் அந்தத் தமிழ்ப்பாட வகுப்பறைக்குப் போவோம். சங்க நூல்களைப் பதிப்பித்த, சிந்தாமணியைப் பதிப்பித்த, சிலம்பைப் பதிப்பித்த உ.வே. சாமிநாதய்யர் எப்படி எப்படியெல்லாம் எந்த எந்த இலக்கண இலக்கியங்களையெல்லாம் சென்னைக்கு 1903இல் வந்ததிலிருந்து தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்திருப்பார்? தமிழ்ச்சுவை பருக அள்ளி அள்ளி வழங்கி மகிழ்ந்திருப்பார்? கற்பனை செய்து பார்க்கிறீர்களா? உங்கள் கற்பனையெல்லாம் வீண்! எந்த ஒன்றையும் அவர் நடத்தவில்லை. என்ன காரணம்? எல்லாம் 1902 'கமிஷன் ரிப்போர்ட்'டுதான் காரணம். தமிழில் பாடப்பகுதி கட்டுரை எழுதுவது என்பது மட்டும்தான்! எந்த இலக்கண இலக்கியமும் பாடமாகக் கிடையாது. இதை மாற்றத்தானே முன்னத்தி ஏராகச் 'சுதேசமித்திரன்' முனைந்து பாடுபட்டது.

இப்போது மாட்சிமை பொருந்திய ஆளுநருடன் நாமும் வகுப்பறைக்குப் போவோமா? பழைய ஓலைச்சுவடிகளையெல்லாம், தாம் பதிப்பித்த சிந்தாமணியையெல்லாம் காட்டி ஆளுநரை மயக்கிவிட்டார் நம் தமிழாசிரியர். போதும்போதாதற்கு ஆளுநரைப் பாராட்டி இரண்டு வெண்பாக்களை வேறு பாடிவிட்டார். வடமொழிப் பேராசிரியர் மளூர் ரங்காசாரியார் எல்லாவற்றையும் மொழிபெயர்த்துச் சொன்னார்.

பத்து நிமிடத்தில் புறப்பட இருந்த ஆளுநர் அந்த வகுப்பறையிலேயே அரை மணிநேரம் இருந்துவிட்டார்.

புறப்பட இருந்த ஆளுநரிடம் கடைசியாக ஒன்றைச் சொன்னார் உ.வே. சாமிநாதய்யர். அது இதுதான்:

'தமிழில் நிறையச் செய்யுட்கள் இருக்கின்றன. நான் பழைய செய்யுள் நூல்களை நன்றாகப் படித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நாங்கள் பாடம் சொல்வதற்கும் மாணவர்கள் படிப்பதற்கும் இப்போது வாய்ப்பே இல்லை. காரணம், கல்லூரிப் பாடங்களில் அவை சேர்க்கப்பெறாது வெறும் கட்டுரை எழுதுவது மாத்திரந்தான் இருக்கிறது. தமிழில் எத்தனையோ நூல்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து படிக்கின்றவர்கள் குறைவாக இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்திலேயே அவர்களுக்கு அந்த நூல்களின் சுவையை அனுபவிப்பதற்கு வழியமைத்தால், பின்னால் அவற்றை முழுவதும் நன்றாகப் படிக்கவேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். எனவே கல்லூரிகளிலேயே தமிழ் இலக்கியங்களைப் படிப்பதற்கு வழிசெய்வது நன்றாக இருக்கும்.'

ஆளும் வர்க்கம் எல்லாவற்றையும் கேட்டுக்கொள்ளும். பெரிதாக ஒன்றையும் செய்துவிடாதுதானே!

இந்த வரலாற்றின் தொடர்ச்சியில் ஒரு கொண்டாடத்தக்க நிகழ்வு 2001இல் நடந்தேறியது.

நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் செம்மொழியாகக் கருதப்படாமல் இருந்த காலத்தில் ஜி. சுப்பிரமணிய ஐயர் சென்னைப் பல்கலைக்கழகத்தை நோக்கி வாதங்களை முன்வைத்துத் தமிழுக்காக 1902இல் வாதாடினார். சரியாக நூறு ஆண்டுகள் நிறைவுபெறும் காலத்தில் ஒரு மகத்தான செயல்பாடு சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழுக்காக அரங்கேறியது.

'தமிழ் ஒரு செம்மொழி' என்னும் தீர்மானம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றம், கல்வி மாமன்றம், பேரவை ஆகிய மூன்று அமைப்பிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மான வடிவம் மாநில அரசு, மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்கு முன்னதாக நடந்த முயற்சி இது.

வரலாற்றுப் பெருமைகொண்ட இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பொற்கோ. 170 ஆண்டுக் கால வரலாறு கொண்ட பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரான முதல் தமிழறிஞர்.

எத்தனை நடந்தும் எத்தனை கடந்தும் நாம் தமிழை வந்தடைந்திருக்கிறோம்' தமிழ் நம்மை வந்தடைந்திருக்கிறது!

ஆனாலும், தமிழிலேயே கல்வி, தமிழிலேயே ஆட்சி என்பன இன்னமும் கனவுகளாகத்தான் இருக்கின்றன!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.